என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas"

    • பொய் என தெரிந்தும் சிலவற்றை நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பத்திற்காக
    • டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார்.

    உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பர். பண்டிகை முடிந்தாலும், இனி வர இருப்பதாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்றாலே அதிகம் பேசப்படுபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. அதாவது சாண்டா கிலாஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா தாத்தா மான்பூட்டிய வண்டியில் வானத்தில் இருந்து இறங்கிவந்து நமக்கு பிடித்தவற்றை பரிசாக வழங்குவார் என்று நீண்டகாலம் பேசிவருகிறோம்.

    சிறுவயதாக இருக்கும்போது மட்டுமில்லை, பரிசு கிடைக்காவிட்டாலும் பெரியவர்களாக ஆனாலும் நாம் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஏன்? கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.

    அதாவது சுற்றி இருப்பவர்களே நம் தேவையை, ஆசையை உணராதபோது சாண்டா கிலாஸ் அதனை அறிந்து அதனை நிறைவேற்றும்போது ஒரு மகிழ்ச்சி. பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில், அந்தப் பொய் நன்மையை விளைவிப்பதாக இருந்தால் அதைக் கண்டு மகிழலாம் என வள்ளுவர் கூறுவது போல, சில கற்பனைகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. அதுபோலத்தான் இதுவும்.

    சரி கதைக்கு வருவோம். உண்மையில் சாண்டா கிலாஸ் இருக்கிறாரா? ஆம். இப்போது இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருந்தார். செயிண்ட் நிக்கோலஸ், இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறித்தவ ஆயர். நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர். மேலும் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ரகசியமாக பரிசுகளை வழங்கும் குணம் கொண்டவர். இவர் இறந்தபின் இவர்குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகொடுப்பது. 

    காலப்போக்கில், டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார். இப்போதும் அப்படியே தொடர்கிறார். ஆக சாண்டா கிளாஸ் இருந்தார். மேலே குறிப்பிட்டவாறு இப்போதும் இருக்கிறார். நம் தேவைகளை, நினைப்பவகளை பூர்த்தி செய்யும் அனைவரும் சாண்டா கிலாஸ்தான். பெண்களுக்கு அவரது தந்தை சாண்டா கிலாஸாக இருப்பதுபோல அனைவருக்கும் அவரவர்களது தாய் அல்லது அன்புக்குரியவர்கள் எப்போதும் சாண்டா கிலாஸ்தான். 

    அப்படி சாண்டா கிலாஸ் மாற்று உருவத்தில் இல்லையென்றாலும், நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நாமும் நமக்கான சாண்டாதான்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
    • ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தன.

    ராய்ப்பூர்:

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன.

    அப்போது, மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது.

    மாலில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    • டெல்லியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.
    • பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டதற்கு தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன.

    டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

    ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்தை சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடித்திருக்கிறான்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

    உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது.

    இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான்.

    இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    "எம்மதமும் நம்மதமே" என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

    • பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த தினம்.

    சென்னை:

    நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார். 



    • உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை என ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அத்துடன், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.

    இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

    நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.

    இந்தப் புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது.

    இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையைப் பின்பற்றி அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.

    • பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
    • இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மெட்ரோ ரெயில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடா்பாக மெட்ரோ ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

    மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும்.

    அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
    • சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

    சென்னை:

    ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில் முதல் ராட்சத குடில் வரை அமைக்கப்பட்டிருந்தது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து தேவாலயங்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் வாசித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, நாகை, கோவை போன்ற நகரங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

    தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர். அதன்பின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி அவர்கள் மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
    • சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.

    உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும் சகோதரர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சிறுபான்மை மக்களின் உண்மைத்தோழனாகவும் உரிமைக் காவலனாகவும் திமுக அரசு செயல்படுகிறது.

    சிறுபான்மை மக்களின் தேவைகளை தீர்த்துவைக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

    கிறிஸ்தவ சகோதரர்களின் உரிமை, வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி தரும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

    எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் என்றுமே இந்த ஆட்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
    • சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 கிலோ மைதா, 15 கிலோ பிரவுன் சுகர், 15 லிட்டர் தேன், ஜிஞ்சர் 1 கிலோ பட்டர், 10 லிட்டர் கீரிம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கடந்த 5 தினங்களாக 4500 ஜிஞ்சர் பிஸ்கட்கள் உருவாக்கப்பட்டது.

    3 நாட்கள் வேலைப்பாடுகளை கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகளை போன்று ஜிஞ்சர் பிரட் ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். அப்போது பனிப்பொழிவு வீட்டின் மீது படர்ந்து வெண்மையாக காணப்படும். அது போலவே ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் விடுதியில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தற்போது வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு வரை விடுதியின் நுழைவு வாயில் மற்றும் ரெஸ்டாரண்ட் வளாகத்திலேயே சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் கொடைக்கானலில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனிக்கு இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் இங்கு நிலவும் ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு மகிழ்கின்றனர். 

    • நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    • கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.
    • சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது.

    ஆலந்தூர்:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,100. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் கட்டணம் ரூ.13,400. சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173. ஆனால் பெங்களூரு வழியாக சுற்றி போவதால், ரூ.17,331 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.

    சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,248 பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.4,121.பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,842 கட்டணமாக உள்ளது. சென்னை-சேலம் வழக்கமான கட்டணம் ரூ.3,093. பெங்களூரு வழியாக சுற்றி செல்வதால் ரூ.8,688 கட்டணம் செலுத்தி செல்கிறார்கள்.

    சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. ஆனால் இன்றும், நாளையும் கூடுதல் கட்டணமாக ரூ.8,448 உள்ளது. தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம், பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×