என் மலர்
ஒடிசா
- காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
- இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது பெற்றோர், சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வெளியில் செல்வதாக இளம்பெண் கூறி சென்றார்.
அதன் பிறகு அவரை காணவில்லை. இளம்பெண்ணின் வீட்டினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் டிர்டோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மறுநாள் பாரதீப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்த நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் இறந்து கிடந்தது காணாமல் போன இளம்பெண் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து மர்ம சாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் இளம்பெண்ணின் அண்ணன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து ஜகத்சிங்பூர் எஸ்.பி. அங்கித் குமார் வர்மா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த சோம்நாத் ஓஜா என்ற வாலிபரை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஜகத்சிங்பூர் பாரதீப் பகுதியில் உள்ள சரளா கோவிலில் திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சம்பவத்தன்று அந்த பெண் காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஜகத்சிங்பூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்த இளம்பெண்ணை சோம்நாத் ஓஜா ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் அங்குள்ள ரஹ்மா பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு கூறிவிட்டு சோம்நாத் ஓஜா ஓடிவிட்டார். இந்த வேளையில் அந்த வழியாக ஜார்க்கண்டின் தன்பாத்தைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அவர் அந்த பெண்ணிடம் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நடந்த விவரத்தை கூறிய இளம்பெண்ணிடம் நானும் பாரதீப் பகுதிக்கு செல்கிறேன். அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி இளம்பெண்ணை லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.
செல்லும் வழியில் அந்த பெண்ணை சுபம் குமார் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பலவந்தமாக இளம்பெண்ணை வன்கொடுமை செய்தார்.
கதறி அழுத இளம்பெண் உடனே அங்கு உள்ளவர்களிடம் உதவி கேட்க முயன்றார். இந்த வேளையில் சுபம் குமார் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று கருதி திடீரென்று அந்த இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில் இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி காதலியை வன்கொடுமை செய்து தவிக்க விட்டு சென்ற சோம்நாத் ஓஜா, லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சுபம் குமார் ஆகிய 2 பேர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலன் சோம்நாத் ஓஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவுகள் 87, 75(2), 79, 69, மற்றும் 64(2)(எம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுபம் குமார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு நடந்த இந்த சோக சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
- அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
- போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே முரண்பட்டு நிலவுகிறது.
நாடு முழுவதும் நக்சலைட்டுகள் என்கவுன்டரும் சரணடைதலும் அண்மைக் காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சரணடைய முயன்ற மாவோயிஸ்ட் தலைவரை உடன் இருப்பவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்திலுள்ள பாகரி காப்புக்காடு பகுதியில், அன்வேஷ் (என்கிற ரேணு) என்பவரின் சிதைந்த உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.
கொல்லப்பட்ட அன்வேஷ், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கலகாண்டி-கந்தமால் நக்சல் பிரிவின் படைத் தளபதியாக இருந்தார். அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்வேஷ் மற்ற சில மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒடிசா போலீசாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்தார். இந்த முடிவை மாவோயிஸ்ட் தலைமை எதிர்த்ததால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாநில மண்டலக் குழு தலைவர் சுக்ரு, கூட்டாளிகள் சிலா மற்றும் ஜாகேஷ் உதவியுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
இதில் ஜாகேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம், போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மகாசிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.
- சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இது கொண்டாடப்படுகிறது.
பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமிக்கத்தக்க மணல் சிற்பங்களை உருவாக்குவது வழக்கம்.
இந்த ஆண்டும் (2026) அவர் தனது கலைத்திறமையால் சிவபெருமானின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை உருவாக்கி பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சிவபெருமானின் தியான நிலை மற்றும் லிங்க வடிவிலான சிற்பத்தை பல டன் மணலைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ளார்.
சிற்பத்தின் கீழ், ஹர ஹர மகாதேவ் என்றும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
- இது 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அக்னி-1 ஏவுகணை 700 கிமீ வரையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ வரையும் பாய்ந்து தாக்கக் கூடியது
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து இன்று (பிப்ரவரி 6) இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ராணுவம் இணைந்து இந்த சோதனையை நடத்தியது.
ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன எனவும் ஏவுகணை அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி-3 ஏவுகணை சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அக்னி-3 ஏவுகணையின் முந்தைய பதிப்புகளான, அக்னி-1 ஏவுகணை 700 கிமீ வரையும், அக்னி-2 ஏவுகணை 2,000 கிமீ வரையும் பாய்ந்து தாக்கக் கூடியது குறிப்பிடத்தக்கது.
- ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம் புரண்டது.
- இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவனேஷ்வர்:
சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி செல்லும் ஜல்பைகுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் இன்று காலை 8.51 மணிக்கு தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் ஒரு ஏசி பெட்டி, 2 பொது பெட்டி என மொத்தம் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன.
ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகபுரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்களுக்கும் பிறகு அப்பகுதியில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
திடீரென ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் பெறுவார்
- கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான மம்தா போடியாமி என்பவர் போலீசாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
மம்தா போடியாமி ஒரு எஸ்.எல்.ஆர் துப்பாக்கியுடன் சரணடைந்ததாகவும் தென்மேற்கு மண்டல டி.ஐ.ஜி கன்வர் விஷால் சிங் தெரிவித்தார். "அவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5.5 லட்சம் நிதி உதவியும், ஆயுதத்தை ஒப்படைப்பவருக்கு கூடுதலாக ரூ.1.65 லட்சமும் வழங்கப்படும் . மேலும், மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் அவர் பெறுவார்" என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் சரணடைந்த பிறகு, கோராபுட் இப்போது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது என்றும் விஷால் சிங் தெரிவித்தார். கோராபுட் மாவட்டத்திற்கு முன்னதாகவே, அண்டை மாவட்டங்களான மால்காங்கிரி மற்றும் நவரங்பூர் ஆகியவையும் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. குறிப்பாக 2009-ல் டாமன்ஜோடியில் நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது இது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
- ஒலியைவிட அதிவேகத்தில் நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும்
- DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நேற்று, செவ்வாய்க்கிழமை காலை 10:45 மணியளவில் SFDR தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவி இந்த சோதனை நடைபெற்றது.
ஏவுகணைகள், ஒலியைவிட அதிவேகத்தில் (சூப்பர்சோனிக்) நீண்ட தூரம் பயணித்து எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஆற்றலை இந்த SFDR தொழில்நுட்பம் வழங்குகிறது.
சோதனை வெற்றி பெற்ற நிலையில், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் வான்வழி Long-range Air-to-Air Missiles ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
இந்த வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகளுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் தற்காப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.
- சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.
அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.
பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
- முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.
இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.
- மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
- பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.
இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.
ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.
கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை.
ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.
எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
- என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
எனவே தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றார்.
தனது கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார்.
"என்னிடம் பணம் இல்லை. என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான். அதனால் தான் நான் ரிக்ஷாவிலேயே அவரை அழைத்துச் சென்றேன்." என்று அம்முதியவர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் கண்டனத்தை குவித்து வருகிறது. இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
- விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிச் சென்ற சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
ரூர்கேலாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது 'இந்தியாஒன் ஏர்' நிறுவனத்திற்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானமாகும்.
விபத்தின்போது விமானத்தில் 4 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிடப்பட்டுள்ளது.






