என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பு"
- வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளியை சேர்ந்தவர் மவுனிகா (வயது 27). இவர் நேற்று முன்தினம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்தார். ரூ 300 தரிசன டிக்கெட்டில் தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தார். தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்ததால் மோனிகா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது இருந்தது.
அப்போது திடீரென வந்த பாம்பு ஒன்று மவுனிகாவின் காலில் கடித்துவிட்டு சென்றது. பாம்பு கடித்ததால் மவுனிகா அலறி துடித்தார். இதனைக் கண்டு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தேவஸ்தான அதிகாரிகள் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து மவுனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அஸ்வினி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மவுனிகாவின் உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தரிசனத்திற்கு வரிசையில் சென்ற பெண் பக்தரை பாம்பு கடித்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
- தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை.
- பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பா மார்க்கெட் சாலையில் ஒரு செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் செல்போன்களுக்கு தேவையான ஸ்கிரீன் கார்டு உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர், தனது செல்போனுக்கு ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்கு சென்றார். அப்போது கடை ஊழியர் ஸ்கிரீன் கார்டுகள் வைக்கப்பட்டிருந்த மேசை டிராயரை திறந்தார். அப்போது உள்ளே ஒரு குட்டி விரியன் பாம்பு உயிருடன் கிடந்தது.
அந்த பாம்பு அங்கிருந்த ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி அசைய முடியாமல் கிடந்தது. இதனை பார்த்த கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து தளிப்பரம்பாவில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பாம்பு இருந்த செல்பேன் கடைக்கு வனத்துறையினர் வந்தனர். அவர்களுடன் பாம்பு பிடிப்பவர் ஒருவரும் வந்தார். அவர் செல்போன் ஸ்கிரீன் கார்டில் சிக்கியிருந்த குட்டி பாம்பை காயமடைந்து விடாமல் மீட்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் பாம்பின் உடல் நன்கு ஒட்டியிருந்ததால் அதிலிருந்து பாம்பை பிரித்து எடுக்க முடியவில்லை. இதையடுத்து அந்த பாம்பு, அது சிக்கியிருந்த செல்போன் ஸ்கிரீன் கார்டுடன் தளிப்பரம்பா வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து குட்டி பாம்பு மீட்கப்பட்டது. செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்து மிகவும் கவனமாக பிரிக்கப்பட்டதால், பாம்புக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினர், காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
செல்போன் ஸ்கிரீன் கார்டில் இருந்த பசையில் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி பாம்பை காப்பாற்ற வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார்.
- அந்த சமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனிதநேயத்துடன் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
திருச்சி:
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. வக்கீலான இவர் தின மும் திருச்சி கோர்ட்டுக்கு சென்று அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி தனது ஸ்கூட்டரில் கோர்ட்டுக்கு சென்றார். ஸ்கூட்டரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கட்டிடம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் காலை 11.30 மணி அளவில் அவரது ஜூனியர் வக்கீல் அலறி அடித்துக்கொண்டு கணபதியை பார்க்க ஓடோடி வந்தார்.
அவர் கணபதியிடம், உங்களது ஸ்கூட்டர் இருக்கை மீது ஒரு துண்டுச்சீட்டு உள்ளது. அந்த சீட்டில் 'இந்த வண்டியின் உள்ளே பாம்பு உள்ளது' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
அதோடு வாகனத்தின் பதிவு எண்ணும், தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் அந்த துண்டுச்சீட்டு பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு சிறிய கல்லையும் யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென்றுள்ளார் என்று கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணபதி பதறி அடித்துக்கொண்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். ஸ்கூட்டர் இருக்கை மீது இருந்த துண்டுச்சீட்டை பார்த்துவிட்டு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் கோர்ட்டுக்கு விரைந்து வந்து, ஸ்கூட்டருக்குள் சோதனையிட்டனர். ஆனால் அங்கு பாம்பு இல்லை.
இருப்பினும் வக்கீலின் வேண்டுகோளை ஏற்று. ஸ்கூட்டரின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி பார்த்தனர். அப்போது இண்டிகேட்டருக்கு பின்னால் சிறிய சாரைப்பாம்பு மறைந்து இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து பைக்குள் போட்டு, அங்கிருந்து கொண்டு சென்றனர்.
கோர்ட்டுக்கு வந்த யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததை கண்டுள்ளார். அந்த சமயம் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால், அந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மனிதநேயத்துடன் துண்டுச்சீட்டில் குறிப்பு எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த துண்டுச்சீட்டின் மூலம் வாகனத்துக்குள் புகுந்த பாம்பு சிக்கியது. இந்த சம்பவம் காரணமாக திருச்சி கோர்ட்டு வளாகத்தில் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
ஒடிசாவின் பாலசோரில், ஒருவர் ஒரு ராட்சத பாம்பை தன் கைகளால் மட்டுமல்லாமல், வாயாலும் கையாளும் திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தக் குறுகிய வீடியோவின் தொடக்கத்தில், ரெமுனாவை சேர்ந்த காகா பாய் என்ற அந்த நபர், ஒரு பாம்பை பிடித்து தன் வாயில் வைத்துக் கொள்கிறார். அவர் இதை மிக வேகமாக செய்கிறார், அதனால் அந்த பாம்பு எதுவும் செய்ய முடியாதவாறு தெரிகிறது.
அடுத்து, அவர் அந்த பாம்பை தன் வாயில் வைத்தபடியே சுற்றி திரிகிறார், பின்னர் அதை தரையில் வைத்து, வெறும் கைகளால் பிடித்து கொள்கிறார். ஒரு கட்டத்தில், யாரோ ஒருவர் அந்த பாம்பை அவரிடமிருந்து எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அவரை தள்ளிவிட்டு, விலகி நிற்குமாறு கூறுகிறார். ஒரு கூட்டம் இந்த துணிச்சலான செயலை அச்சத்துடன் காண்கிறது.
சில வினாடிகளுக்கு பிறகு, அவர் அந்த பாம்பைத் தரையில் மெதுவாக வைத்து, அதனுடன் விளையாடிவிட்டு, பின்னர் எந்த கருவிகளும் இல்லாமல் ஒரு சாக்குப்பையில் போடுகிறார். வீடியோவின் இறுதியில் அவர் மற்றொரு பாம்பை எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
முன்னதாக, ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் விஷம் கொண்ட கருநாக பாம்பால் கடிக்கப்பட்டார். உதவிக்காக ஓடுவதற்கு பதிலாக, அந்த நபர் தன்னைக் கடித்த உடனேயே அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துண்டித்தார்.
பின்னர் அவர் அந்த இறந்த பாம்பை வீட்டிற்கு எடுத்து சென்று, அதைத் தன் அருகில் வைத்துக்கொண்டு, அதனுடனேயே உறங்க சென்றதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். நள்ளிரவுக்குள் விஷம் அவரது உடல் முழுவதும் பரவி, அவரது நிலைமை மோசமடைந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
- வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
- குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.
குளிர் மற்றும் மழை காலங்களில் பாம்புகள் வெப்பம் தேடி வாகனங்களுக்குள் தஞ்சமடையும் சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு. இந்நிலையில் தமிழ்நாட்டின் நாமக்கல்-சேலம் சாலையில் கார் ஓட்டி சென்ற ஒருவர் காரின் கண்ணாடியில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதில், கார் டிரைவர் நெடுஞ்சாலையில் கார் ஓட்டி செல்கிறார். அப்போது காரின் பக்கவாட்டு கண்ணாடியில் ஏதோ அசைவு இருப்பதை கண்டார். அப்போது கண்ணாடியின் மறைவில் இருந்து ஒரு பாம்பு வெளியே வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காரை நிறுத்தி விட்டு அதில் இருந்து வெளியேறினார்.
பின்னர் அவ்வழியே சென்றவர்கள் வன விலங்கு மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர் அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டு கொண்டு சென்றனர். இதுகுறித்த காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வாகன உரிமையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ காட்டுவதாக பலரும் பதிவிட்டனர்.
- பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
- அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறை எடுத்து தங்கினர். 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.
அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு இருப்பதை பார்த்துவிட்டார்.
உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேச்சு கொடுப்பது வீடியோவில் கேட்கிறது. கருப்பு நிற நாகப்பாம்பான அது, மனிதர்களை கண்டு அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.
பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை மீட்டனர். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.
பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பலரும் அதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நகைச்சுவை கலந்த கருத்துக்களை பதிவிட்டனர்.
- எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார்.
- சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் தனது வீட்டுக்குள் நுழைந்த பாம்பை சிறுமி லாவகமாக அங்கிருந்து விரட்டினாள். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது வீட்டின் மூலையில் பாம்பு இருந்ததைக் கண்டாள்.
இதனை தனது தந்தையிடம் அவள் கூற, அவர் எவ்வாறு பாம்பை வெளியே விரட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வது போல துடைப்பானைக் கொண்டு அந்த பாம்பை சிறுமி வெளியில் விரட்டுகிறாள். அப்போது துளியும் பயமில்லாமல் அந்த சிறுமி பாம்பை விரட்டிய காட்சிகள் காண்போரை வியக்க வைத்துள்ளது. சிறுமியின் இந்த தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் கிராமம் வ.உ.சி நகரில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் கவுஷிக் (வயது 12) ராமநத்தம் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்ல வீட்டில் ஷூ அணிந்தார்.
அப்போது அதில் இருந்த சிறிய பாம்பு கடித்தது. இதில் மாணவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடி காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு ஆகும்.
- பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
பிரபல இந்தி நடிகர் சோனு சூட், தான் வசிக்கும் வீட்டு வளாகத்திற்குள் வந்த ஒரு பாம்பை வெறும் கைகளால் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்ட அவர், அது ஒரு ஜெர்ரிபோட்டு வகை பாம்பு என்றும், அது விஷத்தன்மை வாய்த்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாம்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்க நிபுணர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் தான் செய்ததை பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தார். சோனு சூட் தமிழில் நெஞ்சினிலே, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் புகுந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த வனத்துறை அதிகாரி ரோஷ்னி லாவமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ரோஷ்னி ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அவரது தைரியத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி ரோஷ்னி கடந்த 8 வருடங்களாக கிட்டத்தட்ட 800 பாம்புகளை பிடித்துள்ளார். ஆனாலும் 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்தது ரோஷ்னிக்கு இதுவே முதல்முறையாகும்.
- கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியின்போது கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்டதும் மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.
- மத்திய பிரதேசத்தில் விஷப்பாம்பு ஒன்று இளைஞரை கடித்துள்ளது.
- அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு உயிரிழந்து போனது.
போபால்:
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பிடம் இருக்கும் விஷமே அதற்கு காரணம். விஷமுள்ள பாம்பு மனிதன் ஒருவனை தீண்டினால் அவனது உயிர் போய்விடும். இதனாலேயே, பாம்பைக் கண்டால் அனைவரும் அலறி ஓடி விடுகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குட்சோடி கிராமத்தில் வசித்து வரும் சச்சின் நாக்பூரே (25), என்ற இளைஞர், தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு இறந்து போனது.
பாம்புக் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது அரிதிலும் அரிதான நிகழ்வு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனை கடித்து பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.






