என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ஓட்டல் கழிவறை கோப்பைக்குள் இருந்து சீறிய நாகப்பாம்பு
    X

    VIDEO: ஓட்டல் கழிவறை கோப்பைக்குள் இருந்து சீறிய நாகப்பாம்பு

    • பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
    • அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அறை எடுத்து தங்கினர். 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு இருப்பதை பார்த்துவிட்டார்.

    உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேச்சு கொடுப்பது வீடியோவில் கேட்கிறது. கருப்பு நிற நாகப்பாம்பான அது, மனிதர்களை கண்டு அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.

    பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை மீட்டனர். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை.

    பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. பலரும் அதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நகைச்சுவை கலந்த கருத்துக்களை பதிவிட்டனர்.



    Next Story
    ×