search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindutva Group"

    • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக  குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-

    ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.

    பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×