என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக 72 சுற்றுலா திட்டம் அறிவிப்பு- முக்கிய புனித தலங்களை தரிசிக்கலாம்
    X

    சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக 72 சுற்றுலா திட்டம் அறிவிப்பு- முக்கிய புனித தலங்களை தரிசிக்கலாம்

    • ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும்.
    • இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்காக, 72 ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    யாத்திரையின்போது வழியில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இந்தப் புதிய திட்டத்தை முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.

    சபரிமலை கோவில் நடை, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக நேற்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து, யாத்திரையின் முதல் கட்டமாக இந்த 72 சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் தொகுப்புகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்கீழ் 1,600 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வடக்கு மாவட்டங்களில் இருந்து தொடங்கும் பயணங்கள் பெரும்பாலும் இரண்டு நாள் சேவைகளாக இருக்கும். ஆலப்புழா, பத்தனம்திட்டா போன்ற சபரிமலைக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து தொடங்கும் பயணங்கள் ஒரு நாள் சேவையாக இருக்கும்.

    ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடா்புடைய, வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் வலிய கோய்க்கல் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோவில்கள் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. வட மாவட்ட பக்தா்களுக்கான திட்டங்களில் குருவாயூா் கோவிலும், தென் மாவட்ட பக்தா்களுக்கு கொட்டாரக் கரை கணபதி கோவிலும் இடம்பெறும்.

    இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். உதாரணமாக, திருச்சூா் போன்ற இடங்களில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.500 முதல் 700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும். இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    குழு முன்பதிவை ஊக்குவிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் முன்பதிவு செய்தால் குழுத் தலைவருக்கு 3 சதவீதமும், வார நாள்களில் முன்பதிவு செய்தால் 2.5 சதவீமும் கமிஷன் வழங்கப்படும்.

    இந்தத் திட்டங்களில் பயணம் செய்வோருக்கு, பம்பை கேஎஸ்ஆா்டிசி பணிமனையில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். சந்நிதானத்தில் பக்தா்களுக்கு நேரடியாக உதவ (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். கூடுதல் தகவல்களுக்கு, பத்தனம் திட்டா(91889 38524), செங்கனூா்(91889 38525) கே.எஸ்.ஆர்.டி.சி. சுற்றுலாப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    Next Story
    ×