என் மலர்
நீங்கள் தேடியது "சபரிமலை"
- மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
- சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கோவிலில் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். நாளை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
இதையடுத்து மறுநாள் 31-ந்தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். சீசனையொட்டி 19-ந்தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். 20-ந்தேதி காலை 6.30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்வார். அத்துடன் நடை அடைக்கப்பட்டு 2025-2026 மண்டல-மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலையில் நடப்பு மண்டல சீசனையொட்டி கடந்த 27-ந்தேதி வரை 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசன் முடிவடைந்தபோது 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து இருந்தனர். அதாவது கடந்த சீசனை விட இந்த ஆண்டு 4 லட்சத்து 11 ஆயிரத்து 502 பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
- கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் 30.56 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாகவும், 332.77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை ஆகிய புனித பிரசாதங்கள், ரூம் வாடகை, ஏலம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த வருவாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை விட இது குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாகும். கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை 80.25 கோடியாக இருந்தது.
இன்று மதியம் வரை 30,56,871 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் 37,521 பேர் வந்துள்ளனர். மண்டல பூஜையான இன்று மதியம் 1 மணி வரை 17,818 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் மண்டல பூஜை வரை 32,49,756 பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
நேற்று சுவாமி ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெற்று, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.
- ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது.
- சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆலந்தூர்:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் செல்கிறார்கள்.
ரெயில் மற்றும் சாலை மார்க்கமாக பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது கூடுதல் நேரம் ஆகிறது. இதையடுத்து சமீப காலமாக ஐயப்ப பக்தர்கள் விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனங்களில் சபரிமலை செல்கின்றனர்.
இதனால் இந்திய விமான நிலைய ஆணையம் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம் என்று விதிவிலக்கு அளித்துள்ளது. ஐயப்ப பக்தர்களுக்காக, கொடுக்கப்பட்டுள்ள, இந்த சிறப்பு சலுகை, வருகின்ற 2026 ஜனவரி 20-ந் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் பலர், சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவு பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை-கொச்சி-சென்னை இடையே, இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் பெருமளவு செல்வதால் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து, கொச்சி செல்லும் பயணிகள் விமானங்களில், விமான டிக்கெட் கட்டணங்கள் 3 மடங்குக்கு மேல், அதிகரித்து உள்ளன.
சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை கொச்சி விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கட்டணம் 3 மடங்குக்கு மேல் அதி கரித்து, ரூ.10,500 தொடங்கி, ரூ11,500 வரையில் வசூலிக்கப்படுகிறது.
அதிலும் சென்னை-கொச்சி நேரடி விமானத்திற்கு மட்டுமே இந்த கட்டணங்கள். அந்த நேரடி விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல், சென்னையில் இருந்து, பெங்களூரு வழியாக கொச்சி சென்றால், டிக்கெட் கட்டணம் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
சபரிமலை சீசன் நேரங்களில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சென்னை-கொச்சி இடையே, சபரிமலை சீசன் காலங்களில் தினமும் 9 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே 9 விமானங்கள் என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு, சென்னை-கொச்சி இடையே 7 விமானங்களும், கொச்சி-சென்னை இடையே, 7 விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
4 விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் குறிப்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்கள், கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வசதி கருதி, சபரிமலை சீசன் முடியும் வரையில், சென்னையில் இருந்து கொச்சிக்கு, கூடுதல் விமான சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
- அமலாக்கத்துறைக்கு விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பேசப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் அபகரிக்கப்பட்டது.
இதற்கு அப்போதைய அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
முதலில் 4 கிலோ தங்கம் வரை அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர்தான், இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டவர். அதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளும் உடந்தையாக இருந்த தகவலும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இது ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடியை தந்தது.
பின்னர் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்குழு கையிலெடுத்தது. முதற்கட்டமாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்த 10 பேரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கையை தொடர்ந்தனர். அந்தவகையில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, பத்மகுமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பத்மகுமார் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிலரிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழுவினர் தயாராக இருந்தனர்.
அதில், 2017-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் செயலாளராக பணியாற்றிய ஜெயஸ்ரீயும் ஒருவர். இதனை தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு அவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பிறகு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 2017-ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான செயலாளராக பொறுப்பேற்றதாகவும், இந்த காலக்கட்டத்தில் சபரிமலை தொடர்பான எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை என்றும் கூறியிருந்தார். எனவே தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயஸ்ரீயை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதே சமயத்தில் சிறப்பு விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அப்போது, தங்கம் அபகரிப்பு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாகவும் சிறப்பு விசாரணைக்குழுவினர் முதல் தகவல் அறிக்கையாக தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை, இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுக்க முடிவெடுத்தது. அதன்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சிறப்பு விசாரணைக்குழு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலையில் தங்கம் அபகரிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு மாற்றி கொல்லம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஆளும்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த விசாரணை செல்வதால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மேலும் சிக்குவார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் பங்கஜ் பண்டாரி மற்றும் நகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
- ஐயப்ப பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்வது வழக்கம்
- இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை. வழிபாடுகள் நடந்து வருகிறது.
சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் சென்று திரும்பும்போது பாம்பன் பாலத்தில் வாகனத்தை நிறுத்தி துணியை கடலில் வீசுவது திடீர் வாடிக்கை ஆகியுள்ளது. இந்த வழக்கம் திடீரென்று எப்படித் தொடங்கியது எனத் தெரியவில்லை
பாம்பன் பாலத்தில் இருந்தபடி ஐயப்ப பக்தர்கள் துணிகளை கடலில் வீசுவதால் கடல் வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
- கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது. உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் “ஸ்பாட் புக்கிங்” எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக கூட்ட நெரிசல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு உடனடியாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 70 பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவின் பேரில், கூட்ட நெரிசலுக்கு தகுந்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" எண்ணிக்கை அதிகரிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் தற்போது பக்தர்களின் வருகை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் தினமும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மதியம் ஒரு மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கும் கோவில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் கூடுதலாக 3,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கூடுதலாக 45 நிமிடங்கள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
- இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
- தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. முதலில் தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் உடனடி முன்பதிவு மூலமாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க, உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை, பம்பை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டபடியே இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரினத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் படி நெரிசல் எதுவும் இல்லாத நேரத்தில் உடனடி முன்பதிவு பக்தர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் எதுவும்இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்துக்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களின் பயணத்தை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.
அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போன்று வரக்கூடிய பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இருக்கக்கூடிய பக்தர்களில் பலர், வெளி மாநில பக்தர்கள் ஆவர்.
அவர்கள் வரக்கூடிய ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு 16,989 பக்தர்களே மலையேறிச் சென்றனர்.
இதன் காரணமாக சன்னிதானம் அருகே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு உள்ள நடைப்பந்தலில் இரண்டு வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். இதனால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் வேகமாக ஏறிச் செல்லாமல், பொறுமையாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
- ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரெயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப் பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரெயில் நிலைய வளாகத்தின் எந்த பகுதியிலும் கற்பூரம், மெழுகுவர்த்தி, விளக்குகள் ஆகியவற்றை ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் மீது ரெயில்வே சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில், ரெயில் மூலம் சபரிமலை செல்லும் பக்தர்கள் ரெயில்களுக்குள்ளோ அல்லது ரெயில் நிலைய வளாகத்திற்குள்ளோ கற்பூரம் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரெயில்வே சொத்துகளைப் பாதுகாப்பதற்கே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டிகளுக்குள் கற்பூரம் ஏற்றுவது தீ விபத்தை ஏற்படுத்தும். ஒரு சிறிய தீப்பொறிக்கூட அபாயகரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து, சபரிமலை செல்லும் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் சென்னை கோட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலைய வளாகங்களிலும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. தடையை மீறி கற்பூரம் ஏற்றுவதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை குழுக்கள் ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலைய வளாகங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
- சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவர் நேற்று காலையில் சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
சபரிமலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு சராசரியாக 85 பக்தர்கள் வீதம் ஏற்றி விடப்படுகிறார்கள்.
தற்போது உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
சீசனையொட்டி 18 ஆயிரம் போலீசார் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தேவையான நேரங்களில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநில போலீசாரும் சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்படும்' என்றார்.






