என் மலர்tooltip icon

    இந்தியா

    மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கடும் கூட்டம்
    X

    மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருப்பதால் சபரிமலையில் கடும் கூட்டம்

    • நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

    மகரவிளக்கு பூஜை காலத்துக்கான சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவு அனைத்து நாட்களுக்கும் முடிந்துவிட்டதால், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மாலையணிந்து விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

    அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் போலீசாரும், கேரள தேவசம்போர்டும் இருப்பதால் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலையும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.

    அதிகாலை 3மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்தே, பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் மட்டுமின்றி, மலைப்பாதையான அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம், சரங்குத்தி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான 3 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 978 பக்தர்கள் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அவர்களில் ஸ்பாட் புக்கிங் மூலமாக 2,122 பக்தர்கள் வந்துள்ளனர்.

    நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்தபடியே இருந்ததால் பம்பையிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பை கணபதி கோவிலை தாண்டி செல்வதற்கே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    அதன்பிறகு மலைப் பாதைகளில் ஏறி சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தபடி இருக்கின்றனர்.

    Next Story
    ×