search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை கோவில்"

    • சபரிமலை கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

    நாளை (17-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

    மேலும் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பக்தர்கள் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
    • ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

    அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.

    • மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும்.
    • கோவில் வளாகத்தில் அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த இளம்பெண் சூர்யா சுரேந்திரன் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் மரணம் அடைந்தார்.

    அதாவது நர்சு பணிக்காக இங்கிலாந்து செல்ல நெடும்பாசேரி விமான நிலையம் வந்தடைந்த நேரத்தில் அவர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவை உலுக்கி இருந்தது. இதை தொடர்ந்து அரளி செடியின் தழைகளை தின்ற பசுவும், கன்றும் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் அரளி இலை மற்றும் பூ விஷத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நந்தன்கோடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பூஜைகள், வழிபாடுகள், நிவேத்தியங்களில் இனி அரளிப்பூவை பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும்.

    இதற்காக கோவில் வளாகத்தில் அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் தேவஸ்தான கோவில்களில் பூந்தோட்டம் அமைக்கும் பொறுப்பு தேவஸ்தானத்தின் உதவி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    • தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

    திருவனந்தபுரம்:

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை நடை பெறுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம்.
    • முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் மிக முக்கியமான வழிபாடாகும். சபரிமலை வரும் பெரும்பாலான பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யாமல் திரும்புவதில்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண் டும். பக்தர்கள் செலுத்தும் நெய், அபிஷேகத்திற்கு பிறகு தனி கவுண்டர் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

    நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கவுண்டரில் பூசாரிகள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது திருமூழிக்குளம் கோவிலைச் சேர்ந்த பூசாரி மனோஜ் என்பவர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பம்பை போலீசில் மனோஜ் ஓப்படைக்கப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் வந்தனர்.

    கூட்டத்தை நிர்வகிப்பதில் சரியான நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் பல நாட்கள் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாதாந்திர பூஜை காலத்திலும் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனின்போது பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் பண நோட்டுகள் எண்ணும் பணி ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. அதில் ரூ.357.47 கோடி பண நோட்டுகள் கிடைத்தன. இந்தநிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் நாணயங்களை எண்ணும் பணி தற்போது நடைபெற்றது.

    சபரிமலையில் உள்ள உண்டியல்களில் இருந்த நாணயங்கள் அனைத்தும் மொத்தமாக சேகரிக்கப்பட்டு, மாளிகைபுரம் கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. கடந்த 5-ந்தேதி தொடங்கிய இந்த பணி நேற்று முடிவடைந்தது.

    அதில் ரூ.11.65 கோடி நாணயங்கள் இருந்தன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் போன்ற நாடுகளின் நாணயங்களும் சபரிமலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையில் இருக்கின்றன. அவற்றை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை எண்ணுவதற்கு 2017-ம் ஆண்டு வரை எந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த எந்திரம் பழுதானதால், அதன்பிறகு தேவசம்போர்டு ஊழியர்களால் நேரடியாக எண்ணும் முறை பின்பற்றப்படுகிறது.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணி நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாணயங்கள் எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயண செலவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். நாணயங்கள் எண்ணும் பணியில் தேவசம் போர்டு ஊழியர்கள் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்களுக்கான உணவு செலவு, போக்குவரத்து செலவு, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்த்து நாணயங்கள் எண்ணுவதற்கான செலவே ரூ.1 கோடிக்கு மேல் வரும் என்று கூறப்படுகிறது. இதனால் நாணயங்கள் எண்ணுவதற்கான எந்திரங்களை பழுது நீக்கி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    • அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும்.
    • காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10.35 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும். அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 கிடைத்துள்ளது.

    கோவிலில் நேற்று வரை 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். மேலும் காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    நாளை (21-ந் தேதி) காலையில் பந்தளம் அரச குடும்ப உறுப்பினரின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 7 மணிக்கு அடைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
    • மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    41 நாட்கள் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த கால கட்டத்திலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு படிபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (20-ந்தேதி)யுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கடைசி நாள் நெய்யபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அத்தாள பூஜை நடக்கிறது. அதன்பிறகு மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்பசாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று விட்டு மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

    மறுநாள் (21-ந்தேதி) காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு திருவாபரண ஊர்வலம் பந்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர்.
    • கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் ஏராளமானோர் வந்ததால் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட நேர்ந்தது.

    மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்ட பிறகே கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது. தற்போது மகரவிளக்கு பூஜை முடிவுக்கு வந்த நிலையில், தை மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததாக கூறப்பட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைவு என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை 16 லட்சம் குறைந்துள்ளது.

    அதேபோன்று வருவாயும் கடந்த ஆண்டை விட குறைவாகவே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மண்டல சீசனில் ரூ.241 கோடியே வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் வருவாய் ரூ.300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.
    • கோவிலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள். 

    அதன்படி, 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.

    அந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது, அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு வசதிகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வயதானவர்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மகரவிளக்கு பூஜை தினத்தில் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம் போர்டு எடுத்தது.

    அதன்படி நேற்று முன்தினம் (10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருகின்றனர். இதனால் பக்தர்கள் வருகை குறைந்தது. இதன் காரணமாக கடந்த நாட்களில் இருந்ததைப்போன்று கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 15-ந்தேதி வரை உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு 16-ந்தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20-ந்தேதி வரை தினமும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சன்னிதானத்துக்கு செல்வதற்காக 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நிலக்கல், பம்பை மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில் உடனடி சாமி தரிசனத்துக்கான முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து நாளை (13-ந்தேதி) புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மகரஜோதி தரிசனத்தை காண சபரிமலையில் பாண்டித்தாவளம், குடிநீர் தொட்டியின் முன்பகுதி, பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன்பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் வடக்கு பக்கம், கொப்பரைக்களம், சன்னிதானத்தின் திருமுற்றம், மாளிகைப்புரம் கோவிலின் சுற்றுப்பகுதிகள், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபத்தின் முன்பகுதி உள்பட 10 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த இடங்களில் இருந்து பக்தர்கள் மகர ஜோதி தரிசனம் செய்யலாம். மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

    மேலும் தேவசம்போர்டு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

    • சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை:

    சபரிமலையில் தினமும் தற்போது 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    மும்பையில் இருந்து சர்க்கரை வரத்து தாமதமானதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் அரவணை தட்டுப்பாடு ஏற்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தற்போது சர்க்கரை வரத்து சீரானதை தொடர்ந்து அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அய்யப்ப பக்தர்களுக்கு அரவணை பிரசாத வினியோகம் சீராக நடைபெற்று வருவதாக சபரிமலை செயல் அதிகாரி கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

    ×