என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை - ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்
    X

    சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை - ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பன்

    • இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.
    • மகர ஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடந்தது.

    இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருவாபரணம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும். அவற்றை தந்திரி மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டு ஐயப்பனுக்கு அணிவித்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்துவார்கள்.

    அப்போது பொன்னம்பலமேட்டில் சாமி ஐயப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். தொடர்ந்து புஷ்பாபிஷேக வழிபாடுகள் நடைபெறும்.

    மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் நாலா திசைகளிலும் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கி ஓய்வெடுத்து வருகிறார்கள். குறிப்பாக பெரியானை வட்டம் பாண்டித்தாவளம், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் ஏராளமான பக்தர்கள் முகாமிட்டு உள்ளனர். அவ்வாறு தங்கியுள்ள பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏராளமான தன்னார்வ தொண்டர்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்து உள்ளது. பாதுகாப்பு பணிக்கு பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மகர ஜோதியை காண சபரிமலையை சுற்றி 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    ஜோதி தரிசனம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,000 சிறப்பு பஸ்கள் தயார் நிலையில் உள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தான தலைவர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'மகரவிளக்கை முன்னிட்டு அனைத்து முன் ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மகரஜோதியை காண சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள பக்தர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மகர ஜோதியை காண 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடாரம் அமைத்து ஓய்வெடுத்து வருகிறார்கள். மகரவிளக்கையொட்டி இதுவரை 12 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்' என்றார்.

    Next Story
    ×