என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகர ஜோதி வடிவாக காட்சி தரும் ஐயப்பன்
    X

    மகர ஜோதி வடிவாக காட்சி தரும் ஐயப்பன்

    • அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர்.
    • குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான்.

    கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்ற ஆலயம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

    அந்த வகையில், சபரிமலையில் தவக்கோலத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். கேரள முறைப்படி, மகர ராசியில் சூரியன் வரும் மாதம், 'மகர மாதம்' எனப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளான மகர சங்கராந்தி அன்று, சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் கிடைப்பது வழக்கம். இந்த மகர ஜோதி தரிசனத்துக்கு ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

    மகிஷாசுரனின் சகோதரியான மகிஷி என்ற அரக்கி, தன் சகோதரன் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க நினைத்தாள். இதனால் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய பிரம்மரிடம், ''சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் புத்திரனால் மட்டுமே எனக்கு மரணம் ஏற்பட வேண்டும்'' எனும் வரத்தை கேட்டாள். அதன்படி வரத்தை பெற்ற மகிஷி, தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்தாள்.

    அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது அமிர்தத்தை எடுத்து சென்ற அசுரர்களிடம் இருந்து அமிர்தத்தை மீட்க விஷ்ணு பகவான், மோகினியாக அவதாரம் எடுத்தார். மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும், சிவனுக்கு ஹரிஹர அம்சமாக அவதரித்தவரே, ஐயப்பன்.

    அதே வேளையில், பந்தள மன்னன் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் மிகவும் வருந்தினான். அவன் குழந்தை பாக்கியம் வேண்டி தினமும் சிவனிடம் மனம் உருகி வேண்டி வந்தான். சிவனும், விஷ்ணுவும் குழந்தை ஐயப்பனை காட்டில் ஒரு மரத்திற்கு அடியில் விட்டுச்சென்றனர். அந்த சமயம் காட்டில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன், ஒரு குழந்தை இருப்பதை கண்டான்.

    அப்போது அங்கு வந்த ஒரு முனிவர், ''மன்னா, உங்களுடைய குழந்தையில்லாக் குறையை போக்கவே இவன் அவதரித்திருக்கிறான். எனவே, இவனை எடுத்து வளர்ப்பாயாக. பன்னிரெண்டு வயது வரும்போது இவன் யார் என்பதை அறிவாய்'' என்று கூறினார். அந்த குழந்தையின் கழுத்தில் துளசி மாலையுடன் மணியும் இருந்தது. எனவே அந்த குழந்தைக்கு 'மணிகண்டன்' என்று பெயரிட்ட மன்னன், குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச்சென்று ராணியிடம் கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராணி, அந்த குழந்தையை மிகவும் பாசத்தோடு வளர்த்தாள். சிறுவயதிலேயே மணிகண்டன் பல அற்புதங்களை செய்தார்.

    குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், வேதங்கள், ஆயகலைகள் என அனைத்து கலைகளையும் கற்று தேர்ச்சி பெற்றான். குருவின் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான். இந்நிலையில் ராணிக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அதற்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கு மகன் பிறந்தாலும், மணிகண்டனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று மன்னன் விருப்பம் கொண்டார். ஆனால் இதை விரும்பாத மந்திரி ஒருவர், ராணியின் மனதை மாற்றி, மணிகண்டனை விரட்ட முடிவு செய்தான்.

    அதன்படி சதித்திட்டம் ஒன்றை தீட்டினான் மந்திரி. ராணியும் அதற்கேற்றார் போல் தீராத தலைவலி வந்தது போல நடித்தாள். ராணியின் தலைவலி தீர வேண்டுமானால் புலிப் பால் கொண்டு வரவேண்டும் என்று மருத்துவர்களை சொல்ல வைத்தான் மந்திரி. புலிப் பாலை கொண்டுவர முடியுமா? என அரசவையில் அனைவரும் திகைத்தனர். ஆனால், இது தனக்கு எதிரான சதித்திட்டம் என்பதை அறிந்தும், மணிகண்டன் ''நான் காட்டுக்குள் சென்று புலிப் பாலை கொண்டு வருகிறேன்'' எனப் புறப்பட்டான். காட்டுக்குள் சென்றால் நிச்சயம் திரும்பி வரமாட்டான் என்று மந்திரி பூரிப்புக்கொண்டான்.

    புலிப் பால் வேண்டி காட்டிற்கு சென்ற மணிகண்டன், அங்கு மனிதர்களை துன்புறுத்தி வந்த மகிஷி அரக்கியை அம்பு எய்து வீழ்த்தினான். தன்னை வீழ்த்தியது கண்டிப்பாக சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த ஒருவராகதான் இருக்கும் என்பதை உணர்ந்த மகிஷி, மறு உருவம் பெற்று எழுந்தாள். பின்பு, மணிகண்டனை வணங்கி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டினாள். ஆனால் மணிகண்டன், இந்த அவதாரத்தில் தான் பிரம்மச்சாரியாக வாழப்போவதாகவும், எனவே தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே 'மஞ்சமாதா' என்று அழைக்கப்படுகிறாள்.

    இதையடுத்து, ஒரு புலியின் மீது அமர்ந்தபடி பந்தள நாட்டு அரண்மனைக்கு திரும்பினார் ஐயப்பன். இதைப் பார்த்து வியந்த அனைவரும் பயபக்தியில் வணங்கி நின்றனர். மன்னன், ஐயப்பன் தெய்வ பிறவி என்பதை உணர்ந்தான். ஐயப்பன், தான் சபரிமலையில் ஒரு அம்பை எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் விழுகிறதோ அங்கே ஒரு கோவில் கட்டும்படியும் அருளினார்.

    அதன்படி பந்தள நாட்டு மன்னன், சபரிமலையில் ஐயப்பன் கோவிலை கட்டினான். மகரசங்கராந்தி நாளில், பரசுராமர் உதவியுடன் கோவில் திறக்கப்பட்டது. மகரசங்கராந்தி நாளில், விரதம் இருந்து இருமுடி கட்டி தன்னை காண வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் ஜோதி வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    ஐயப்ப சுவாமி பந்தள அரண்மனையில் வளர்ந்தவர். இருப்பினும், அதன்பின்னர் சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்தவர். இதனால் ஆண்டுதோறும் ஐயப்பனை காண வரும்போது பந்தள மன்னன், பந்தளத்தில் இருந்து ஆபரணங்களை எடுத்து செல்வார். பின்பு, அதை ஐயப்பனுக்கு அணிவித்து வழிபட்டு மகிழ்வதாக கூறப்படுகிறது.

    இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மகர ஜோதி தினத்தில், பந்தளத்தில் இருந்து ஆபரணங்கள் கொண்டு வந்து சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பார்கள். அதன்பின்பு, அன்றைய தினத்தில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். பொதுவாக, தை மாதம் முதல் நாள் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்கழி மாதம் 30-ம் நாள் (14-1-2026) மாலை 6.30 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனத்தை பெறலாம்.

    மகர ஜோதி தரிசனத்துக்காக, சபரிமலையில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருவார்கள். கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள். ஜோதி தரிசனத்தை காணும்போது, 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்று பக்தர்கள் எழுப்பும் முழக்கம் விண்ணை தொடும் அளவு எதிரொலிக்கும். பக்தர்கள் மகர ஜோதி தரிசனத்தை பக்தி பரவசத்துடன் கண்டு களிக்கும் காட்சியை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    Next Story
    ×