என் மலர்
வழிபாடு

லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. சபரிமலையில் ஜோடி வடிவில் காட்சியளித்த அய்யப்பன்- மகர ஜோதி மகா தரிசனம்
- அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.
- 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகாலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கி டிசம்பர் 27-ந்தேதி வரை நடந்தது.
அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜை வைபவம் கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (14-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டது.பின்பு பிற்பகல் 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகமும் நடை பெறுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் இன்று மதியம் பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து மாலையில் சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் கொண்டு செல்லப்பட்டன.
மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியை அடையும் திருவாபரணங்கள், சன்னிதானத்திற்கு 6.15 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அதனை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, சபரிமலை மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.
பின்பு அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மாலை 6:30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை லட்சக் கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தார்கள்.
பம்பை ஹில் டாப், சன்னிதான திருமுற்றம், மாளிகப்புரம் கோவில், அன்னதான மண்டபம், பாண்டித்தாவளம், டோனர் இல்ல முற்றம், ஓட்டல் வணிக வளாக பின்புற மைதானம், தரிசன வணிக வளாக பகுதிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பின் பகுதி, தேங்காய் சேகரிக்கும் பகுதி, கற்பூர ஆழியின் சுற்றுப்பகுதி, ஜோதி நகர், வனத்துறை அலுவலக பகுதிகள், நீர்வளத்துறை அலுவலக பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மகரஜோதியை பக்தர்கள் தரிசித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சன்னிதானத்துக்கு திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் காலை 11 மணி முதல் பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல அனும திக்கப்படவில்லை. முன் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட பிறகே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அய்யப்பன் வருகிற 17-ந்தேதி வரை திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 19-ந்தேதி இரவு மகரவிளக்கு பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்படுகிறது.






