என் மலர்
நீங்கள் தேடியது "கார்த்திகை"
- குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
- முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று இரவு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மன் மாட வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.15 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடக்கிறது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெறும்.
இதற்கிடையில் 7-ம் நாள் விழாவான 30-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 3-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபத்தில் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னர் அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெறும்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பகலில் அவ்வப்போது மிதமான மழை விட்டு, விட்டு பெய்தது. மேலும் சில சமயங்களில் வெயிலும் காணப்பட்டது. பக்தர்கள் எந்த சிரமமுமின்றி வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் பொது தரிசனம் வழியில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர். கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.
- மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது நரசிம்ம அவதாரமாகும்.
- மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..
ஏனென்றால், நரசிம்மரிடம் நாளை என்பதே கிடையாது. எதுவாயினும் உடனடியாக அந்த நொடியிலேயே தீர்த்து வைப்பவராக இருப்பதால்தான், நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்..
அப்படிப்பட்ட சக்திவாய்ந்த சோளிங்க நரசிம்ம பெருமான் கார்த்திகையில் கண் திறப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்..!
உலகை ஆளும் தெய்வசக்தியின் ஒன்றே மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிற நரசிம்ம அவதாரமாகும்.
சிறுவனாகிய பக்தன் பிரகலாதன், எந்த நேரம், எங்கே இருப்பதாக தன்னை கூறுவானோ என்று கருதி, அவனருகிலேயே நரசிம்மர் உடனிருந்ததாக கூறுவர்.
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனது ஹரி என்று பிரகலாதன் கூறுகையில், எந்த இடத்தை கை காட்டுவானோ என்று நரசிம்மர் தயாராக இருந்தாராம்.
அதையடுத்தே கண நேரத்தில் வெளிப்பட்ட நரசிம்மர், இரணியனை வதம் செய் என பிரகலாதனுக்கு அருள்புரிந்தார். இந்நிலையில், பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
அதற்காக, சப்த ரிஷிகள் செய்த கடும் தவத்தை கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக ஒரு நாழிகைக்குள் காட்சியளித்தார்.
சப்த ரிஷிகள் தங்களுக்கு கிடைத்த நரசிம்மரின் தரிசனம், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நரசிம்மரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சப்த ரிஷிகள் வேண்டியதன்பேரில், அவர்களுக்கு காட்சியளித்தது போன்றே பொதுமக்களுக்கும் தரிசனமளிப்பதாக நரசிம்மர் தெரிவித்தார்.
ஆண்டு முழுவதும் கண் மூடி தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரிவதாக கூறினார்.
அதன்படி, கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமாள் கண் திறந்து தரிசனம் தருகிறார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சோளிங்கருக்கு வருகை தந்து நரசிம்மரை தரிசித்து செல்கின்றனர்.
- சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின.
- சபரிமலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டார்கள்.

இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
- சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது.
- கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். அதற்கு ஏழாம் ராசியான ரிஷபத்தில் சந்திரன் உச்சநிலையில் இருப்பார்.சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் சந்திக்கும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளே திருக்கார்த்திகை யாகும்.சிவன் ஜோதி மயமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்ற நாள். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தெறித்து விழுந்த 6 தீப்பொறிகளே கந்தனாகும்.
சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறியும் ஆறு ஆண் குழந்தையாக மாறியது.
அந்த ஆறு ஆண் குழந்தையும் கிருத்திகைகள் என்று அழைக்கப்பட்ட பெண்களால் வளர்க்கப்பட்டனர். அவரே முருகப்பெருமான் ஆவார்.
சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி என்பது நெருப்பை குறிப்பது. எனவேதான் திருக்கார்த்திகை அன்று அனைத்து வீடுகளிலும் வழிபாட்டு ஸ்தலங்களிலும் அகல் விளக்கு ஏற்றும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஏனெனில் விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும், தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் வாசம் செய்வதாக ஐதீகம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபடுவது மேலும் சிறப்பை தரும்.
- பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார்.
- மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.
மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான். முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.
மகிஷியை அழிப்பதற்காக ஐயப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர்களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.
பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.
மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.
குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.
இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.
மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான். புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான். காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பெற்று எழுந்தாள்.
ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய அய்யப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள். அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு ஐயப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள். 12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.
சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.
அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப்பட்டது.
இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.
- சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடந்தது
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. குமரி மாவட்டத்தி லேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெரு மானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்க புரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயி னார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்திகை மாத சோமவார பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-
மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
- சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீகருணாம்பிகை அம்மன்- அவினாசியப்பர்சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அவினாசியிலுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், அவினாசி ரங்கா நகரிலுள்ளவனபத்திரகாளியம்மன்கோவில், நடுவச்சேரி சிவளபுரியம்மன் கோவில், ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.
- இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:- வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.
இதனை முன்னிட்டு எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. நமது திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும் சுமார் 5 டன் காய்கறிகள் -30 இலட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது.
மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு அங்குள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தன்னார்வமாக கலந்துகொண்டு, அன்னதானப்பணிகளில் சேவையாற்ற, இந்தாண்டும் சேவார்த்திகள் வேண்டப்படுகிறார்கள். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்புவோர், திருப்பணிக்குழுவின் இணைச்செயலாளர் முருகேசன் , பொருளாளர் மோகன சுந்தரம் ஆகியோர்களை 94434 79279, 93616 26363 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
- பரம்பரை அறங்காவலரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகமும் வழிபாடு களும் நடந்தது.
பரம்பரை அறங்காவ லரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து 51 குடங்களில் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படட்டது.
இந்த ஊர்வலத்தை எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்துக்கு மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் காளியப்பன், மாநில இந்து முன்னணி பேச்சாளர் வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கன்னியா குமரி விவேகா னந்தர் பாறையிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அந்த பாறையில் பகவதி அம்ம னின் ஒற்றை கால் பாதம் இயற்கை யாகவே பதிந்துள்ள தாக கருதப்படு வதால் ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல்போற்றிமற்றும் கீழ் சாந்தி ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதையொட்டி ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துஉள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தா கேந்திர நிர்வாக செயலாளர் ராதா கிருஷ்ணன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்ம நாபன், விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் பூம்புகார் கப்பல்போக்கு வரத்து கழக துணை மேலாளர் பழனி, கடல் சார் வாரிய துறைமுக உதவி பாதுகாப்பாளர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
- தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோவிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.






