என் மலர்
நீங்கள் தேடியது "சோளிங்கர் நரசிம்மர்"
- மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது நரசிம்ம அவதாரமாகும்.
- மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..
ஏனென்றால், நரசிம்மரிடம் நாளை என்பதே கிடையாது. எதுவாயினும் உடனடியாக அந்த நொடியிலேயே தீர்த்து வைப்பவராக இருப்பதால்தான், நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்..
அப்படிப்பட்ட சக்திவாய்ந்த சோளிங்க நரசிம்ம பெருமான் கார்த்திகையில் கண் திறப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்..!
உலகை ஆளும் தெய்வசக்தியின் ஒன்றே மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிற நரசிம்ம அவதாரமாகும்.
சிறுவனாகிய பக்தன் பிரகலாதன், எந்த நேரம், எங்கே இருப்பதாக தன்னை கூறுவானோ என்று கருதி, அவனருகிலேயே நரசிம்மர் உடனிருந்ததாக கூறுவர்.
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனது ஹரி என்று பிரகலாதன் கூறுகையில், எந்த இடத்தை கை காட்டுவானோ என்று நரசிம்மர் தயாராக இருந்தாராம்.
அதையடுத்தே கண நேரத்தில் வெளிப்பட்ட நரசிம்மர், இரணியனை வதம் செய் என பிரகலாதனுக்கு அருள்புரிந்தார். இந்நிலையில், பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.
அதற்காக, சப்த ரிஷிகள் செய்த கடும் தவத்தை கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக ஒரு நாழிகைக்குள் காட்சியளித்தார்.
சப்த ரிஷிகள் தங்களுக்கு கிடைத்த நரசிம்மரின் தரிசனம், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நரசிம்மரிடம் கோரிக்கை விடுத்தனர்.
சப்த ரிஷிகள் வேண்டியதன்பேரில், அவர்களுக்கு காட்சியளித்தது போன்றே பொதுமக்களுக்கும் தரிசனமளிப்பதாக நரசிம்மர் தெரிவித்தார்.
ஆண்டு முழுவதும் கண் மூடி தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரிவதாக கூறினார்.
அதன்படி, கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமாள் கண் திறந்து தரிசனம் தருகிறார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சோளிங்கருக்கு வருகை தந்து நரசிம்மரை தரிசித்து செல்கின்றனர்.
பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும். புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.
பிரம்ம தீர்த்தம், பைரவ கலா வர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன. இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும்.
கலியுகத் தொடக்கத்தில் பேய், பிசாசு போன்றவற்றின் தொல்லைகளில் மக்கள் நிம்மதி இழந்தனர். அவர்களிடம் இரக்கம் கொண்ட பிரம்மன், பிரம்ம தீர்த்தக் கரையில் தவம் இருந்தார். அவர் முன்பு நரசிம்மர் தோன்றி ‘பிரம்மா’ உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். ‘மக்கள் நோய் நொடியின்றியும் பேய், பிசாசு தொல்லை இன்றியும் வாழ அருள வேண்டும்’ என்று பிரம்மா கேட்டுக் கொண்டார். பிரம்மனுக்கு படைப்புத் தொழிலை யாதொரு இடையூறின்றி பண்ண நரசிம்மர் பணிந்தார். ஆஞ்சநேயருக்கு தம் சங்கு, சக்கரங்களை அளித்து எதிரே உள்ள சிறிய மலையிலிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பங்களை, நிறைவேற்றுமாறும் அங்கேயே நித்தியவாசம் புரியமாறும் கட்டளையிட்டார்.
சப்தரிஷிகளும் வாமதேவர் என்ற முனிவரும் பிரகலாதனுக்காக பெருமாள் காட்டிய நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கும் காட்ட வேண்டும் என்றும் இந்த மலையில் வந்து தவம் இருந்தனர். அப்போது கும்போதிர கால்கேயர் என்னும் அரக்கர்கள் தவத்திற்கு இடையூறு செய்தனர். அப்போது அரக்கர்களால் வரும் இடையூறுகளை அழிப்பதற்கு நரசிம்மர், ஆஞ்சநேயரை இந்த மலைக்கு அனுப்பி வைத்தார். நரசிம்மர் வழங்கிய சங்கு, சக்கரங்களை பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் அரக்கர்களின் தலைகளைக் கொய்தார். ரிஷிகளுக்கு நரசிம்ம அவதாரத் தோற்றத்தை மீண்டும் காண்பித்தார் பெருமாள்.
மலை மீது இறைவனை தரிசிக்கும்போது மனமும் உடலும் தூய்மை அடைகிறது. பில்லி சூனிய பீடைகள் அகன்று உடலில் உள்ள துர்நீர் உதிர்ந்து ஆரோக்கியமான உடம்பும் மீண்டும் கிடைக்கிறது. படியேறி வழிபடும் அளவுக்கு உடல் உரம் இல்லாத முதியவர்கள் கீழிருந்து திருக்கடிலையும் பெருமாளையும் ஆஞ்சநேயரையும் மனதில் நினைத்தாலே போதும், மோட்சம் கிட்டும். வருடம் முழுவதும் விழாக்கோலம் கொள்கிறது சோளிங்கர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், அலை, அலையாக மக்கள் வந்து வணங்கும் சோளிங்கருக்கு நீங்களும் போய் உரிய முறையில் வழிபாடுகள் செய்து பேய், பில்லிசூனியம் அகன்று உடலும் மனதும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வில் மேன்மைகள் பெறலாம்.






