என் மலர்
இந்தியா

அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
- சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






