என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலை வரும் பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்- திருவிதாங்கூர் தேவசம்போர்டு
    X

    சபரிமலை வரும் பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்- திருவிதாங்கூர் தேவசம்போர்டு

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×