என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லாரி டிரைவர் இருக்கை பெட்ரோல் குண்டு வீச்சால் சேதம் அடைந்திருக்கும் காட்சி.
ஆலங்குளம் அருகே லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - டிரைவர் படுகாயம்
- தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
- கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் 3 குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த குவாரிகளில் இருந்தும், அருகில் உள்ள ஓ.துலுக்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குவாரிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த லாரிகள் அனைத்தும் மருதம்புத்தூர் வழியாக ஆலங்குளத்தை அடைந்து அங்கிருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை கண்டபட்டி விலக்கு பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கனிமவளத்தை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று ஆலங்குளம் நோக்கி புறப்பட்டு சென்றது.
கண்டபட்டி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை லாரி டிரைவர் மீது வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் லாரியை ஓட்டிவந்த செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் படுகாயம் அடைந்தார்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியில் இருந்த 2 டிரைவர்கள் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் ஓட்டி வந்த லாரியை அதே இடத்தில் விட்டு விட்டு சென்றால் மர்ம நபர்கள் அதனை சேதப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மருதம்புத்தூர் ஊருக்குள் மெயின்ரோட்டில் ஓரமாக நிறுத்திவிட்டு ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் இருக்கை தீயில் கருகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வேளாண் சங்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த தாக்குதல் டிரைவர் மீது தனிப்பட்ட முறையிலான கோபத்தில் நடைபெற்றதா என்று கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருதம்புத்தூர் கிராமம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் செல்வதால், அதனால் அவதியுறும் பொதுமக்களில் யாரேனும் இளைஞர்களை திரட்டி இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






