search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்- வியாபாரிகள் மகிழ்ச்சி
    X

    குற்றாலம் அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்- வியாபாரிகள் மகிழ்ச்சி

    • கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் தான் எனவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் நீர்வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகிறது.

    இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.

    தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், இன்றும் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அவர்களை போலீசார் வரிசையில் நின்று பாதுகாப்புடன் குளித்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் வாகன நிறுத்தும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது. வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    அருவி பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் கூறுகையில், சீசன் காலங்களில் வந்து குளிப்பதற்காக நாங்கள் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் பொழுது அரசு விடுதிகள் மட்டுமின்றி தனியார் விடுதிகளும் நிரம்பி வழிவதால் தங்கும் அறைகளை தேடி சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் கூடுதல் தங்கும் விடுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×