என் மலர்
நீங்கள் தேடியது "திருமூர்த்தி அணை"
- கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 51.16 அடியாக உள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் திருமூர்த்தி அணை நிரம்பி பாலாற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.
எனவே பாலாற்றின் கரையோரத்தில் உள்ள தேவனூர் புதூர், பொன்னாலம்மன் சோலை, தீபாலப்பட்டி, அர்த்தநாரி பாளையம், ஆண்டியூர் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருமூர்த்தி அணை நீர்வளத்துறை உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 7 நாட்களில் 12.66 அடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகிற பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்பட்டுள்ளது. 60 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன.
இதைத்தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர் நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட (பி.ஏ.பி.) தொகுப்பு அணைகளும் திகழ்கின்றன.
இந்த அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வருகிறது. திருமூர்த்தி அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 18-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சலிங்க அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அணையில் அடைக்கலமாகி நீர்வரத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பருவமழை தொடங்கிய நாளான கடந்த 18-ந்தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 38.15 அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை 50.81 அடியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 7 நாட்களில் 12.66 அடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் கடல்போல் அணை காட்சி அளிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பாலாறு, காண்டூர் கால்வாய், தோணியாறு ஆகியவை மூலம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே திருமூர்த்தி அணை, தனது முழு கொள்ளளவை எட்டும் சூழல் நிலவுகிறது. இதனையடுத்து கரையோர கிராம மக்களின் பாதுகாப்பு கருதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
- திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பெரும்பாலான இடங்களில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. குளு, குளுவென வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள், அமணலிங்கேசுவரர் கோவில் அருகே குளித்து விட்டு, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தொடர் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
90 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 73 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 46.21 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையானது காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டார்.
8 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முன்னதாக பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டனர். விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள்-மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் காரணமாக அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.
தொடர்மழை காரணமாக துப்புரவு பணியாளர்களால் முழுமையாக குப்பையை அகற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
- அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே திருமூர்த்தி அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு சர்க்கார் பதியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக 43 கிலோமீட்டர் பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இதன் மூலம் அணை நிரப்பப்பட்டு பாசனத்திற்காகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு மேல் பகுதியில் திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த அருவியில் நீர்வரத்து இருக்கும் .பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை யின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஓடும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். தற்போது திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது.
உடுமலை :
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதன் வாயிலாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு, மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.பாசனத்தின் கீழுள்ள அனைத்து கால்வாய்களுக்கும் படிப்படியாக நீர் வழங்கப்பட்டு கடந்த 13-ந் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பி.ஏ.பி., பாசனத்தில் திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து திட்ட தொகுப்பு அணைகள் மட்டுமின்றி பாசன பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு நீர் திறப்பு தள்ளிப்போனது.திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 52 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில் திருமூர்த்தி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு, தோணியாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் திருமூர்த்தி அணை நிரம்பி வீணாக உபரி நீர் திறப்பதை தவிர்க்க திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து கடந்த 16ந்தேதி, காண்டூர் கால்வாயில் நீர் பெறுவது நிறுத்தப்பட்டது. பாலாறு வழியாக மட்டும் நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை.
திருமூர்த்தி அணையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 52.83 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,627.75 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு பாலாறு வழியாக வினாடிக்கு, 51 கனஅடி நீர்வரத்தும் 21 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.
இறுதிச்சுற்று திறப்புக்கான இடைவெளி அதிகரித்த நிலையில், பருவமழையும் குறைந்துள்ளதால் வருகிற 25-ந் தேதி முதல் இரண்டாம் மண்டலம் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
இரண்டாம் மண்டல பாசனத்தில் 3 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்ட நிலையில், மழை பொழிவு அதிகரித்ததால் நீர் திறப்பு தாமதமானது. மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கதிர் பிடிக்கும் பருவத்திற்கு நீர் தேவை என்றதால் இடைவெளி அதிகரிக்கப்பட்டு வருகிற 25-ந் தேதி முதல் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது. காண்டூர் கால்வாய் விடுபட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் பிரதான கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் குறைந்த நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு பிரதான கால்வாய் பராமரிப்பு மடை மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கி 120 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும் கால்வாய் பணிகள் துவங்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரம்பிக்குளம்-ஆழியாறு(பி.ஏ.பி.,) பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் எடுத்து செல்ல 930 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பி.ஏ.பி., விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் டெண்டர் அறிவிக்கப்பட்டதும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தி.மு.க., தவிர மற்ற அனைத்து கட்சியினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒட்டன்சத்திரத்துக்கு ஏற்கனவே காவிரியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக-கேரளா ஒப்பந்தத்தில் செயல்படும் பி.ஏ.பி., திட்டமான ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுத்தால், இரு மாநில ஒப்பந்தத்தையும் பாதிக்கும் என அதிகாரிகள் மட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.
ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் அரசு மட்டத்தில் மறுபரிசீலனையில் இருப்பதால் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மதுரை தலைமை பொறியாளர் முருகேசன் அறிவித்துள்ளார். இதையடுத்து ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பி.ஏ.பி., திட்ட பாலாறு படுகை திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள செய்தியை அனைத்து பாசன சங்க தலைவர்களுக்கும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி என்றார்.
- ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
- 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி. திட்டத்தின் கீழ் 3ம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 94 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பிஏபி. பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கா்களுக்கு முறைவைத்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் 3ம் மண்டல பாசனத்துக்கு டிசம்பா் 28ல் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழிசெல்வராஜ் ஆகியோா் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி அணையில் இருந்து நீரை திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.வீனீத், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நீா் திறப்பின் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3020 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கா், தாராபுரம் வட்டத்தில் 18,963 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என ஆக மொத்தம் 94 ஆயிரத்து 362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீா் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறுகையில்,
பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் இருந்து முதல்கட்டமாக 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு ள்ளது. இது படிப்படியாக 912 கன அடியாக உயா்த்தப்படும். டிசம்பா் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரை 120 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு மொத்தம் 4 சுற்றுகளாக 7600 மில்லியின் கன அடி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.
- உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது
- 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் தளி பேரூராட்சி சார்பில் 1990ல் படகு சவாரி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2002ல், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.அதன்படி படகுத்துறையில் 5 படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு 25 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதற்கு சுற்றுலாப்பயணிகளிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக படகு சவாரி முற்றிலுமாக முடங்கிஉள்ளது.இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
படிப்படியாக சுற்றுலா சார்ந்த வர்த்தகமும் அப்பகுதியில் முற்றிலுமாக குறைந்து விடுமுறை நாட்களில் கூட திருமூர்த்தி அணைப்பகுதி வெறிச்சோடுகிறது. இயக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில் பரிதாப நிலைக்கு மாறியுள்ளது. படகுகளை புதுப்பிக்க செலவிட்ட தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் செலுத்த முடியாததும், படகு சவாரி முடங்க முக்கிய காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே தமிழக அரசு சுற்றுலா பயணிகள் தேவைக்காக படகு சவாரியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வரும் கோடை காலத்தில் படகுகளை இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை, தளி பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
- 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:
பி.ஏ.பி., பாசன திட்ட அணைகளில் பிரதானமாக உடுமலை திருமூர்த்தி அணை உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த அணையிலிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் வழியாக, நீர்க்கசிவு அதிக அளவு காணப்பட்டதால் தற்போது முழுமையாக பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
பிரதான கால்வாய்க்கு நீர் திறக்கும் 3 மதகுகள், தளி கால்வாய், 1 மதகு, தற்போது முழுவதுமாக மேலே ஏற்றப்பட்டு ரப்பர் பீடிங், துருப்பிடித்திருந்த இணைப்புகள், போல்ட்கள் என அனைத்தும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அணையிலிருந்து நீர் திறக்கப்படும் மதகுகள் பழுது காரணமாக நீர்க்கசிவு அதிகளவு காணப்பட்டது. 3 ஆண்டுக்கு பின் தற்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரும்பு மதகுகளில் உள்ள பழுது நீக்கப்பட்டு நான்கு புறமும் ரப்பர் ஷீட் புதிதாக பொருத்தப்பட்டு பெயிண்ட் அடித்து மீண்டும் கீழே இறக்கப்படும். இதனால் முழுவதுமாக நீர்க்கசிவு தடுக்கப்படும் என்றனர்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி ஆகும். பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது .உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.
திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
- தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
- அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமண லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை , பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர திருமூர்த்தி அணை வண்ண மீன் காட்சியகத்தை பார்வையிடவும் பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படும். டிசம்பர் மாதம் வரை நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறைந்து விடும்.
கடந்த 2 மாதமாக தண்ணீரின்றி அணை வறண்டு கிடந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ளதால் கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குளிக்க தடை விதிக்கப்படும். வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அடிவாரத்தில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மண்டபத்தை சூழ்ந்தவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருமூர்த்தி அணையில் சென்று கலக்கும். வெள்ள அபாயத்தை அறிவிக்கும் வகையில் அப்பகுதியில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. மலையின் மீது கருமேகங்கள் திரண்டாலே கனமழையை கணித்து அருவிப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.
- அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட மணலால் ஓரளவிற்கு ஆழம் அதிகரித்து நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
- அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
உடுமலை:
உடுமலை திருமூர்த்தி அணை கட்டப்பட்ட பிறகு முறையாக தூர்வாரப்படாததால் அதன் நீர்ப்பரப்பில் சுமார் 20 சதவீதம் மண் தேங்கி உள்ளது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் படிப்படியாக குறைந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் அணையில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பருவமழை குறுக்கிட்ட காரணத்தினால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அணையின் கிழக்குப்பகுதி மற்றும் தெற்குப்பகுதி ஓரளவிற்கு ஆழமானது. இதனால் நீர்த்தேக்க பரப்பளவும் சற்று உயர்ந்து வந்தது.
இதையடுத்து கோடை காலத்தில் அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் பெருத்த போராட்டத்துக்குப்பிறகு அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதால் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து அனுமதி அளித்து இருந்தால் அணையும் ஆழமாகி இருக்கும். அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கும்.
அலட்சியம் காரணமாக நீர்த்தேக்க பரப்பளவு குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனர். வண்டல் மண் அள்ளும் பணியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
- 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது.
- 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.
உடுமலை:
பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரிக்கப்பட்டு, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.திருமூர்த்தி அணையின் கிழக்குப்பகுதியில் 300 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பு மண் மேடாக காணப்படுகிறது.
இந்த மண் அகற்றி ஆழப்படுத்த வேண்டும். கூடுதலாக, ஒரு டி.எம்.சி., வரை நீர் சேமிக்க முடிவதோடு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சர்வே எண் 252, 253ல் 50 ஆயிரத்து 600 கன மீட்டர் மண் எடுக்க அரசு அனுமதியளித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் மண் எடுத்தனர். கடந்த ஆண்டு சர்வே எண் 254ல், 34 ஆயிரம் கன மீட்டர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. பருவ மழை துவக்கம், பாசனத்திற்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களினால் 17 ஆயிரம் கன மீட்டர் மட்டுமே மண் எடுக்கப்பட்டது. திருமூர்த்தி அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் அதிக சத்துக்களுடன் காணப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே நடப்பாண்டும் கோடை காலத்தில் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் புதிதாக சர்வே எண் குறிப்பிட்டு மண் எடுக்க அரசிதழில் அறிவிப்பு வெளியிடாமல் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
அதிக அளவு விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடந்த மாதம் 18ந் தேதி முதல் விவசாயிகள் மண் எடுத்து வருகின்றனர்.
திருமூர்த்தி அணையை கூடுதல் பரப்பளவில் ஆழப்படுத்தும் வகையில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதனையடுத்து, நடப்பாண்டு 38 ஆயிரத்து 800 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நீர் நிலைகளை தூர்வாரும் வகையில், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. நடப்பாண்டு, குளங்களில் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமூர்த்தி அணையில் கடந்தாண்டு நிலுவையிலிருந்த 17 ஆயிரம் கன மீட்டர் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கூடுதல் அனுமதி கோரி விவசாயிகள் விண்ணப்பித்ததால் மேலும் 38,800 கன மீட்டர் எடுக்கஅனுமதியளிக்கப்பட உள்ளது.
தற்போது 54 விவசாயிகள் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. முதற்கட்டமாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். அணையில் எடுக்கப்படும் வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர், புஞ்சை நிலமாகஇருந்தால் 90 கன மீட்டர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.






