search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமூர்த்தி அணையில் இருந்து  25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு   ஒட்டன்சத்திரம் திட்ட  டெண்டர் ரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    திருமூர்த்தி அணையில் இருந்து 25-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு ஒட்டன்சத்திரம் திட்ட டெண்டர் ரத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதன் வாயிலாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு, மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.பாசனத்தின் கீழுள்ள அனைத்து கால்வாய்களுக்கும் படிப்படியாக நீர் வழங்கப்பட்டு கடந்த 13-ந் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பி.ஏ.பி., பாசனத்தில் திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து பிரதான கால்வாய் வழியாக பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து திட்ட தொகுப்பு அணைகள் மட்டுமின்றி பாசன பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு நீர் திறப்பு தள்ளிப்போனது.திருமூர்த்தி அணையிலும், மொத்தமுள்ள 60 அடியில் 52 அடி வரை நீர்மட்டம் உயர்ந்த நிலையில் திருமூர்த்தி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து பாலாறு, தோணியாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் திருமூர்த்தி அணை நிரம்பி வீணாக உபரி நீர் திறப்பதை தவிர்க்க திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து கடந்த 16ந்தேதி, காண்டூர் கால்வாயில் நீர் பெறுவது நிறுத்தப்பட்டது. பாலாறு வழியாக மட்டும் நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை.

    திருமூர்த்தி அணையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 60 அடியில், 52.83 அடி நீர்மட்டம் உள்ளது. மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில், 1,627.75 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு பாலாறு வழியாக வினாடிக்கு, 51 கனஅடி நீர்வரத்தும் 21 கனஅடி நீர் குடிநீருக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

    இறுதிச்சுற்று திறப்புக்கான இடைவெளி அதிகரித்த நிலையில், பருவமழையும் குறைந்துள்ளதால் வருகிற 25-ந் தேதி முதல் இரண்டாம் மண்டலம் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    இரண்டாம் மண்டல பாசனத்தில் 3 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்ட நிலையில், மழை பொழிவு அதிகரித்ததால் நீர் திறப்பு தாமதமானது. மேலும், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கதிர் பிடிக்கும் பருவத்திற்கு நீர் தேவை என்றதால் இடைவெளி அதிகரிக்கப்பட்டு வருகிற 25-ந் தேதி முதல் இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்படுகிறது.

    தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்பட்டு இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு செய்யப்படுகிறது. காண்டூர் கால்வாய் விடுபட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் பிரதான கால்வாயில் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் குறைந்த நாட்கள் மட்டும் இடைவெளி விட்டு பிரதான கால்வாய் பராமரிப்பு மடை மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ளது. நான்கு சுற்றுக்கள் நீர் வழங்கி 120 நாட்களுக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. மூன்றாம் மண்டல பாசனம் நிறைவடைந்ததும் கால்வாய் பணிகள் துவங்கும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரம்பிக்குளம்-ஆழியாறு(பி.ஏ.பி.,) பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் எடுத்து செல்ல 930 கோடி ரூபாயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பி.ஏ.பி., விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் டெண்டர் அறிவிக்கப்பட்டதும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    தி.மு.க., தவிர மற்ற அனைத்து கட்சியினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒட்டன்சத்திரத்துக்கு ஏற்கனவே காவிரியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தமிழக-கேரளா ஒப்பந்தத்தில் செயல்படும் பி.ஏ.பி., திட்டமான ஆழியாறில் இருந்து தண்ணீர் எடுத்தால், இரு மாநில ஒப்பந்தத்தையும் பாதிக்கும் என அதிகாரிகள் மட்டத்திலும் தெரிவிக்கப்பட்டது.

    ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் அரசு மட்டத்தில் மறுபரிசீலனையில் இருப்பதால் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய மதுரை தலைமை பொறியாளர் முருகேசன் அறிவித்துள்ளார். இதையடுத்து ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து பி.ஏ.பி., திட்ட பாலாறு படுகை திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள செய்தியை அனைத்து பாசன சங்க தலைவர்களுக்கும், ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி என்றார்.

    Next Story
    ×