என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

110 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.
இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






