என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை- அமராவதி அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் 21 அடி உயர்வு
- பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதுண்டு.
கடந்த ஜனவரி மாதம் முதல் 3 மாதங்களுக்கு மழை இல்லாத நிலையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மே மாத துவக்கத்தில் 46 அடியாக சரிவடைந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியான மறையூர், காந்தளூர், கோவில் கடவு போன்ற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, கூட்டாறு போன்றவற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் ,வால்பாறை மற்றும் கேரள வனப்பகுதி போன்றவற்றில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது
கடந்த 22-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47 .74 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 109 கன அடியாக இருந்தது. 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உயர்ந்தது. 25ந்தேதி அணையின் நீர்வரத்து 233 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்தது. 26-ந் தேதி அணைக்கு நீர்வரத்து 1590 கன அடியாக உயர்ந்தது. 27 மற்றும் 28-ந்தேதியில் அணையின் நீர்வரத்து 4809, 4850 கன அடி என புதிய உச்சத்தை தொட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. தொடர்ந்து இரவு பகலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை நீடிப்பதால் நீரூற்றுகளும் சிற்றாறுகளும் உருவாகி அணையை வந்தடைவதால் அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அமராவதி அணைக்கு 3769 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை , திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிஏபி., திட்டத்தில் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலமாகவும் பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையில் நீர்மட்டம் 53.92 அடியாக உள்ளது. அணைக்கு 252 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1167 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.