என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்"
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன.
நெல்லை:
நாடு முழுவதும் சுதந்திர தினம் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர் திரும்பினர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து அவர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினார்.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் அந்தியோதயா ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வரத்தொடங்கினர்.
இதன் காரணமாக ரெயில்நிலையம் பரபரப்பாக காணப்பட்டதோடு முகப்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தூரம் கொண்ட முதல் நடைமேடை முற்றிலுமாக பயணிகளால் நிரம்பி இருந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்தே அந்த ரெயிலில் இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்த ரெயில் பெட்டிகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த தாய்மார்களும் வேறு வழியில்லாமல் கடும் நெரிசல்களுக்கு இடையே ரெயிலில் ஏறினர். பெட்டிகளில் பயணிகள் கால் வைக்க கூட இடம் இல்லாமல் இருந்த நிலையிலும் பயணிகள் ஏறிக்கொண்டே இருந்ததால் வாக்குவாதங்களும் நிகழ்ந்தன.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையிலும், அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன. இதனால் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
- ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர்.
வேலூர்:
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இரவு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கிருந்த மர்ம நபர் அவசர உதவி என் 100 மற்றும் 108-க்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்த போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.
இதனால் பதற்றம் அடைந்த போலீசார் இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
உஷாரான ரெயில்வே போலீசார் இது குறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அதற்குள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது.
காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்ட்டர் பத்ம ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போஸ்ட் கமாண்டன்ட் அழகர்சாமி மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர். அதிகளவில் போலீசார் வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ரெயிலை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் அப்பாவி போல அமர்ந்திருந்தார்.
செல்போன் மூலம் அவரை மடக்கி பிடித்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் மிரட்டல் விடுத்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.
நான் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். தற்போது வேலை தேடி வருகிறேன்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரெயில் நிலையம் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தேன் என சபரீசன் போலீசாரிடம் தெரிவித்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் சபரீசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
போலீசாரை அலறவிட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும்.
- நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
நெல்லை:
குஜராத் மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வாரம் ஒருமுறை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். இந்நிலையில் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்த ரெயில் இன்று அதிகாலை மங்களூர் மற்றும் உடுப்பி இடையே வந்தபோது அந்த வழித்தடத்தில் தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் அந்த ரெயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியல் நிறுத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது. இதனால் நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற ரெயிலை இன்று காலை 8.30 மணி அளவில் எஞ்ஜின் பின்னோக்கி இழுத்துச் சென்றது. சுமார் 5 கிலோ மீட்டர் பின்னால் இழுக்கப்பட்டு அங்குள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று பாதையில் இயக்கப்படுமா? அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரெயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை எனவும் பயணிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
- ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
2 நாட்கள் பயணத்தில் அவர் ரூ.82 ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி இன்று காலை தாஹோத் நகரில் ரெயில் என்ஜின் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த தொழிற்சாலை உள்நாட்டு பயன்பாட்டுக்காகவும், ஏற்றுமதிக்காகவும் 9 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட மின்சார ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்யும். இந்த தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரெயில் என்ஜினையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரெயில்வேயின் சரக்கு ஏற்றுதல் திறனை அதிகரிக்க இந்த ரெயில் என்ஜின்கள் உதவும்.
அதை தொடர்ந்து தாஹோத் பகுதியில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் நிறைவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
இவற்றில் ரெயில்வே திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களும் அடங்கும். வேராவல்-அகமதாபாத் இடையே வந்தே பாரத் விரைவு ரெயிலையும், வல்சாத்-தாஹோத் இடையே விரைவு ரெயிலையும் அவர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பாதை மாற்றப்பட்ட கட்டோசன்-கலோல் பிரிவையும் திறந்து வைத்ததோடு அதில் ஒரு சரக்கு ரெயிலையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி பூஜ் நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.53,400 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்கு நிறை வடைந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காந்தி நகருக்கு செல்கிறார். அங்கு ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 22 ஆயி ரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,300 கோடி நிதியை அவர் விடுவிக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.
- அமெரிக்காவை சேர்ந்த நிக் மேடோக் உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
- அவர் சமீபத்தில் இந்தியா வந்து ரெயில் பயணம் செய்தார்.
அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நிக் மேடோக். இவர் 8 ஆண்டு களாக உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் தனது பயணங்களை பதிவிட்டு வருகிறார். பல்வேறு வினோதமான இடங்களையும் பார்வையிட்டு பதிவிட்டுள்ள அவர் சமீபத்தில் இந்தியா வந்தார்.
ஆனால் இந்திய ரெயில் பயணம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. ஸ்லீப்பர் வகுப்பில் 15 மணி நேர பயணத்திற்குப் பிறகு கடுமையான சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், "15 மணிநேர ரெயில் பயணமா அல்லது வாரணாசியில் இறந்த உடல்களை ஒரு வாரம் சுவாசித்ததா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள காணொளியில், ரெயிலின் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் உள்ள அசுத்தமான கழிப்பறையைக் காட்டினார். அவர் தனது பயணத் தேதியையோ அல்லது அவர் சென்ற பாதையையோ குறிப்பிடவில்லை, ஆனால் ரயிலில் 15 மணிநேரம் கழித்ததாக மட்டும் குறிப்பிட்டுள்ளதோ டு இனி ரெயிலில் பயணம் செய்ய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நிக் மேடோக் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிக் மேடோக்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
- ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர்.
மதுரை:
தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார்.
இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.
மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.
மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.
சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
- வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
வக்பு திருத்த மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதா பாத், சுதி, அம்தாலா, துலியன் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு பிரிவினர் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர்.
நிம்நிதா ரெயில் நிலையத்தில் அவர்கள் பல மணி நேரம் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் மீது சரமாரியாக கற்களையும் வீசினார்கள். ரெயில் நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். இதையடுத்து வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் 10 போலீசார் படுகாயம் அடைந்தனர். சில ரெயில் பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினார்கள். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர்.
இந்த வன்முறையால் அப்பகுதி வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் திருப்பி விடப்பட்டது. சர்வ தேச எல்லையில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்தனர்.
- ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது
பாட்னா:
பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் இருந்து ஏராளமான இரும்பு பொருள்கள் திருடப்பட்டது.
இது பற்றி ஆக்கர் கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அக்கும்பல் ரெயில் என்ஜினையே திருடிய அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. இதுபற்றிய விபரம் வருமாறு:-
பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் உள்ள யார்டில் பழுதான ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யார்டுக்கு திருட்டு கும்பல் சுரங்க பாதை அமைத்து உள்ளது. அந்த பாதை வழியாக யார்டுக்கு வரும் ரெயில்களில் உள்ள இரும்பு பொருள்களை கொள்ளை கும்பல் திருடி சென்றுள்ளனர்.
பல மாதங்களாக நடந்து வந்த இத்திருட்டை அதிகாரிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இதன் உச்சக்கட்டமாக ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
பூர்ணியா மாவட்டத்தில் மக்கள் பார்வைக்காக டீசல் ரெயில் என்ஜின் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயில் என்ஜினையே இக்கும்பல் திருடி சென்றுள்ளது.
இதுபோல ரெயில் பாலத்தில் உள்ள இரும்பு போல்டு மற்றும் நட்டுக்களையும் இக்கும்பல் திருடி விற்றுள்ளனர்.
இவை அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார் இவர்களுக்கு ரெயில்வே அதிகாரிகள் துணை புரிந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு :-
காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
- சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் சென்றது.
திருத்துறைப்பூண்டி,:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- நாகப்பட்டினம் மாவட்டம், அகஸ்தியம்பள்ளி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது.
இதனை அடுத்து அகஸ்தியம்பள்ளியில் இருந்து வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குறவப்புலம், கரியாபட்டினம் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.
சனி, ஞாயிற்று கிழமைகளை தவிர, மற்ற 5 நாட்களிலும் இந்த ரெயில் சேவை காலை, மாலை என 2 வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் பாதையின் தண்டவா ளத்தின் உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் ஓ.எம்.எஸ் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் இன்று காலை நடந்தது.
முன்னதாக காலை 10.45 மணிக்கு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கி.மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியம்பள்ளிக்கு ரெயில் புறப்பட்டது.
சுமார் 90 கி.மீட்டர் வேகத்தில் சென்ற ரெயில் காலை 11.15 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடைந்தது. இந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் பலர் பயணம் செய்தனர்.
- ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
- கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.
அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.
அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.
மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.
இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.
மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.
காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
கோவை:
கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் உள்பட 8 ரெயில்கள், வாரந்தோறும் 11 ரெயில்கள் என 20 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து கோவை வந்து சென்னைக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.
கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் தங்கள் விடுமுறையை கழிப்பதற்காக கோவையில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர்.
தற்போது கோடைவிடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கோவையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் குறிப்பாக ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் குடும்பம், குடும்பமாக பயணிக்கின்றனர்.
சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் போன்ற 10-க்கும் மேற்பட்ட ரெயில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.
அதன்படி சிலர், முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
முன்பதிவில்லா பெட்டிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது. ரெயிலில் உள்ள இருக்கைகள் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோவையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுவும் முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடிக்க ஓடினர். பயணிகள் கூட்டம் காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
ரெயிலில் உள்ள கீழ் இருக்கைகள் நிரம்பியதால் பலர் மேலே உள்ள இருக்கைகளிலும், நடந்து செல்லும் பாதைகளிலும் அமர்ந்து கொண்டனர். இன்னும் பலர் நின்று கொண்டும் பயணித்ததை பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் ஒரு மற்றொரு இடத்திற்கு நகர முடியாத படி அனைத்து இடங்களிலும் பயணிகள் அமர்ந்து கொண்டு பயணம் செய்தனர். நிற்க கூட இடம் இல்லாமல் பயணிகள் தவித்தனர்.
இதற்கிடையே கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காத்திருப்பு பட்டியலில் 150க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். மேலும் தட்கல் டிக்கெட் திறந்த ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.
இதையடுத்து குழந்தைகளுடன் பலர் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் பயணம் செய்தனர். இன்றும், நாளையும் இன்னும் அதிகளவிலான பயணிகள் ரெயில் மூலம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால பலர் 10-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
சொந்த ஊர் செல்ல பலர் இருப்பதால் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் அல்லது முன்பதிவு இல்லாத ரெயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






