என் மலர்
நீங்கள் தேடியது "Thanjavur"
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
- ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
- கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
- மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்
தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.
கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!
மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.
- திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக எம்.எல்.ஏ. சாக்கோட்டை க.அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ. (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரதெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர்,
என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர் துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய ஹசிங் யூனிட், முல்லை நகர், மருதம் நகர், நெய்தல் நகர், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சரண்யா என்பவர் மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக உள்ளார்.
- திருமணம் முடிந்த நிலையில், சரண்யா தந்து கணவருடன் பட்டுக்கோட்டையில் வசித்து வந்தார்.
பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகியை மர்ம கும்பல் தலை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மத்திய மாநகர பாஜக பிரமுகராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.
இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.
வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டி ருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன.
- நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.
அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
- தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது.
- போலீசார் அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா சிலை மீது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கொடிகளை இணைத்து மர்ம நபர்கள் போட்டனர்.
இன்று காலை இதனை பார்த்து கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து நிர்வாகிகள் திரளானோர் அங்கு திரண்டனர். உடனடியாக மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர். இதனை தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுயில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
பாபநாசம்:
தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.
மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.
இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மொத்தம் 16 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






