என் மலர்
நீங்கள் தேடியது "தொடர்விடுமுறை"
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன.
நெல்லை:
நாடு முழுவதும் சுதந்திர தினம் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர் திரும்பினர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து அவர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினார்.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் அந்தியோதயா ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வரத்தொடங்கினர்.
இதன் காரணமாக ரெயில்நிலையம் பரபரப்பாக காணப்பட்டதோடு முகப்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தூரம் கொண்ட முதல் நடைமேடை முற்றிலுமாக பயணிகளால் நிரம்பி இருந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்தே அந்த ரெயிலில் இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்த ரெயில் பெட்டிகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த தாய்மார்களும் வேறு வழியில்லாமல் கடும் நெரிசல்களுக்கு இடையே ரெயிலில் ஏறினர். பெட்டிகளில் பயணிகள் கால் வைக்க கூட இடம் இல்லாமல் இருந்த நிலையிலும் பயணிகள் ஏறிக்கொண்டே இருந்ததால் வாக்குவாதங்களும் நிகழ்ந்தன.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையிலும், அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன. இதனால் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
- பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள்.
குறிப்பாக வார விடுமுறை நாட்கள், தொடர் அரசு விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது சுதந்திர தின விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். மேலும் படகு இல்லத்தில் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதனால் படகு குழாம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் மற்றும் காட்சி முனைகளில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன் மற்றும் பஸ்களில் ஏற்காட்டுக்கு வந்ததால் மலைப்பாதை முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஏற்காடு ரவுண்டானா மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
- மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களை காண கேரளா, கா்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டியிலுள்ள உலகப்புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை ஆகிய தொடா் விடுமுறையையொட்டி ஊட்டி சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள வானுயா்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் வண்ண-வண்ண மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா்.
மேலும் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி உற்சாகமாக படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழையின் காரணமாக வெறிச்சோடி இருந்த சுற்றுலா மையங்கள், தற்போது சுற்றுலாப் பயணிகளால் களைகட்டி காணப்படுகிறது.

மேலும் ஊட்டிக்கு வந்து செல்பவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குன்னுார்-ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.






