என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்துவேன்- போலீசாரை அலறவிட்ட வாலிபர் கைது
    X

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்துவேன்- போலீசாரை அலறவிட்ட வாலிபர் கைது

    • மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
    • ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர்.

    வேலூர்:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    இரவு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கிருந்த மர்ம நபர் அவசர உதவி என் 100 மற்றும் 108-க்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்த போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.

    இதனால் பதற்றம் அடைந்த போலீசார் இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

    மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.

    உஷாரான ரெயில்வே போலீசார் இது குறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    அதற்குள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்ட்டர் பத்ம ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போஸ்ட் கமாண்டன்ட் அழகர்சாமி மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர். அதிகளவில் போலீசார் வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ரெயிலை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் அப்பாவி போல அமர்ந்திருந்தார்.

    செல்போன் மூலம் அவரை மடக்கி பிடித்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் மிரட்டல் விடுத்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.

    நான் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். தற்போது வேலை தேடி வருகிறேன்.

    சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரெயில் நிலையம் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தேன் என சபரீசன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் சபரீசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.

    போலீசாரை அலறவிட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×