என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை பேரிடர்"

    • பேரழிவுகள் வேதனையை அளித்தது.
    • இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 125-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த மழைக்காலத்தில் இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளை நாம் பார்த்தோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் நீரில் மூழ்கின, குடும்பங்களும் அழிந்தன.

    இடைவிடாத வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டன, மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தின. பேரழிவுகள் வேதனையை அளித்தது.

    மீட்பு நடவடிக்கையின் போது தேசிய பேரிடர் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படையினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

    எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவும், பகலும் உழைத்தனர். வீரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றனர் . நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள், டிரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் ஆயுதப் படைகள் உதவின. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், டாக்டர்கள், நிர்வாகம் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புல்வாமாவில் ஒரு மைதானத்தில் சாதனை எண்ணிக்கையிலான மக்கள் கூடினர். முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றது. இது முன்பு அங்கு சாத்தியமற்றது. ஆனால் இப்போது நாடு மாறிக்கொண்டு இருக்கிறது என்று பேசினார்.

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
    • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின

    இயற்கைப் பேரழிவுகள் எந்த காலத்திலும் இருந்து வரும் ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரித்து வரும் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குகிறது. தீவிர வானிலை நிலைமைகள், காலநிலை நெருக்கடிகளும் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மட்டும் (2024) உலகம் முழுவதும் 3,700 பேர் இறந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.

    காலநிலை மாற்றம் என்றால் என்ன?

    காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் வானிலை மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் நீண்ட கால மாற்றமாகும். இது இயற்கையாக நிகழக்கூடியது என்றாலும், புதைபடிவ[fossil] எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் 1800 களில் இருந்து காலநிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

    உலகளாவிய வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்தாத பட்சத்தில் ஆபத்துக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நூற்றாண்டின் இறுதியில் பூமி 3.1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது.

    இதற்கான முன்னறிவிப்பாக இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் வெப்ப அலைகள், காட்டுத்தீ, சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம் என பல்லாயிரக்கணக்கான உயிர்களை காலநிலை மாற்ற பேரழிவுகள் பலிகொண்டுள்ளது. 

    பேரழிவுகள்

    அட்லாண்டிக் கடலில், 11 சூறாவளிகள், 18 புயல்கள் ஏற்பட்டன. இதனால் அமெரிக்க பகுதிகளில், ஜூலையில் பெரில், ஆகஸ்டில் டெபி, செப்டம்பரில் ஹெலன் மற்றும் அக்டோபரில் மில்டன் ஆகிய கொடிய சூறாவளிகளால் 330-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பில்லியன் டாலர்கள் வரை சேதம் ஏற்பட்டது.

    மே மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் வாக்கில் தெற்கு பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்தனர்.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் மே மாதத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில், 300 க்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்டது. 6,000 வீடுகள் முற்றாக அழித்தன.

    கேரளாவில் ஜூலையில், நிலச்சரி மற்றும் கனமழையால் வயநாடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர்.

    தென்கிழக்கு ஆசியாவில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட யாகி என்ற சூப்பர் புயல், கிட்டத்தட்ட 600 பேரைக் பலிகொண்டது.

    அக்டோபர் பிற்பகுதியில் தென்கிழக்கு ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வறண்ட பிரதேசமான மத்திய கிழக்கிலும் ஏப்ரலில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. துபாய் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

     

    பருவநிலை மாற்றம் வறட்சி, மழைப்பொழிவு மற்றும் வெப்பத்தால் பயிர்கள் சேதமடைந்து உணவுப் பற்றாக்குறை, உலகளவில் விவசாயத் தொழிலுக்கு இழப்புகளை அதிகரித்தது.

     வெப்ப அலை மரணங்கள்

    மழை வெள்ள பேரழிவுகளை தவிர்த்து, இந்த வருடம் கோடையில் உலகளவில் உணரப்பட்ட வெப்ப அலை ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.

    உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை ஜனவரி முதல் செப்டம்பர் வரை சராசரியை விட 1.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

    உலகளாவிய சராசரி வெப்பநிலை ஜூலை 22 ஆம் தேதி 17.15 டிகிரி செல்சியஸை எட்டியது. இதுவே இந்த வருடம் பூமியில் வெப்பமான நாளாக பதிவுசெய்யப்பட்டது. ஜூலை 21 பதிவான 17.09 டிகிரி செல்ஸியஸ் இரண்டாவது வெப்பமான நாளாக பதிவானது.

    இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் எல் நினோ விளைவு காரணமாக பல நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை நிலவியது. ஹீட்ஸ்ட்ரோக் வெப்ப அலைகளால் ஆசியா முழுவதும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகியுள்ளன.

    ஹீட்வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட ஹீட்ஸ்ரோக் பாதிப்புகள் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூறுகிறது.

    ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின் போது வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    ஐரோப்பாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகளில் வெப்ப அலை காரணமாக 19 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன, குறிப்பாக கிரீஸ் மற்றும் இத்தாலியில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன.

    அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவானது. வெப்பம் தொடர்பான நோய்களால் மெக்சிகோவில் 150 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளது. 

     தீர்வுதான் என்ன?

    காலநிலை மாற்றத்தால் மறைமுகமாக இதய நோய்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பல முக்கிய காரணங்கள் போன்ற கொடிய நோய்களால் உயிர்கள் பறிபோகின்றன.

    2024-ஐ திரும்பிப் பார்க்கும்போது, நாம் அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஒரு நாள் நமது கிரகம் மனிதகுலம் வாழத் தகுதியற்றதாக மாறும் என்பது நிரூபணமாகிறது.

    உலகளாவிய அமைப்புகளும் அரசாங்கங்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் இருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதே தீர்வாகும். 

    • ராஜபாளையத்தில் இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கத்தின் துணை அமைப்பான இண்ட்ராக்ட் அமைப்பின் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. ரோட்டரி கிளப் செயலர் வியாஷ் மற்றும் சுந்தர் முன்னிலை வகித்தனர்.

    இண்ட்ராக்ட் கிளப்பின் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், கருத்தாளர், சிவகுமார் ஆகியோர் பேசினர். சத்ய சாய் அமைப்பின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், செல்வக்குமார் ஆகியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை காணொலி காட்சிகளின் மூலம் விளக்கினர்.

    மாணவர்களுக்கு ஏற்படும் ரத்தக்காயங்கள், எலும்பு முறிவு, மயக்கம், கை, கால் வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இண்ட்ராக்ட் கிளப்பின் செயலர் யுவராஜன் நன்றி கூறினார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    புயல்,வெள்ளம்,நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    புதுடெல்லி:

    நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி ஆபத்தில் சிக்கிய பல நூறு உயிர்களை பேரழிவு காலங்களில் காப்பாற்றுகின்றனர்.

    சில சம்பவங்களில் இந்த வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதவி செய்கின்றனர்.

    இந்நிலையில்,அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு விருது மற்றும்  ரொக்கப்பரிசு அளித்து ஊக்கப்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில் ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருதை ஆண்டுதோறும் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    பேரிடர் காலங்களில் தங்களால் காப்பற்றப்பட்ட நபர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு தனிநபர் அல்லது எந்த தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உரிய ஆதாரங்களுடன் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என இதுதொடர்பாக மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசாக அளிக்கப்படும். தொண்டு அமைப்புகளாக இருந்தால் 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் நற்சான்றிதழும் அளிக்கப்படும். 

    இப்படி விருது பெறும் நிறுவனங்கள் மேற்படி பரிசுத்தொகையை பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் 7-1-2019 தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

    இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பெயர்கள் 23-1-2019 அன்று அறிவிக்கப்படும் என  மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய மழையால் அம்மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. 10 நாட்களாக பெய்த கன்மழையால் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மழை நின்று வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவை உலுக்கிய இந்த மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி மாநிலங்களவை செயலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேரள மழை வெள்ளத்தினை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என குறிப்பிட்டுள்ளார்.
    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம் வகுக்க மத்திய துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

    இதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.

    இதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.

    இந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
    ×