என் மலர்
நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை"
- வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் எனவும் துணை அணையான பேபி அணையை பலப்படுத்திய பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசும் சில தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் நபர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்துக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என ரூல் கர்வ் விதிமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுத்தது. அதன்படி மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை நிர்ணயித்து வருகிறது.
இதனால் கடந்த மாதம் கன மழை பெய்தபோது 138 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீராக 13 மதகுகள் வழியாக கேரள மாநிலத்துக்கு 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்ததால் 138 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது.
வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி. இதனால் இந்த ஆண்டு மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
136 அடியை எட்டியதும் கேரளாவுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 138 அடியை கடந்ததும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 140 அடி உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. 1486 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3995 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 66 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 52.51 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கனஅடியாக குறைக்கப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் மத்தியில் தொடங்கியபோது கேரளா மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகள், ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. மேலும் ரூல்கர்வ் நடைமுறையால் உபரியாக கேரளாவுக்கு தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 333 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 400 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 137.65 அடியாக உள்ளது. 6533 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.11 அடியாக உள்ளது. 1823 கனஅடி நீர் வருகிற நிலையில் 1499 கனஅடி நீர் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையில் 5601 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 139 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 51.80 அடியாக உள்ளது. 4 கனஅடி நீர் வருகிறது. 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது.
- கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி, வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, தூவானம் அருவி, கம்பம் உத்தமபாளையம், கூடலூர், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் வீரபாண்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் மேல்மட்ட பாலங்களில் சாலையை ஒட்டி தண்ணீர் சென்றது. மேலும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்ததால் நீர்வரத்து ஓரளவு சீரானது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 62 அடியில் இருந்து 67.09 என 5 அடி உயர்ந்தது. இதனால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வைகை ஆற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 68.50 அடியை எட்டியதும் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
நீர்வரத்து 13081 கன அடியாக உள்ள நிலையில் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 5109 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
152 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11892 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கேரள பகுதிக்கு உபரியாக 9403 கன அடி நீர் திறக்கப்பட்டு வண்டி பெரியாறு சப்பாத்து உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 139.35 அடியாக உள்ளது. விரைவில் 140 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 6962 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 110.20 அடியாக உள்ளது. 80.20 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. 69 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று வரை நீர்வரத்து சீராகாததால் 9-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, மேகமலை அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி 10.6, அரண்மனைபுதூர் 4.6, வீரபாண்டி 4.2, சோத்துப்பாறை 2.6, வைகை அணை 2, போடி 7.4, உத்தமபாளையம் 6.2, கூடலூர் 41.4, பெரியாறு அணை 6.6, தேக்கடி 26.4, சண்முகா நதி 2.6 என மொத்தம் 114.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 131.60 அடியாக உள்ளது. நீர்வரத்து 2375 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5071 மி.கனஅடியாக உள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 1307 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1199 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3995 மி.கனஅடியாக உள்ளது.
126.26 அடி உயரம் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.17 அடியாக உள்ளது. ஒரே நாளில் 16 அடிவரை நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து 80 கனஅடியாகவும். நீர் திறப்பு 3 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 63.55 கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடி, வரத்து 14 கனஅடி, இருப்பு 165.30 மி.கனஅடி.
கனமழை காரணமாக பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தடை தொடர்கிறது. இதேபோல் மேகமலை அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி சமயத்தில் பெய்து வரும் மழையால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் நடந்து வரும் நிலையில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரியகுளம் 12, வீரபாண்டி 6.4, சோத்துப்பாறை 9.4, போடி 14.2, உத்தமபாளையம் 2.6, கூடலூர் 2.2, பெரியாறு அணை 8, தேக்கடி 6.4, சண்முகாநதி 3.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது.
- கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர்.
- கேரள வக்கீலுக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பேபி அணையை பலப்படுத்தி பின்னர் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதிலும் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுப்பதற்கான தொடர் முயற்சியில் கேரளா ஈடுபட்டு வருகிறது.
மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும்போது முல்லை பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள மக்களை சிலர் அச்சுறுத்தி வருகின்றனர். வக்கீல் ரசூல்ஜோய் என்பவர் சேவ் கேரளா பிரிக்கேட் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பெரியாறு அணைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
அணை உடைவது போன்று கிராபிக் காட்சிகளை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரச்சனையை பெரிதாக்கி வருகிறார். மேலும் அணை உடைந்தால் லட்சக்கணக்கான கேரள மக்கள் பலியாவார்கள் என சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ரசூல்ஜோய் அணையை உடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக அணையின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய வேண்டும். சர்வதேச நிறுவனத்தை வைத்து ஆய்வு நடத்த வேண்டும். அணை பாதுகாப்பானது என்ற அறிக்கை தவறானது என்றும், அதற்கு தங்களிடம் ஆதாரதம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நிபுணர் குழுக்கள் மூலம் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழு ஆய்வு செய்த பின்னர் அணை பலமாக உள்ளது. 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது கேரள வக்கீல் அதற்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்ததற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வரும் கேரள வக்கீல் ரசூல்ஜோய் நடத்தி வரும் சேவ் கேரளா பிரிக்கேட் அமைப்பை தடை செய்யும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் அவர் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் மத்திய கண்காணிப்புக் குழு, துணை காண்காணிப்புக் குழு ஆகியவை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என அறிக்கை கொடுத்துள்ளது. இருந்த போதிலும் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
- தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீரின் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம். ஆய்வுப்பணிக்காக உச்சநீதிமன்ற வழிபாட்டுதல்படி 3 பேர் கொண்ட முதல் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த வந்தனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதி களாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.
கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்கு வந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர்வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ளது. வரத்து 1156 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5586 மி.கன அடியாக உள்ளது.
துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆய்வுக்குழு கூட்டம் முறையாக நடத்தி அறிக்கை அளிக்கப்படுவதில்லை. எனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டு காலமாக வைக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நாளை மறுதினம் (11-ந்தேதி) துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்த வருகை தருகின்றனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.
கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர் வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 478 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1020 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5597 மி.கன அடியாக உள்ளது.
துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில் இதுவரை மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வுகளால் பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் ஆண்டு தோறும் தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய எந்தவித பராமரிப்பு பணியையும் செய்வதற்கு கேரள அரசு சம்மதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.
எனவே இந்த குழுவின் ஆய்வுகள் என்பது வெறும் சம்பிரதாயம் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் அளித்த பல்வேறு வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் கேரள அரசு பின்பற்றுவது இல்லை. தமிழகத்தின் சார்பில் படகு விடுவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே எவ்வித அதிகாரமும் இல்லாத இந்த குழுக்களாலும், ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முனைப்பும் காட்டாத மத்திய நீர்வளத்துறையின் செயல்பாடுகளும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து வெளியேறினர். எனவே முல்லைப்பெரியாறு அணையில் பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமையை இந்த குழுக்கள் தங்களின் ஆய்வுகள் மூலமும், அதன் அறிக்கைகள் மூலமும் பெற்றுத் தருமேயானால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 334 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1160 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. கூடுதல் நீர் திறப்பால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.73 அடியாக உள்ளது. 839 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 21.2, தேக்கடி 9.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை.
- 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்பத்திவிட்டு முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிவரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
142 அடியாக நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. மேலும் தமிழக பகுதியில் விவசாய நிலங்களில் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரளா தடுத்து வருவதாகவும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு வனப்பகுதியை சீரமைக்காமல் உள்ளதாகவும், பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது.
விசாரணையின்போது அணையில் பராமரிப்பு பணி செய்யவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்டுவதற்கும் வல்லக்கடவு பகுதியில் இருந்து அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு வரும் வனப்பகுதி பாதையை சீரமைக்கவும் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த போதிலும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க விடாமல் கேரளா பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் என்பதால் 4 வாரத்திற்குள் அனுமதியை பெறும் வகையில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,
தமிழக அரசு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே கூறப்பட்டதுதான். தற்போது 4 வார காலகெடு வைத்துள்ளனர். கண்டிப்பாக இதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். 2014ம் ஆண்டு மிகவும் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் முழுமையாக அமல்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கே அனுமதி பெற முடியாத நிலையில் மரத்தை வெட்ட எப்படி அனுமதி கிடைக்கும். இருந்த போதிலும் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
- தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
- தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது.
கூடலூர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
கடந்த 2 நாட்களாக தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து 4574 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 131.90 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 4711 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர் திறப்பு 1867 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் மேலும் உயர்ந்து 132.95 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்பதி இம்மாதம் 30-ந் தேதி வரை 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியாறு அணையில் 28, தேக்கடியில் 21 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் நீர்மட்டம் இன்று காலை 65.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4818 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும், வைகை அணை கரையோரம் உள்ள 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்படும். 68 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்பாகவே தொடங்கி பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்தது.
ஆனால் ரூல் கர்வ் முறைப்படி அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த 1 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 2131 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4001 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலை மேலும் நீர்வரத்து உயர்ந்து 4574 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று நீர்மட்டம் 130.90 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 131.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31 வரை அணயில் 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் முழு அளவில் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 1837 கன அடி. நீர் திறப்பு 869 கன அடி. இருப்பு 4738 மி.கன அடியாக உள்ளது. 66 கன அடியை எட்டியதும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் அணையின் நீர்மட்டத்தை நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






