என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    140 அடியை கடந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் -  கேரளாவுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    140 அடியை கடந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    • வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் எனவும் துணை அணையான பேபி அணையை பலப்படுத்திய பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசும் சில தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலா வரும் நபர்கள் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்துக்கும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என ரூல் கர்வ் விதிமுறையை செயல்படுத்த கோரிக்கை விடுத்தது. அதன்படி மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் விதிப்படி நீர்மட்டத்தை நிர்ணயித்து வருகிறது.

    இதனால் கடந்த மாதம் கன மழை பெய்தபோது 138 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீராக 13 மதகுகள் வழியாக கேரள மாநிலத்துக்கு 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழைப்பொழிவு குறைந்ததால் 138 அடிக்கும் கீழ் சென்றது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது.

    வருகிற 29-ந் தேதி 141 அடியும், 30-ந் தேதிக்கு பிறகு 142 அடி வரையும் தண்ணீர் தேக்கலாம் என்பது விதி. இதனால் இந்த ஆண்டு மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    136 அடியை எட்டியதும் கேரளாவுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 138 அடியை கடந்ததும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 140 அடி உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. 1486 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3995 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. 36 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 66 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 52.51 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×