என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mullaperiyar Dam"
- பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.
- தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மா நில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டிலும், அதன்பின் 2014-ம் ஆண்டிலும் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் ஆணையிட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை கண்காணிப்பது தான் கண்காணிப்புக் குழுவின் பணியாகும். ஆனால், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு ஆணையிட்டிருந்தாலும், அது முடிவடைய இரு ஆண்டுகள் ஆகலாம். அதுவரை பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முடியாது.
எனவே, தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வைகை அணையின் நீர்மட்டம் 64.14 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.01 அடியாக உள்ளது.
கூடலூர்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயருமா? என சந்தேகம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 405 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து இன்று காலை 914 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் 130.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 4709 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 64.14 அடியாக உள்ளது. 253 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4441 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 41, தேக்கடி 28.4, சண்முகாநதி அணை 2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 1, போடி 2.6, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 6.6, அரண்மனைபுதூர் 1.4, ஆண்டிபட்டி 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா?
- பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை குறித்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது, 'முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? நீதிமன்றம் பதில் சொல்லுமா? அல்லது நீதி மன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா? இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது" என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றக்கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா? இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபின் பேச்சு குறித்து பிரதமர் மோடி தலையிட்டு ஒன்றிய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இந்த கருத்து ஒன்றிய அமைச்சரின் கருத்தா? பிரதமர் மோடி அரசின் கருத்தா என்பதை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கனவே காவிரி பிரச்சனையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தோடு உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எனவே, மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு அணை குறித்த கருத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து.
- முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வயநாடு நிலச்சரிவால் முல்லைப் பெரியாறு அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கூறினாலும் கூட, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக செய்யப்படும் பரப்புரைகளுக்கு கேரள அரசின் மறைமுக ஆதரவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணை நமது சொத்து; அதன் நீரை பயன்படுத்திக் கொள்வதும், அணையை வலுப்படுத்தி அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதும் நமது உரிமை. இதில் தமிழ்நாடு அரசு எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக்கூடாது.
அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது, அணை அமைந்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது ஆகியவை தொடர்பான இரு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, முல்லைப்பெரியாறு பாசன உழவர்களின் நலனைக் காக்க தமிழக அரசு வாதிட வேண்டும்.
இன்னொருபுறம், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பேபி அணையை வலுப்படுத்துவதன் மூலமாகவே இதை சாத்தியமாக்க முடியும். ஆனால், அதற்குத் தடையாக உள்ள மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதி மறுக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிலும் சாதகமான தீர்ப்பைப் பெற்று அணையை வலுப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
- முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லை பெரியாறு அணை 152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979-ம் ஆண்டு முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை கேரளா வழக்கமாக கொண்டுள்ளது. கேரளா அரசியல்வாதிகள் அம்மாநில மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத்துறையிடம்தான் உள்ளது. ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணை கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதி மன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.
அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய அணை கட்டுவதுதான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கி வருகிறது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்.பி. உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறித்து பொய் பிரசாரம் செய்து வருவது கவலை அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முதலமைச்சர் தயாரா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.
ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழைபெய்து வருகிறது. மேலும் சாலைகளில் பாறைகள் உருண்டும், நிலச்சரிவு ஏற்பட்டும் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
நேற்று அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 128.90 அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 130.45 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 2½ அடி உயர்ந்து ள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நீர்வரத்து 3216 கன அடியில் இருந்து 5339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1311 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4802 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.38 அடியாக உள்ளது. அணைக்கு 1913 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2780 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு அணை 33.8, தேக்கடி 22.4, சண்முகாநதி 2.4, போடி 0.4, உத்தமபாளையம் 2.2, கூடலூர் 4.6, வீரபாண்டி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
- அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கூடலூர்:
பருவமழை தொடங்கிய போதும், முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 991 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.95 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 51.86 அடியாக உள்ளது. 838 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அரண்மனைப்புதூர் 1.6, வீரபாண்டி 4.8, பெரியகுளம் 2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 3, வைகை அணை 2.4, போடி 2.2, உத்தமபாளையம் 1.4, கூடலூர் 4.2, பெரியாறு 24.4, தேக்கடி 17, சண்முகாநதி அணை 2.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.
- யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடி வனப்பகுதியை ஒட்டி ஏராளமான யானை, மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி அணைப்பகுதியை ஒட்டி நடமாடி வருகின்றன.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதியில் இன்று காலை ஒரு யானை நடமாடியது. திடீரென தண்ணீர் குடிப்பதற்காக ஷட்டர் அருகே வந்த போது தவறி உள்ளே விழுந்தது.
பின்னர் அந்த யானை மேலே எழ முடியாமல் சத்தம் போட்டது. உடனே தமிழக பொதுப்பணித்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். யானையை மீட்பதற்கு கேரள வனத்துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்பதால் இது குறித்து பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. யானை ஷட்டர் பகுதியில் விழுந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு யானை மேலே கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.
யானை மற்றும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.
- பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பருவமழை தொடங்கியும் போதிய அளவில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.60 அடியாக உள்ளது. அணைக்கு 1898 கன அடி நீர் வருகிறது.
வைகை அணையின் நீர் மட்டம் 50.20 அடியாக உள்ளது. 928 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.4, தேக்கடி 3, உத்தமபாளையம் 1.6, சண்முகாநதி அணை 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
- அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
கூடலூர்:
கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து சாரல் மழை மட்டுமே பெய்து வந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
பருவமழை தீவிரம் அடைந்ததால் 2001 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3579 கன அடியாக உயர்ந்தது. மேலும் நேற்று முன்தினம் 117.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 118.55 அடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் 119.90 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையில் இருந்து நீர் திறப்பு 878 கன அடியில் இருந்து 967 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 87 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் 47.87 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 556 கன அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.32 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 74.8, தேக்கடி 53.4, கூடலூர் 7.8, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 5.8, போடி 1.2, வைகை அணை 0.2, சோத்துப்பாறை 2, மஞ்சளாறு 1, பெரியகுளம் 1, வீரபாண்டி 17, அரண்மனைப்புதூர் 3.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது.
- தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு இருபோக நெல் சாகுபடிக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.
மேலும் தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின்னர் 2022ம் ஆண்டு மேலும் இரு மாநில தொழில்நுட்ப வல்லுனர்களையும் சேர்த்து ஐவர் குழுவாக மாற்றப்பட்டது.
தற்போது குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காவிரி தொழில்நுட்பக் குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர் பாசனத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி ஆய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ஆய்வு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 13, 14-ந் தேதிகளில் மத்திய கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட ஆய்வு செய்வதற்கு கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு பருவமழை காலத்தின் போதும் முல்லைப்பெரியாறு அணையின் பலம் குறித்து கேரளா சந்தேகம் எழுப்பி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. தற்போதும் பரபரப்பான இந்த சூழலில் மத்திய கண்காணிப்புக்குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்