என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியாறு அணை பராமரிப்பு பணி சுற்றுச்சூழல் அனுமதி வழங்க விடாமல் கேரள அரசு சதி- விவசாயிகள் குற்றச்சாட்டு
- பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை.
- 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்பத்திவிட்டு முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிவரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
142 அடியாக நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. மேலும் தமிழக பகுதியில் விவசாய நிலங்களில் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரளா தடுத்து வருவதாகவும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு வனப்பகுதியை சீரமைக்காமல் உள்ளதாகவும், பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது.
விசாரணையின்போது அணையில் பராமரிப்பு பணி செய்யவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்டுவதற்கும் வல்லக்கடவு பகுதியில் இருந்து அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு வரும் வனப்பகுதி பாதையை சீரமைக்கவும் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த போதிலும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க விடாமல் கேரளா பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் என்பதால் 4 வாரத்திற்குள் அனுமதியை பெறும் வகையில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,
தமிழக அரசு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே கூறப்பட்டதுதான். தற்போது 4 வார காலகெடு வைத்துள்ளனர். கண்டிப்பாக இதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். 2014ம் ஆண்டு மிகவும் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் முழுமையாக அமல்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கே அனுமதி பெற முடியாத நிலையில் மரத்தை வெட்ட எப்படி அனுமதி கிடைக்கும். இருந்த போதிலும் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.






