என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
    X

    முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வுக்கு வந்த மத்திய துணை கண்காணிப்பு குழுவினர்

    முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

    • மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
    • தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீரின் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம். ஆய்வுப்பணிக்காக உச்சநீதிமன்ற வழிபாட்டுதல்படி 3 பேர் கொண்ட முதல் குழுவும், அவர்களுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த வந்தனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதி களாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

    கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வுக்கு வந்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர்வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.80 அடியாக உள்ளது. வரத்து 1156 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5586 மி.கன அடியாக உள்ளது.

    துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆய்வுக்குழு கூட்டம் முறையாக நடத்தி அறிக்கை அளிக்கப்படுவதில்லை. எனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டு காலமாக வைக்கப்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×