என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மேகமலை வனத்துறையினர் அருவியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 334 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1160 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. 5796 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. கூடுதல் நீர் திறப்பால் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.73 அடியாக உள்ளது. 839 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5504 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 21.2, தேக்கடி 9.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.






