என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
    • ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.

    தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.

    இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.

    ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.

    1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.

    மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.

    19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.

     

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.

    அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.

    2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.

    குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

     

    இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.

    இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

     

    2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.

    1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.

     

    • உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது.
    • 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 146 கோடியாக உயர்ந்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 சதவீதம் என்ற அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் இருக்கிறது.

    உலகின் மக்கள்தொகை அதிகம் இருந்த நாடான சீனாவை, இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டது. நாட்டில் இறப்பு விகிதங்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதே மக்கள்தொகை உயர்வுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

    ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இங்கு பிறப்பு விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறது.

    பிறப்பு விகிதங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

    அதன்படி தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 842 குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். அதாவது தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 591 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு, நேற்று வரை பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 928 ஆக இருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 138 குழந்தைகள்தான் பிறந்துள்ளனர்.

    இன்னும் டிசம்பர் மாதம் முடிய 18 நாட்கள் மட்டுமே இருப்பதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும் 8 லட்சத்தை தாண்டுவது சற்று சிரமம்தான் என்று தெரிகிறது.

    இந்த எண்ணிக்கையை கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதாவது 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 18 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5 சதவீதம் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டு களில் சராசரியாக ஆண்டுக்கு 3.1 சதவீதம் அளவுக்கு பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 788 குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். 2021-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 875 ஆக குறைந்தது. தொடர்ந்து 2022-ம் ஆண்டில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 361 குழந்தைகளும், 2023-ம் ஆண்டில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 329 குழந்தைகளும் பிறந்து இருக்கிறார்கள்.

    ஆனால் மிக குறைவாக தொடர்ந்து 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 47 ஆயிரத்து 715 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டுடன், இந்தாண்டு இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் சுமார் 67 ஆயிரத்து 715 குழந்தைகள் குறைவாக பிறந்து இருக்கிறது. இது 8 சதவீதம் சரிவு ஆகும்.

    ரிசர்வ் வங்கியும், தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வருவதை தனது ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவலாக சுட்டிக்காட்டி உள்ளது.

    அந்த அறிக்கையில் 'கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் 1,000 மக்களுக்கு 17 குழந்தைகள் என்ற பிறப்பு விகிதம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 2024-ம் ஆண்டில் இது 12 என்று கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது.

    தமிழகத்தில் இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை மிக கணிசமாக குறைந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். அதேபோல மக்கள்தொகையின் அடிப்படையில்தான் மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதால், தமிழகத்திற்கான பங்கீட்டு தொகை குறையும். ஆனால் அதே நேரத்தில், சரியான கொள்கை திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டால், குறைந்த மக்கள்தொகையுடன் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கும் வாய்ப்பாக இது இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    அதேசமயம் முதியோர் விகிதம் அதிகரித்தால் சமூக பாதுகாப்பு செலவுகள் உயர்வு, முதியோர் நலத்திட்டங்களுக்கு கூடுதல் அழுத்தம் போன்ற சவால்களை தமிழக அரசு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

    • டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது.
    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    டிட்வா புயல் (Cyclone Detwah) கடந்த நவம்பர் மாதம் (2025) இலங்கை அருகே உருவாகி, தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று, தமிழகம் உட்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த புயல் ஆகும்.

    ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டப்படுவது வழக்கம். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டது.

    டிட்வா என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்று அர்த்தம் சொல்லப்பட்டது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அரபு மொழியில் டிட்வா என்பதற்கு 'அழகான மலர்' என்றும் கூறப்படுகிறது.

    டிட்வா புயல் இலங்கை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தியது.

     

    இலங்கையில் கடந்த நவம்பர் 16-ந்தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

     

    டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

     

    டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக வடகிழக்கு பருவமழை என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவற்றால் பெய்து வருகிறது.

     

    இலங்கையில் 'டிட்வா புயல் நல்ல மழையை கொட்டிவிட்டு, அடுத்ததாக தமிழக கடலோரப்பகுதிகளில் 28-ந்தேதி பயணத்தை தொடங்கியது. ராமேசுவரம், ராமநாதபுரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், காவிரி டெல்டா பகுதிகளிலும் அதிகனமழை வரையும், தென்மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும் பெய்தது.

     'டிட்வா' புயல் டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவை ஏற்படுத்தியது. இதனால் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நாகையில் வீடுகளில் புகுந்த மழை வெள்ளம் 

     

    சில மாவட்டங்களில் கனமழை, வேறு சில மாவட்டங்களில் அதிகனமழை என கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.

    டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கின. தோட்டக்கலை பயிர்களும் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

     

    டிட்வா புயல் காரணமாக நவம்பர் இறுதியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை உட்பட) கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    'டிட்வா' புயல் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழையை கொடுத்தாலும், வடமாவட்டங்கள், உள்மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. இதனால் நவம்பர் மாதத்தில் இயல்பு அளவான 17.7 செ.மீ.-ல், 14.9 செ.மீ. மழைதான் பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு ஆகும். இது நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 3-வது மோசமான மழைப்பதிவாக ஆகிவிட்டது.

    இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு 12.5 செ.மீ., 2024-ம் ஆண்டு 14 செ.மீ. பெய்தது இதற்கு முன்பு மோசமான மழைப்பொழிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர் மாதங்களை சேர்த்து பார்க்கும்போது, இயல்பான மழை அளவான 35.3 செ.மீ.-ஐ விட 8 சதவீதம் அதிகமாக அதாவது, 38.3 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    சென்னையிலும் நவம்பரில் மோசமான மழைப்பதிவு இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டு புள்ளி விவரங்களுடன் பார்க்கையில், இது 5-வது மோசமான மழைப்பொழிவாக பார்க்கப்படுகிறது.

    • புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.
    • தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது.

    சர்வதேச அளவில் உண்மையான பொருட்களை அங்கீகரித்து சந்தைப்படுத்த புவிசார் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 1999-ம் ஆண்டு இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு புவிசார் குறியீடு (GI) வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வரை, 658 பொருட்கள், இலட்சினைக்களுக்கு GI வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் பூர்வீகத்தையும், அதன் சிறப்புத் தன்மையையும் உலகறியச் செய்து, அதைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

    புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் . புவிசார் குறியீடு பெரும் பொருட்களுக்கான உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கான பொருளாதார தேவையும் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

     

    பண்ருட்டி பலாப்பழம் - கும்பகோண வெற்றிலை

    தமிழ்நாட்டில் பாரம்பரியமும், தரமான பொருட்களின் தயாரிப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஒரு சிறப்பான உற்பத்தி, கைவினை அல்லது விவசாயப் பொருட்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகும் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருந்தது. சமீபத்தில், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 74-ஐ எட்டியுள்ளது.

    இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற சில முக்கிய பொருட்கள்: பண்ருட்டி பலாப்பழம், கும்பகோண வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வற்றல் மிளகாய், உறையூர் பருத்தி சேலைகள், தூயமல்லி அரிசி போன்ற பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு - மாவட்டம்

    ஈத்தாமொழி நெட்டைத் தேங்காய் - கன்னியாகுமாரி

    நீலகிரி டீ - நீலகிரி

    விருப்பாச்சி வாழை - திண்டுக்கல்

    சிறுமலை மலை வாழைப்பழம் - திண்டுக்கல்

    ஈரோடு மஞ்சள் -ஈரோடு

    மதுரை மல்லி - மதுரை

    கொடைக்கானல் மலை பூண்டு - திண்டுக்கல்

    கன்னியாகுமரி கிராம்பு - கன்னியாகுமரி

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் - ராமநாதபுரம்

    வேலூர் முள் கத்திரிக்காய் - வேலூர்

    ஆத்தூர் வெற்றிலை - தூத்துக்குடி

    கம்பம் பன்னீர் திராட்சை - தேனி

    சோழவந்தான் வெற்றிலை - மதுரை

    மட்டி வாழைப்பழம் - கன்னியாகுமரி

    மதுரை மரிக்கொழுந்து - மதுரை

    கும்பகோணம் வெற்றிலை - தஞ்சாவூர்

    பண்ருட்டி பலாப்பழம் - பண்ருட்டி

    பண்ரூட்டி முந்திரி - பண்ருட்டி

    புளியங்குடி எலுமிச்சை - தென்காசி

    சம்பா மிளங்காய் வந்தல் - விருதுநகர்

    சிட்டிகுளம் சின்ன வெங்காயம் - பெரம்பலூர்

    சித்திரை கார் அரிசி - ராமநாதபுரம்

    ஸ்ரீவில்லுபுத்தூர் பால்கோவா - விருதுநகர்

    கோவில்பட்டி கடலை மிட்டாய் - தூத்துக்குடி

    பழனி பஞ்சாமிர்தம் - திண்டுக்கல்

    மணப்பாறை முறுக்கு - திருச்சி

    ஊட்டி வர்க்கி - நீலகிரி

    உடன்குடி பனங்கருப்பட்டி - தூத்துக்குடி

    சேலம் ஜவ்வரிசி - சேலம்

    மார்த்தாண்டம் தேன் - கன்னியாகுமரி

    சேலம் சுங்குடி - சேலம்

    காஞ்சிபுரம் பட்டு - காஞ்சிபுரம்

    பவானி ஜமக்காளம் - ஈரோடு

    மதுரை சுங்குடி - மதுரை

    தஞ்சாவூர் ஓவியம் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலக் சின்னங்கள் - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகைகள் - கன்னியாகுமரி

    ஆரணி பட்டு - திருவண்ணாமலை

    கோவை கோரா பருத்தி - கோயம்புத்தூர்

    சேலம் பட்டு - சேலம்

    தஞ்சை தலையாட்டி பொம்மை - தஞ்சாவூர்

    தோடா பூந்தையல் - நீலகிரி

    பத்தமடைப் பாய் - திருநெல்வேலி

    நாச்சியார்கோவில் குத்துவிளக்கு - தஞ்சாவூர்

    செட்டிநாடு கொட்டான் - சிவகங்கை

    தஞ்சாவூர் வீணை - தஞ்சாவூர்

    கண்டாங்கி சேலை - சிவகங்கை

    தஞ்சாவூர் நெட்டி சேலை - தஞ்சாவூர்

    மாமல்லபுரம் கல் சிற்பங்கள் - செங்கல்பட்டு

    அரும்பாவூர் மரச்சிற்பம் - பெரம்பலூர்

    திருபுவனம் பட்டுப் புடவை - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் கலைத்தட்டு லோகோ - தஞ்சாவூர்

    சுவாமிமலை வெண்கலச் சின்னம் லோகோ - தஞ்சாவூர்

    நாகர்கோவில் கோவில் நகை லோகோ - கன்னியாகுமரி

    கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் - அரியலூர்

    கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் - கள்ளக்குறிச்சி

    நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் - தஞ்சாவூர்

    திண்டுக்கல் பூட்டு - திண்டுக்கல்

    மைலாடி கல் சிற்பம் - கன்னியாகுமரி

    மானாமதுரை மண்பாண்டம் - சிவகங்கை

    தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட்கள் - மயிலாடுதுறை

    ஜடேரி நாமக்கட்டி - திருவண்ணாமலை

    நெகமம் காட்டன் சேலை - கோயம்புத்தூர்

    செடிபுட்டா சேலை - திருநெல்வேலி

    விளாச்சேரி களிமண் பொம்மை - மதுரை

    தோவாளை மாணிக்க மாலை - கன்னியாகுமரி

    கோயம்புத்தூர் வெட் கிரைண்டர் - கோயம்புத்தூர்

    கிழக்கிந்திய தோல் பொருட்கள் - திருச்சி

    உறையூர் பருத்தி சேலை - திருச்சி

    கவிந்தபாடி நாட்டு சர்க்கரை - ஈரோடு

    நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள் - நாமக்கல்

    பாரம்பரிய தூயமல்லி அரிசி - தஞ்சாவூர்

    அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் - திருநெல்வேலி

    • குளிர் அதிகமாக இருக்கும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும்.
    • 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதமான குளிர்காற்று ஊடுருவி இதமான சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில் வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள உயர் அழுத்தம் காரணமாக, வறண்ட வாடை காற்றின் ஊடுருவல் தென் இந்திய பகுதிகளில் வலுவடைந்து இருக்கிறது.

    இந்த தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் குளிர் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஆகிய 4 நாட்களுக்கு இரவு, அதிகாலையில் பனிப்பொழிவு அதிகரித்து குளிரும் வாட்டி வதைக்கும், பனிமூட்டமும் உருவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோர மாவட்டங்களில் 18 செல்சியஸ் அதாவது 64.4 டிகிரி முதல் 21 செல்சியஸ் (69.8 டிகிரி) வரையிலும், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் 16 செல்சியஸ் (60.8 டிகிரி) முதல் 18 செல்சியஸ் (64.4 டிகிரி) வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்படும். அதாவது குளிர் அதிகமாக இருக்கும் என்றும், இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற உணர்வை பெற முடியும் என்றும் மேலும் அவர் கூறினார்.

    இதுதவிர நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 செல்சியஸ் (46.4 டிகிரி) முதல் 10 செல்சியஸ் (50 டிகிரி) வரை இருக்கும் எனவும், சில இடங்களில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து 16, 17, 18-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

    • சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.
    • இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    சென்னையில் ராமேஸ்வரம்-காசி ஆன்மிக பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு எல்லோருக்குமான மாநிலம். இங்கு பிரிவினை எடுபடாது.

    * சனாதனம் என்பது இறைக்கொள்கை அல்ல. சமாதானம் என்பது தான் இறைக்கொள்கை.

    * பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்.

    * பக்தியை வைத்து பகையை வளர்க்க கூடாது. தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சியிலும் பிரிவினை எப்போதும் எடுபடாது.

    * ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்பரம்-காசி ஆன்மிக பயணத்தில் 602 பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    * திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?

    * இது சட்டத்தை மதிக்கும் அரசு. பக்தர்களின் நலன் காக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • படிவங்களை நிரப்பி கொடுக்க கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை போன்ற காரணங்கள் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கம்

    தமிழ்நாடு உட்பட அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் பல மாநிலங்களில், எஸ்ஐஆர் நடைமுறையை கையிலெடுத்தது தேர்தல் ஆணையம். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் கடந்த மாதம் 4ஆம் தேதி முதல் வாக்களர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.

    இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க இன்றுதான் (டிச.4) கடைசிநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 77.52 லட்சம் பேர் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாக்களர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் கூறப்படுகிறது. 

    இறந்தவர்கள், நிரந்தரமாக இருப்பிடத்தை மாற்றியவர்கள், காணவில்லை மற்றும் பிற காரணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாக்களர்கள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்கங்களைக் காண்கின்றன. சென்னை மற்றும் பிற நகர்ப்புற மாவட்டங்கள் அதிக நீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்கள் உள்ளன. 

    தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தங்கள் பெயர் தவறான காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது என எண்ணும் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     

    • மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.1ம் தேதி) தொடங்கி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மாநிலங்களவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து எம்.பி. நீரஜ் கேள்வி எழுப்பினார்.

    இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.

    அதில் அவர்," நாடு முழுவதும் 2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2023ம் ஆண்டில் 15.33 லட்சமாக உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.

    பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.

    இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    • கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும்.
    • தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்.

    தஞ்சாவூர்:

    2025 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஹாக்கி ஆண்களுக்கான உலக கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற உள்ளது.

    இதற்கான உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சி இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதற்காக பெருமுயற்சி மேற்கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி.

    உலகக்கோப்பை நடத்துவதன் மூலம் உலக நாடுகளின் பார்வை தமிழகம் மீது திரும்பி உள்ளது. இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் மாறி உள்ளது.

    பொதுவாகவே மழைக்காலம் என்று சொன்னால் எந்தெந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும், கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் உடனடியாக மூட வேண்டும். மின்கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    தி.மு.க.வின் பலம் கூட்டணி தான் என்று முதலமைச்சர் அடிக்கடி கூறுவார். ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்துகள் , கொள்கைகள் கொண்டவர்களாக இருந்தாலும் பொது எதிரியாக இருக்கக்கூடிய கொள்கை எதிரியாக இருக்கக் கூடியது யார் என்பது நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்களை எதிர்க்க வேண்டிய மிகப்பெரிய கட்டாயம் நமக்கு உள்ளது. ராகுல்காந்தி விஜயிடம் பேசியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். 

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    • 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • தமிழ்நாட்டில் 5,90,13,184 SIR படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 92.04% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மொத்தத்தில் 6,41,14,582 கணக்கீட்டு படிவங்கள் அச்சிடப்பட்டது. இன்றுவரை, 5,90,13,184 கணக்கீட்டு படிவங்கள், அதாவது 92.04% படிவங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களில் தேவையான தொடர்புடைய விவரங்களை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை சேகரிக்க வீடு தோறும் வருகை தரும் பொழுது வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையான விவரங்களை படிவங்களில் நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்வார்கள். இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு வாக்காளர்கள் தங்கள் ஒத்துழைப்பை அதிகாரிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×