என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலநிலை மாற்றம்"

    • நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
    • காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    சென்னை:

    தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்போது கூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது. அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல்-வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்து விட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.

    காலநிலை மாற்ற ஆட்சி மன்றக்குழு, பசுமைத் தமிழ் நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன் கூட்டியே நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ.24 கோடி மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை 2 நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறோம்.

    மேலும், கூல் ரூபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கி டக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப் படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம்.

    கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறு சீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது.

    அதனால்தான், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

    சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், ஒன்றிய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

    "நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070-ம் ஆண்டிற்கு முன்பே, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய வேண்டும்! நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் ரூ.500 கோடி வரை இதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.

    நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து ரூ.679 கோடி. அவர்கள் வழங்கியது வெறும் ரூ.4 ஆயிரத்து 136 கோடி மட்டும்தான்!

    எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

    சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    * மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி.

    * பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம்.

    * மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இதனால் நெரிசலும் மாசும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரித்துள்ளது.
    • அரசின் நடவடிக்கையால் டிட்வா யுலின் பாதிப்பு வெகுமாக குறைக்கப்பட்டது.

    சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    * சுற்றுச்சூழல் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    * பசுமைப் பள்ளி வகுப்பறையில் வெப்பநிலையை குறைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    * தி.மு.க. அரசின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் அலையாத்தி மரக்காடுகளின் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    * பெண்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

    * பொதுப்போக்குவரத்தின் பயன்பாடு குறைவதால், போக்குவரத்து நெரிசல், மாசு அதிகரித்துள்ளது.

    * பொதுமக்கள், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.

    * தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது மற்றொரு கண்.

    * காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்கு அளப்பரியது.

    * அரசின் நடவடிக்கையால் டிட்வா யுலின் பாதிப்பு வெகுமாக குறைக்கப்பட்டது.

    * சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெற்ற ஐ.ஏ.எஸ். சுப்ரியா சாகு போன்றோரால் அரசுக்கு நல்ல பெயர்.

    * காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் ஒருநாள் முகாம், இனி 2 நாட்கள் நடத்தப்படும்.

    * கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டும் கொடுத்துள்ளது.

    * எத்தனையே பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

    முன்பு வெறும் முன்னெச்சரிக்கையாக இருந்து வந்த கலாநிலை மாற்றம் என்ற சொல் அஞ்சியபடி தற்காலத்தில் நிதர்சனமான ஒன்றாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகளை உலகம் அனுபவித்து வருகிறது.

    அந்த வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் இதுவரை கண்டிராத வகையில் சந்தித்தது.

    உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பெரும்பாலான இயற்கை பேரிடர்களுக்கு விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தையே முக்கிய காரணியாக குறிப்பிடுகின்றனர். அதன்படி காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கத்தால் இந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.

    மியான்மர் - நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள்

    மார்ச் 2025-இல் மியான்மரின் மண்டலே பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிலச்சரிவுகளைத் ஏற்படுத்தியது.

    இந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 5,400-க்கும் அதிகமானோர் பலியாகினர்.

    தொடர்ந்து ஜூலை மாதத்தில் பெய்த பருவமழையினால் கச்சின்மாநிலத்தின் ஜேட் சுரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் பேரழிவுகள்

    ஆப்கானிஸ்தானில் 2025-ஆம் ஆண்டு இரண்டு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆகஸ்ட் 31-இல் ஜலாலாபாத் அருகே ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல கிராமங்கள் சிதைந்தன. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    நவம்பர் மாதத்தில் பல்க் மாகாணத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பனிப்பொழிவு, சாலைகள் துண்டிப்பு காரணமாக அந்த மக்களுக்கு உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல்கள் நீடித்தன.

    ஐரோப்பாவை வாட்டியெடுத்த வெப்ப அலை

    ஏப்ரல் மாதம் முதலே ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் வெப்பம் தகித்தது. ஜூன், ஜூலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது.

    இந்த அதீத வெப்பத்தால் அல்பேனியா, போஸ்னியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலைக்கு 16,500 பேர் பலியாகினர் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

    கலிபோர்னியா காட்டுத்தீ

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 57,000 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இதில் 440 பேர் பலியாகினர்.

    டெக்சாஸ் திடீர் வெள்ளம்

    ஜூலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 135 பேர் உயிரிழந்தனர். சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன.

    இந்தியா - பாகிஸ்தான் வெப்ப அலை

    இந்தியாவில் ஏப்ரல் மாதத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்ற வெயில் வாட்டியது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானது. இந்தியாவில் மட்டும் இரண்டு மாதங்களில் 455 பேர் வெப்ப பாதிப்புகளால் உயிரிழந்தனர்.

    சூடான் நிலச்சரிவு

    ஏற்கனவே உள்நாட்டு போரால் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்த வேலையில், சூடானின் தாராசின் கிராமத்தை ஆகஸ்ட் 31 ஏற்பட்ட நிலச்சரிவு மொத்தமாக விழுங்கியது.

    இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த இந்த நிலச்சரிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்றவர்களும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

    பாகிஸ்தான் பெருவெள்ளம்

    2025 ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை, பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை உருக்குலைத்தது. 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்தனர்.

    நேபாளம் நிலச்சரிவுகள்

    அக்டோபர் மாதம் நேபாளத்தின் இலாம் (Ilam) மாவட்டத்தில் பெய்த அதீத மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சுமார் 60 பேர் பலியாகினர்.

    மேலும், ரசுவாகாதி பகுதியில் பனி ஏரி உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டின் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தது.

    தென்கிழக்கு ஆசியாயை தாக்கிய சென்யார் புயல்

    2025-ஆம் ஆண்டின் இறுதியில் நவம்பர் - டிசம்பர் காலகட்டத்தில் மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை உலுக்கிய சென்யார் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 2,100 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 20 பில்லியன் டாலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு சுமத்ராவின் சிபோல்கா மற்றும் மேற்கு சுமத்ராவின் அகாம் பகுதிகளில் கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இலங்கையை உலுக்கிய டிட்வா புயல்

    இந்தியப் பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவைத் தாக்கியது. இலங்கையில் இது மிகப்பெரிய நிலச்சரிவுகளையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியது. 600-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதுடன், சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. தமிழகம் டிட்வா புயலில் இருந்து நூலிழையில் தப்பியது.

    இந்த அனைத்து நிகழ்வுகளையும் இணைக்கும் ஒரே புள்ளி, ஒரே காரணி புவி வெப்பமயமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றம் ஆகும். பனிப்பாறைகள் உருகுவதும், கடல் மட்டம் உயர்வதும், பருவநிலை மாறுபடுவதும் கணிக்கமுடியாத வெள்ளம், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி மனிதகுலத்தின் இருப்பிற்கே சவாலாக மாறியுள்ளன.

    இனியேனும் உலகம் விழித்துக்கொள்ளுமா அல்லது தீவிர வலதுசாரியான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் கூறுவது போல் "காலநிலை மாற்றம் என்பது ஏமாற்று வேலை" என்று தான் ஒரு பொய்யான மாயையில் வாழ்ந்து கொண்டிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    • சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
    • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் COP30 காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

    சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தனர்.

    கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த மாநாடு நிறைவடைவதற்கு 24 மணி நேரத்திற்குள் நேற்று இரவு மாநாட்டு அரங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் உள்பட 50,000 க்கும் மேற்பட்டோர் தீப்பிடித்து புகை பரவியதை கண்டு அதிர்ந்து அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

    அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் மின் சாதனங்களில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

     ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசில் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார். 

    • 1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது.

    இதில் உலகளவில், 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 9,700 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகளால் 8.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

    1998-ம் ஆண்டு குஜராத் புயல், 1999-ம் ஆண்டு ஒடிசா சூப்பர் புயல், 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

    2024-ம் ஆண்டில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இயற்கை பேரழிவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் டொமினிகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, இந்தியா, பஹாமாஸ் ஆகியவை உள்ளன.

    • தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
    • வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும்

    இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

    தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14-30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.

    பெரும்பாலும் நகர்ப்புற விரிவாக்கம், வெள்ள அபாயம் மற்றும் வெப்ப பாதிப்பு உள்ள பகுதிகளில் நடைபெறுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி, சென்னை, சூரத், லக்னோ போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன.

    வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    எனவே இந்த அபாயங்களைத் தடுக்க, 2050க்குள் 2.4 டிரில்லியன் டாலரும், 2070க்குள் 10.9 டிரில்லியன் டாலரும் வீட்டு வசதி, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

    தற்போது இந்தியா GDPயில் 0.70% மட்டுமே நகர்ப்புற உள்கட்டமைப்பில் செலவிடுகிறது. இது மற்ற நாடுகளை விடக் குறைவாகும்.

    • தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும்.
    • இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி, சிவசங்கர் பங்கேற்றனர்.

    தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின் துறை, தொழில்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர் கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36-வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன். பிப்ரவரியில் இந்த தரவுகள் வெளியாவதற்கு முன்பே அதாவது கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயல் சென்னையைக் கடந்து கொண்டிருந்த வேளையில்தான் நான் தமிழ்நாட்டின் "காலநிலை இயக்கத்தையும்" காலநிலை உச்சி மாநாட்டையும் தொடங்கி வைத்தேன்.

    நான் ஏன் இந்த நிகழ்வுகளை குறிப்பிடுகிறேன் என்றால், இந்த நிர்வாகக் குழுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மட்டுமல்ல, இந்த அரசு வருமுன் காக்கக்கூடிய அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு அறியத் தருவதற்கும்தான்.

    அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர் நிலைகள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன்மையான தமிழ்ச் சமூகம்.

    இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைத்துக்கொள்ளவும், விரைவாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுகாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு, கார்பனை உள்வாங்கவும் பயன்படும்.

    ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்றுவதற்கான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. கால நிலை மாற்றம் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க "காலநிலை அறிவு இயக்கத்தை" செயல்படுத்தப் போகிறோம்.

    அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியுள்ளோம். இதைத் தவிர, அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தி உள்ளோம்.

    மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத, ஏன், ஒன்றிய அரசுகூட உருவாக்காத "காலநிலை மாற்ற நிர்வாகக் குழு" எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுதான் தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறது.

    வளர்ச்சி ஒரு கண் என்றால்-காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத் திற்கு தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
    • இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.

    தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.

    இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக சட்டம் நிறைவேற்றம்.
    • சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது. சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், 'சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்' (Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் "மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்" (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.

    வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

    • தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.

    இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.
    • காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடினார்கள்.

    இதில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டதால் காலநிலை மாற்றத்தால் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி ஆட்சியர் சங்கீதா கலந்து கொண்டனர்.

    ×