என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து.. 16 பேர் பலி
    X

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து.. 16 பேர் பலி

    • பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர்.

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அங்கு, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் 'வெர்தா தாமய்' என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது.

    நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை அவர்களால் உணர முடியவில்லை. பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 9 அன்று தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தற்போது இந்த முதியோர் இல்ல விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×