search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவன்று பக்தர்கள் விட்டு சென்ற 40 ஆயிரம் டன் ஆடைகள் அகற்றம்
    X

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவன்று பக்தர்கள் விட்டு சென்ற 40 ஆயிரம் டன் ஆடைகள் அகற்றம்

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் நேற்று முன்தினம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா அன்று பக்தர்கள் விட்டுச் சென்ற 20 டன் குப்பை, 40 டன் ஆடைகளை துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஆடை அகற்றும் ஊழியர்கள் அகற்றினர்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்தார். சனி பெயர்ச்சியன்று திருநள்ளாறு நளன் குளம், கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சுமார் 20 டன் குப்பைகளை திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

    அதேபோல் நளன் குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விட்டுச் சென்ற சுமார் 40 ஆயிரம் டன் ஆடைகளை நளன்குளத்தில் ஆடைகளை அகற்ற ஏலம் எடுத்தவர்கள் அகற்றியுள்ளனர். வருகிற சனிக்கிழமை சனி பெயர்ச்சியன்று வராத பக்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஊழியர்கள், போலீசார் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து வருகின்றனர்.

    சனி பெயர்ச்சியன்று கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள ரூபாய் 300, 600, 1000 கட்டண டிக்கெட் வசதி மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சனி பெயர்ச்சியன்று வழங்கப்பட்டுள்ள இலவச சிறப்பு பாஸ் இனிமேல் செல்லாது எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் கட்டண டிக்கெட்டை பெற்று எளிதாக தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

    Next Story
    ×