என் மலர்
நீங்கள் தேடியது "மீன்கள்"
- வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
- மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது
வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
- தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
- சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்.
இந்தநிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
இதனால் காசிமேட்டில் விற்பனைக்காக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, தேங்காய் பாறை, சங்கரா, தோல் பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. விசைப் படகுகளில் இருந்து கூடை கூடையாக ஏல முறையில் மீன்களை விற்பனை செய்தனர். இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காசி மேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.
அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை குறைவாகவே காணப்பட்டது. சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. மொத்த வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்யும் மீனவர்களும் காசிமேட்டில் அதிக அளவில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனை கடைகளும் இன்று அதிகமாகவே காணப்பட்டது.
காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம்-ரூ.800 முதல் 900
ஷீலா-ரூ.500
பால் சுறா-ரூ.500
சங்கரா -ரூ.400
பாறை -ரூ.400
இறால்-ரூ.300
நண்டு -ரூ.300
நவரை -ரூ.300
பண்ணா-ரூ.300
காணங்கத்தை -ரூ.300
கடுமா-ரூ.300
நெத்திலி-ரூ.200
- மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.
- ஜிலேபி, கட்லா, சிசி உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செம்மணிபட்டி கிராமத்தில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்த பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று கரும்பாச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று கிராமத்தைச் சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து கீழவளவு கொங்கம்பட்டி சிவகங்கை மாவட்ட பகுதிகளான எஸ்.எஸ். கோட்டை சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் அங்கு கூடினர்.
கிராம முக்கியஸ்தர்கள் இன்று காலை 5 மணி அளவில் வெள்ளைத் துண்டு வீச கண்மாயை சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை, குத்தா போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். இதில் நாட்டு ரக மீன்களான ஜிலேபி, கட்லா, சிசி, கெழுத்தி கெண்டை, வீரா மீன்கள் உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.
மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீன்களை கொண்டு சென்று அதனை சமைத்து சாமிக்கு படையலிட்டு உண்டனர்.
இதனால் ஒவ்வொரு வருடமும் கண்மாய் நிரம்பி தங்கள் பகுதி விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று மீன் வாசனை கம கமவென்று அடித்தது.
- கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
- மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் எட்டையம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. தொடர்ந்து 2 கிலோ முதல் 3 கிலோ வரை கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு இனங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்கின்றனர். காலங்காலமாக தொடர்ந்து வரும் மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
- விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.
இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.
- கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது.
- கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள ஒரு குளத்தில் வண்ணமயமான மீன்கள் காணப்பட்டன. முக்காந்தி என்ற உள்ளூர் மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது. அதன் உடல் முழுவதும் முட்கள் நிறைந்திருந்தது. உள்ளூர் மீனவர்கள் இதை சக்கர் மீன் என்று அழைக்கிறார்கள். சில பகுதிகளில் இது பிசாசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.
கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது. சிலர் இந்த மீன்களை மீன் தொட்டிகளில் வளர்க்கின்றனர். பிசாசு வகை மீன்களை சாப்பிடுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
- தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
- 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமேசுவரம்:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.
அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
- பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
- தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
- தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.
கன்னியாகுமரி:
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.
இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.
முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.
ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.
இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.
- படகில் சமையல் செய்யும்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது.
- தீ மளமளவென பரவி ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது.
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்தவர் டொனோட்டஸ் (வயது 38). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற இவரது படகு, நேற்று மாலை கரை திரும்பியது. படகை தொழிலாளர்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.
பின்னர் படகின் சமையல் செய்யும் அறையில் தொழிலாளர்கள் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராமல் திடீரென ஸ்டவ் டியூபில் தீப்பற்றியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பீதியில் படகிலிருந்து வெளியேறி வெளியே வந்தனர்.
அதற்குள் தீ மளமளவென ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்டு, ஒயர்லெஸ் ஆகியவற்றுள் பரவி எரிந்து நாசமானது. இதில் படகின் மேற்கூரையும் எரிந்து நாசமானது.உடனே மீனவர்கள் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று படகில் பரவிய தீயை அணைத்தனர். அருகில் படகுகளுக்கு டெம்போவில் கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மீனவர்கள் பீய்ச்சி அணைத்தனர். படகில் மீன்கள் பதப்படுத்தி வைத்திருந்த அறையில் தீ பரவவில்லை. இதனால் பிடித்து வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மீன்கள் தப்பின. இந்த சம்பவத்தால் நேற்றிரவு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களிடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.
திருவொற்றியூர்:
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.
இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.
இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
- கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது
கன்னியாகுமரி :
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.
விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.
பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.
கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது.
வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






