என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேலூர் அருகே மீன்பிடி திருவிழா- போட்டிப்போட்டு மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்
    X

    மேலூர் அருகே மீன்பிடி திருவிழா- போட்டிப்போட்டு மீன்களை அள்ளிச்சென்ற கிராம மக்கள்

    • மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.
    • ஜிலேபி, கட்லா, சிசி உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செம்மணிபட்டி கிராமத்தில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்த பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று கரும்பாச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று கிராமத்தைச் சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து கீழவளவு கொங்கம்பட்டி சிவகங்கை மாவட்ட பகுதிகளான எஸ்.எஸ். கோட்டை சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் அங்கு கூடினர்.

    கிராம முக்கியஸ்தர்கள் இன்று காலை 5 மணி அளவில் வெள்ளைத் துண்டு வீச கண்மாயை சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை, குத்தா போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். இதில் நாட்டு ரக மீன்களான ஜிலேபி, கட்லா, சிசி, கெழுத்தி கெண்டை, வீரா மீன்கள் உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.

    மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீன்களை கொண்டு சென்று அதனை சமைத்து சாமிக்கு படையலிட்டு உண்டனர்.

    இதனால் ஒவ்வொரு வருடமும் கண்மாய் நிரம்பி தங்கள் பகுதி விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று மீன் வாசனை கம கமவென்று அடித்தது.

    Next Story
    ×