என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு சேர்ந்து கும்மி அடித்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.

    ஊர்த்திருவிழாவில் பெண்களுடன் சேர்ந்து சூரி கும்மி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.
    • ஜிலேபி, கட்லா, சிசி உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா செம்மணிபட்டி கிராமத்தில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். இங்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்த பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று கரும்பாச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும் என்று கிராமத்தைச் சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர்.

    அதனைத்தொடர்ந்து கீழவளவு கொங்கம்பட்டி சிவகங்கை மாவட்ட பகுதிகளான எஸ்.எஸ். கோட்டை சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் அங்கு கூடினர்.

    கிராம முக்கியஸ்தர்கள் இன்று காலை 5 மணி அளவில் வெள்ளைத் துண்டு வீச கண்மாயை சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை, குத்தா போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர். இதில் நாட்டு ரக மீன்களான ஜிலேபி, கட்லா, சிசி, கெழுத்தி கெண்டை, வீரா மீன்கள் உட்பட சிறிய ரகத்திலிருந்து சுமார் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் பிடிபட்டது.

    மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மீன்களை கொண்டு சென்று அதனை சமைத்து சாமிக்கு படையலிட்டு உண்டனர்.

    இதனால் ஒவ்வொரு வருடமும் கண்மாய் நிரம்பி தங்கள் பகுதி விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று மீன் வாசனை கம கமவென்று அடித்தது.

    • கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் எட்டையம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. தொடர்ந்து 2 கிலோ முதல் 3 கிலோ வரை கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு இனங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்கின்றனர். காலங்காலமாக தொடர்ந்து வரும் மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.

    முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.

    இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.

    இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.

    • நாளை வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
    • 3-ந்தேதி முருகன் ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் வெற்றிவேல் முருகனுக்கு 37-வது ஆண்டு ஆராட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு அலங்காரம், 6 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பரமார்த்தலிங்கபுரம் சீதாலட்சுமி பொன்னுசாமி, காமராஜர் நகர் தாமரைசெல்வி வேல்முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கிறார்கள். தொடர்நது 6.30 மணிக்கு நடைபெறும் சமய உரை நிகழ்ச்சிக்கு கவிஞர் ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். இதில், தாணு மூர்த்தி, கவிஞர் ராஜன் ஆகியோர் "கந்தன் கருணை" என்ற தலைப்பில் உரை ஆற்றுகின்றனர். நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு வெற்றிவேலனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடக்கிறது.

    3-ந்தேதி தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முருகன் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ஊர்வலமானது பழத்தோட்டம், பரமார்த்தலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு அருகில் அமைந்துள்ள பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் தளத்தை சென்றடைகிறது.

    அங்கு உள்ள நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாயில் இரவு 7 மணிக்கு முருகனுக்கு ஆராட்டு, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், வான வேடிக்கை, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சமய கருத்தரங்கு நடக்கிறது. கருத்தரங்குக்கு மயூரி சீதாராமன் தலைமை தாங்கிகிறார். அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் "வள்ளி தெய்வானை திருமணம்" என்ற தலைப்பிலும், ரேணுகா ராமச்சந்திரன் "கந்தபுராணம் ஆராட்டு" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை திருவிழா முடிந்து 30-வது நாளில் வெற்றிவேல் முருகனுக்கு ஆராட்டு விழா நடப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரம் வெற்றிவேல் முருகன் ஆராட்டு விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பொன்னுசாமி, வேல்முருகன், குமாரசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி மஞ்சள் நீராடல் நடக்கிறது.

    ராசிபுரம் அருகே அத்திப்பலகானூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் பூவோடு பற்ற வைத்தல் நடந்தது. நேற்று காலையில் பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர்.

    அப்போது கோவில் பூசாரி பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கினார். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாட்டையடி வாங்கினர். இதையடுத்து இன்று (புதன் கிழமை) அம்மை அழைத்தல் நடக்கிறது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (வியாழக்கிழமை) வண்டி வேடிக்கை, எருதாட்டம் நடைபெறுகிறது. அதையடுத்து 4-ந் தேதி கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி மஞ்சள் நீராடலும் நடக்கிறது.

    • அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக் கிறது.
    • “பாக்கும்படி” நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத் தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.

    இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக் கிறது.

    திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறை யுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை, மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ம் திருவிழா வான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும் 9-ம் திருவிழாவான

    17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    இந்த திருவிழாவை யொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்வி ளக்கு அலங்காரம், வாண வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணி யாளர் ஆன்றனி அல்காந் தர், பங்குப்பேரவை துணைத்த லைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள், 92 அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது.
    • நாளை இரவு மாரியம்மன் சாமி புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல் நடக்கிறது.

    ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி ஊர்வலம் சென்றது.

    கடந்த 31-ந் தேதி பக்தர்கள் கோவிலை சுற்றி பூவோடு எடுத்து வந்தனர். தொடர்ந்து நேற்றுமுன்தினம் அம்மை அழைத்தல் நடந்தது. பின்னர் காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் தீமிதி விழா நடந்தது.

    விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிவித்தும், கையில் வேப்பிலையுடனும் தீ மிதித்தனர். சில பெண்கள் வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையுடன் தீ மிதித்தனர். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) வண்டி வேடிக்கை நடக்கிறது. பின்னர் நாளை (சனிக்கிழமை) இரவு மாரியம்மன் சாமி வர்ண விளக்கு ஜோடனை மற்றும் வாண வேடிக்கையுடன் புஷ்ப பள்ளக்கில் பவனி வருதல், சத்தாபரணம் நடக்கிறது. ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது.
    • பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் நடந்தது.

    பரமத்தியில் உள்ள சேத்துக்கால் மாரியம்மன் கோவிலில் திருவிழா கடந்த 16-ந் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சேத்துக்கால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    31-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும் நடைபெற்றது. பின்னர் மாலை பொங்கல், மாவிளக்கு படைத்தல், அன்னதானம் மற்றும் வண்டி வேடிக்கை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சேத்துக்கால் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி சேத்துக்கால் மாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • திரளான பங்கு மக்கள் பங்கேற்பு
    • பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் அமைந்து உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 18-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 17-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 18-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர்அலங்காரம், வான வேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் சேவியர்அருள்நாதன், மேக்சன், ஜாண்போஸ்கோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவ ருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய இரண்டு தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில்இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டு விடப்பட்டது.

    • திருக்கல்யாணம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    • தேர்திருவிழா 16-ந்தேதி நடக்கிறது.

    மயிலாடுதுறையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் துலா உற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

    காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை ஏற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 15-ந் தேதியும்(செவ்வாய்க்கிழமை), தேர்திருவிழா 16-ந் தேதியும்(புதன்கிழமை), கடைமுக தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் நெல் அறுவடை திருவிழா நடந்தது.
    • நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கோடை நெல் அறுவடைத்திருவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் சேது குமணன் தலைமை தாங்கி சுற்று வட்டார கிராம விவசாயிகளை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் கருணாநிதி பண்ணையில் பயிரிட்ட திருச்சி -1 மற்றும் திருச்சி-3 ஆகிய நெல் இரகங்களின் சிறப்புகளை விவசாயிகளுக்கு விளக்கினார். விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் நெல் அறுவடையில் கலந்துகொண்டனர். நெல் அறுவடைக்குப் பின் 2 நெல் இரகங்களின் மகசூல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன.

    இவ்விழாவில் நெல் சாகுபடி மற்றும் விவசாயம் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். எஸ்.ஆர் பட்டினம், விசாலயன் கோட்டை, கலிப்புலி, காளையார்கோவில் மற்றும் புலிக்குத்தியைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர், கல்லூரியின் இயக்குநர் கோபால் நன்றியுரை வழங்கினார்.

    ×