search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி தடை காலம்"

    • காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் நேற்று வரை (14-ந்தேதி) 61 நாட்கள் இருந்தது. தடை காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கரை திரும்ப ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர்கேன் என அனைத்தையும் தங்களது விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு அதிகாலை முதல் புறப்பட்டனர்.

    முன்னதாக காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, மீனவர்கள் அனைவரும் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு காரணமாகவும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு எங்களது வாழ்வாதாரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்வதற்கு முன்னதாக கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டோம். காசிமேட்டில் மொத்தம் 1200 விசைப்படகுகள் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று உள்ளன என்றார்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ளதால் வரும் நாட்களில் மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×