search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள்"

    • தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தவறான செயல். காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு தி.மு.க உடந்தையாக இருந்ததே தவிர, மீனவர்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    மீனவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க இழைத்த இந்த அநீதியை மீனவ சமுதாயத்தினர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த பிரச்சினையில் தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்படும் என மீனவர்கள் நம்புகின்றனர்.

    தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் மனதில் நிலவுகிறது. மூன்றாம் முறையாக மோடி பிரதமராக வருவது அவசியம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடியை 29 பைசா என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதை விட மிக மோசமான அரசியல் வேறு எதுவும் இருக்காது என மக்கள் நினைக்கின்றனர். மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் நேரு காலத்திலிருந்து கோட்பாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி, நீளம், அகலம், மாவட்டங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் கோட்பாட்டை யாராலும் மீற முடியாது. இதைப் பிரித்துப் பார்ப்பது திமுகவுக்கு வழக்கமாகிவிட்டது.

    காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மனித நேயமற்ற இச்செயலுக்குக் கூட்டணி என்பதால் திமுக கண்டிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வருத்தத்தை அளிக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரசும், திமுகவும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றன. இதை விவசாயிகள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழுக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது பெருமை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கீழமூவக்கரை எனும் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கிராமத்தில் ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வில்லை எனவும், கடலில் தூண்டில் வளைவு அமைத்து தர வலியுறுத்தியும் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும், தேர்தலின் போது பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டும் வருவதாகவும், வெற்றிக்கு பின் கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திடீரென கையில் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பினர். கடலில் எழுந்துள்ள ராட்சத அலைகளையும் பொருட்படுத்தாது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் இளங்கோவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    கடலில் இறங்கிய போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி மீண்டும் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

    • கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
    • மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    குளச்சல்:

    கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    • படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    • தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    சாத்தான்குளம்:

    தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் தூரம் வரையிலான பகுதிக்கு உள்ளேயே சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடிய 12 நாட்டிக்கல் தூரத்தின் அருகே விசைப்படகில் வந்து தினமும் மீன் பிடித்து செல்வதாக கூறப்படுகிறது.

    இதனால் தமிழக மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்லும்போது அவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
    • விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மீன் பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கேரளாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மன்னார் வளை குடா பகுதியில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்டிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    பல ஆண்டுகளாக கேரளா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து வருவதை கண்டித்து, குறிப்பாக தூத்துக்குடி, மணப்பாடு, காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் அதிக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது.இதனை கண்டித்து இன்று கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் தூத்துக்குடி விசைப்படகு துறைமுகத்தில் விசைப்படகு தொழிலாளர் நேரடியாக 1000 பேரும். மறைமுகமாக 5 ஆயிரம் பேரும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இதனால் பண பரிவர்த்தனை சுமார் ரூ.2 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த மீனவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருவதை தடைசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி யில் 263 விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை.
    • அடிக்கடி கைது செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியா- இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    • நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
    • பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.

    இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
    • 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.

    இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியறத்தி உள்ளார்.

    இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கவலை அளிப்பதாகவும் முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன.

    மேலும் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் மீது அநியாயமாக முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலை நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பிரதமர் அவர்களிடம் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம், ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நடுக்கடலில் தங்களை மீட்ட கடலோர காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
    • கடந்த டிசம்பரில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, விக்ரம் ரோந்து கப்பல் வெற்றிகரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

    கொழும்பு:

    தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்கள், அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 5-ந்தேதி அவர்களது விசைப்படகின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 11 தமிழக மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    அந்த வழியாக சென்ற இந்திய கடலோர காவல் படையினர் விக்ரம் ரோந்து கப்பலை சேர்ந்த அதிகாரிகள், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பரிதவிப்பதை கண்டுபிடித்தனர். மீன்பிடி விசைப்படகின் என்ஜின் கோளாறை சரி செய்ய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து விக்ரம் ரோந்து கப்பல் மூலம் 280 கடல் மைல் தொலைவுக்கு விசைப்படகை இழுத்து வந்து லட்சத்தீவின் மினிக்காய் தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசைப்படகு என்ஜின் கோளாறை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

    இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், விசைப்படகு என்ஜின் கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு லட்சத்தீவின் மினிக் காய் தீவில் உள்ள கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக விசைப்படகையும், தமிழக மீனவர்களையும் மீட்டபோது எடுத்த புகைப் படங்களையும் கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ளது. நடுக்கடலில் தங்களை மீட்ட கடலோர காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். அதோடு சமூக வலை தளத்தில் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கட்டுமான தளத்தில் விக்ரம் ரோந்து கப்பல் தயார் செய்யப்பட்டது. இந்த கப்பல் தற்போது அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பரில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, விக்ரம் ரோந்து கப்பல் வெற்றிகரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

    • படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
    • அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது.
    • கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 11ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் திமுக மீனவரணி சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன.

    இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்தும் மீனவர் நலன் குறித்தும் தமிழக முதல்வர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

    ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது. இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து வரும் பிப்.11 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் ராமேஸ்வரத்தில், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×