search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவளம்"

    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
    • ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.

    கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் கிழக்குக் கடற்கரையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் நாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கை மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல், கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

    அதன் பயனாகவே சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அதன் கோவளம் அலுவலகத்திற்கு தடை விதித்திருக்கிறார். அந்த வகையில் இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது போதுமானதல்ல. கிழக்குக் கடற்கடைச் சாலையில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற தத்துவத்திற்கே முடிவு கட்டினால் தான் சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாக்க முடியும்.

    இயற்கையின் கொடையாக, உலகப்புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இணையாக கோவளத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம், பெரும்பாக்கம் சதுப்புநிலம், சிறுதாவூர் ஏரி, நன்மங்கலம் காப்புக் காடு ஆகிய பகுதிகளும் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வலசை வரும் பகுதி ஆகும். இயற்கையாக நமக்கு கிடைத்த இந்த வரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

    ஆனால், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் இந்த வரத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் இதே நிறுவனத்திற்கோ அல்லது வேறு நிறுவனத்திற்கோ ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்த அனுமதி அளிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகள் அகற்றப்பட வேண்டும்.

    கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.
    • ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    கோவளம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு தீபாவளி திருநாளில் ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் நபர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1,000 அடி உயரத்தில் பறந்து 5 நிமிடத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் கண்டுகளிக்கும் வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற்று வந்தது.

    பின்னர் திடீரென ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி நிறத்தப்பட்டது.

    மீண்டும் நேற்று ஹெலிகாப்டர் சுற்றுலா சவாரி தொடங்கியது. நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்களும், மீண்டும் ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் 6 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி நடக்கிறது. நேற்று ஆன்லைனில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்தவர்கள் பலர் ஆா்வமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஹெலிகாப்டரில் வானில் பறந்து அழகிய கடற்கரை, பக்கிங்காம் கால்வாய், பழைய மாமல்லபுரம் சாலையின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கழுகு பார்வையில் வானில் வட்டமடித்தபடியே ஆர்வமாக பார்த்து ரசித்தனர். ஹெலிகாப்டர் சவாரி கோவளத்தில் ஆரம்பித்து முட்டுக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, பட்டிகுளம் வரை சென்று விட்டு மீண்டும் கோவளத்தை வந்தடையும்.

    முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்கள் ஹெலிகாப்டர் சவாரி கோவளம் ஹெலிபேடில் வந்து காத்திருந்தனர். ஆனால் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சரியான சிக்னல் கிடைக்காததால் பல மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் உல்லாசமாக ஹெலிகாப்டர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    முன்னதாக ஹெலிகாபாப்டர் சவாரி செய்தவர்களுக்கு ஆதார் அட்டைகள் நகல் பெறப்பட்டு சவாரி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    • சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.
    • ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10-வது ஆண்டாக தமிழகத்தில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது.

    இதன்படி சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 10-ந்தேதி (இன்று) முதல் 12-ந்தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளிலும் இந்த விழா நடக்க உள்ளது.


    இந்த நிலையில், சென்னை பலூன் திருவிழாவை சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மதியம் 3 மணி முதல், பலூன் திருவிழாவை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

    ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், பலூன்களை பறக்க விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரம் முயற்சி செய்த பிறகும், பலூன்களை பறக்கவிடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அங்கு காத்திருந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    • அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தொழில் ஆகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்து விட்டன. இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில் வளைவு பாலத்தை சீர மைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப் பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்டில் வளைவு பாலத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீ னவர்களின் நாட்டுப்படகு கள் மற்றும் வள்ளங்கள் ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி கவிழ்ந்து மீனவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் கன்னியா குமரி, சின்னமுட்டம் போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும், நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கோவளம் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று பொதுப்பணித் துறை கடல் அரிப்பு தடுப்பு கோட்ட பொறியாளர்கள் கோவளம் மீனவர் பிரதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலத்தை கூடுதலாக 20 மீட்டர் நீளம் நீட்டித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பயனாக கோவளம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் கோவளம் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
    • கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

    இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    ×