search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fishing ban period"

    • வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.
    • சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    ராயபுரம்:

    ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை

    விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதையடுத்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோர பகுதியில் மீன் பிடிக்க செல்கிறார்கள்.

    மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினார்கள். இதனால் காசிமேட்டுக்கு மீன்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. சங்கரா, பெரிய நெத்திலி, கவளை மீன்கள் மட்டுமே கிடைத்தது.

    இந்நிலையில் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க இன்று காலையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் பெரிய மீன்கள் எதுவும் இல்லாததால் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் விலையை பொருத்தவரை சங்கரா மீன் ஒரு கிலோ ரூ.400-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், கவளை மீன் ரூ.300-க்கும் விற்கப்பட்டது.

    • மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவோடு முடிவடைய உள்ளது.
    • மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    காசிமேடு :

    தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தை பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் முதல் இந்த மாதம் 14-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    இந்த தடையானது நாளை(புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவடைய உள்ளது. இதனால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் செல்ல தங்களது விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுவது, வலைகளை பின்னி சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்த்து சரிசெய்வது, தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீரை நிரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தைவிட பரபரப்பாக காணப்படுகிறது.

    • காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் நேற்று வரை (14-ந்தேதி) 61 நாட்கள் இருந்தது. தடை காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    கரை திரும்ப ஒரு வாரத்துக்கு மேல் ஆகும் என்பதால் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், தண்ணீர்கேன் என அனைத்தையும் தங்களது விசைப்படகுகளில் ஏற்றிக்கொண்டு அதிகாலை முதல் புறப்பட்டனர்.

    முன்னதாக காசிமேட்டில் கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் மலர் தூவியும் பால் ஊற்றியும், கற்பூரம் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டு வழிபட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கடுமையான டீசல் விலையேற்றம் காரணமாக காசிமேட்டில் இருந்து 300 விசைப்படகுகள் என 25 சதவீத படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளன.

    இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் விஜேஷ் கூறும்போது, மீனவர்கள் அனைவரும் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாகவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு காரணமாகவும் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு எங்களது வாழ்வாதாரம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தொழிலுக்கு செல்வதற்கு முன்னதாக கடல் அன்னைக்கு பூஜை செய்து வழிபட்டோம். காசிமேட்டில் மொத்தம் 1200 விசைப்படகுகள் உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாக சுமார் 300 விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள் சென்று உள்ளன என்றார்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து உள்ளதால் வரும் நாட்களில் மீன்விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன் விலை அதிகரித்துள்ளது.
    கீழக்கரை:

    தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் அனைத்தும் கரை ஏற்றம் செய்யப்பட்டு பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சிறிய படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை மற்றும் திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி. பட்டிணம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன் மார்க்கெட்டுக்கு சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களே விற்பனைக்கு வருகிறது.

    அந்த மீன்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட மீன்களாகவே உள்ளது. வேறு வழியின்றி மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நகரை, செங்கனி, பாறை மீன்கள் ஒரு கிலோ ரூ.500-க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.450 முதல் ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இதனால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்தும் வாங்கி செல்கின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்துள்ளது.
    புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

    அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

    ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது. #FishingBan #FishingBanPeriod
    சென்னை :

    மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வரும்.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மீன்பிடி தடைகாலம் என்பது 45 நாட்களுக்கு இருந்தது. ஆனால் சில ஆண்டுகளாக அதை 60 நாட்களாக உயர்த்தி மத்திய-மாநில அரசுகள் நிர்ணயித்தது. அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.

    தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களான காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும். மொத்தத்தில் 150 முதல் 240 குதிரை திறன் கொண்ட 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது என்றும், சென்னையில் மட்டும் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.



    மீன்பிடி தடைகாலம் நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மாறாக 20 குதிரை திறனுக்கும் குறைவான கண்ணாடி இழை படகுகளின் மூலம் குறைந்த தூரத்துக்கு சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்துவருவார்கள். மீன்பிடி தடைகாலத்தால் இனி வரக்கூடிய நாட்களில் மீன்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாத காலங்களில் மீன்பிடி தடைகாலத்தை வைத்தால் நன்றாக இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாஞ்சில் ரவி கூறியதாவது:-

    மீன்பிடி தடைகாலம் இந்த காலத்தில்தான் அமல்படுத்த வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேற்கு கடற்கரை பகுதிகளில் மழைக்காலத்தில் தான் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கிறது. அந்த காலத்தில்தான் மீன்கள் இனவிருத்தி செய்ய ஏதுவாக இருக்கிறது. அவர்கள் அதை சரியாக கடைப்பிடிக்கிறார்கள்.

    ஆனால் நமக்கு கோடைகாலத்தில் மீன்பிடி தடைகாலம் என்று நிர்ணயித்து இருப்பதை எந்த மீனவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மத்திய- மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கையாக வைத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே அரசுகள் மீனவர்களுடன் ஆலோசித்து அக்டோபர்-டிசம்பர் காலங்களில் தடைகாலத்தை கொண்டுவரலாம்.

    அதேபோல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியமான ரூ.5 ஆயிரம் என்பது போதாது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விசைப்படகு உரிமையாளர்களுக்கும் படகுகளை பராமரிப்பதற்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #FishingBan #FishingBanPeriod
    புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசின் வேளாண் அமைச்சக மீன்வளத்துறையின் செயலர் உத்தரவின்படி கடல்சார் மீன்வளங்களை நீண்டகாலத்துக்கு நிலை நிறுத்தி பாதுகாத்திடும் வகையில் கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியதுபோல் இந்த ஆண்டும் மீன்பிடி தடை அமல்படுத்தப்படுகிறது.

    வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் புதுவையில் கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திகுப்பம், புதுக்குப்பம் வரையிலும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும், ஏனா மில் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் அனைத்து விசைப்படகுகள் கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

    மாகி பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் விசைப்படகுகள் குறிப்பிட்ட காலத்தில் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    அரசின் அறிவிப்புப்படி குமரி மாவட்ட கிழக்கு கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வருகிற 15-ந்தேதி வரை இந்த தடைக்காலம் முடிவுக்கு வரும்.

    மேற்கு கடற்கரையில் இன்று முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இனி ஜூலை 30-ந்தேதி வரை மேற்கு கடற்கரை மீனவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

    இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மேற்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதால் குமரி மாவட்ட மக்களுக்கு மீன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

    அடுத்து மேற்கு கடற்கரையில் தடைக்காலம் தொடங்கும்போது, கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்குவார்கள். இதனால் மீன்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்காது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் குமரி மாவட்டம் முழுவதும் 15 நாட்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஒட்டு மொத்தமாக யாரும் மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் கட்டுமரங்கள், வள்ளங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள்.

    இதில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கும். இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×