search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royapuram"

    ராயபுரத்தில் கியாஸ் கம்பெனி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை நதியா உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

    அப்போது நகைகளை எடுக்க பீரோவை திறந்தார். ஆனால் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றொரு பீரோவில் இருந்து 15 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் பணம் அப்படியே இருந்தது.

    இதுகுறித்து நதியா ராயபுரம் போலீசில் புகார் செய்தார். பீரோவை உடைக்காமல் நகைகள் திருடப்பட்டு இருப்பதால் நன்கு தெரிந்த நபர்கள்தான் கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ராயபுரத்தில் பிளஸ்-2 மாணவர் ஓட்டிய கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் வெங்கடேசன் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி நிர்மலா (வயது 55). நேற்று முன்தினம் இவர் ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் நடந்து சென்றார்.

    அப்போது வேகமாக வந்த கார் திடீரென நிர்மலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்த போது காரை ஓட்டி வந்தது பள்ளி மாணவர்கள் என்பது தெரிந்தது.

    இது குறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நிர்மலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது மண்ணடியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் என்பது தெரியவந்தது. அவர் பிராட்வேயில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    விடுமுறையில் வீட்டில் இருந்த அவர் பள்ளியில் படிக்கும் நண்பர்களுடன் காரை வெளியில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவர் நிர்மலா மீது மோதி இருக்கிறார்.

    இது குறித்து காசிமேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம் மற்றும் திருவண்ணாமலை பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #vigilanceraid

    ராயபுரம்:

    ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, திருமண பதிவு மற்றும் கம்பெனி பதிவு ஆகியவற்றுக்காக தினமும் மக்கள் கூட்டம் அலை மோதும்.

    இதனால் இந்த அலவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. கந்தசாமி தலைமையில் 20 பேர் கொண்ட போலீசார் ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், ஊழியர்களை வெளியில் செல்லவிடாமல் அலுவலகத்தை பூட்டி சோதனை நடத்தினார்கள்.

    பீரோ, மேஜை என ஒவ்வொரு இடத்திலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    மாலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்தது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றவர்கள் இரவுவரை வீடு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு பொதுமக்களை மட்டும் அலுவலகத்தில் இருந்து போலீசார் வெளியே அனுப்பினார்கள்.

    இச்சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

     


    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

    பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் போலீசார் அலுவலகத்திற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பத்திரப்பதிவு இணை பதிவாளர் உள்பட அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் பத்திரம் பதிவுக்காக வந்தவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களை அப்படியே உள்ளேயே வைத்து கதவை பூட்டிக் கொண்டு விசாரணை நடத்தினர்.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நீலகண்டன் பணியாற்றி வருகிறார். இவர், டாஸ்மாக் பார்களில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். மாலையில் இருந்து இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது.

    அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

    மேலும் டிரைவர் சுரேஷ் மற்றும் மதுவிலக்கு போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி போலீசார் எடுத்து சென்றனர். #vigilanceraid

    ராயபுரத்தில் பெண் அளித்த புகாரை உரிய நேரத்தில் விசாரிக்காத, போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது 16 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் (26) என்பவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.

    இதுபற்றி ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பக்டர் ராஜா ராபர்ட், ஈவ்டீசிங் புகாருக்குள்ளான வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.

    இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பிரேம் குமாருக்கு, மகள் ஈவ்டீசிங் செய்யப்பட்டது பற்றிய தகவல் தெரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வினோத் குமார் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுமோதலாக மாறியது. வினோத் குமார் தன் மீது தவறு இருப்பதை மறந்து விட்டு பிரேம்குமாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரேம்குமார் பாரிமுனை பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் அங்கிருந்து திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று வினோத்குமாரை கண்டித்தனர். இதனால் மீண்டும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், ரகளையில் ஈடுபட தொடங்கினார்.

    இதுமிகப்பெரிய மோதலாக மாறியது. வினோத் குமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பிரேம்குமாரின் உறவினர் களை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது உறவுக்கார பெண் மேரிக்கு கத்திகுத்து விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மேரியின் தங்கை மெர்லின், பிரேம் குமார் ஆகியோர் வினோத் குமாரை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கத்திகுத்து விழுந்தது. உடனடியாக மேரி உள்ளிட்ட 3 பேரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஈவ்டீசிங் கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவம் நடந்திருக்காது என்றும் அநியாயமாக அப்பாவிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்றும் ஆத்திரப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் சரியாக செயல்படவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோரது மேற் பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் முடிவில் முதலில் புகார் அளித்தபோதே வினோத்குமார் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் என்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக வினோத்குமார், அவரது தம்பி தமிழ், உறவினர் சங்கர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் வினோத் குமாரின் மனைவி விஜய லட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் கவனக் குறைவான பணியால் பெண் ஒருவர் கொலையுண்ட சம்பவத்தால் ராயபுரத்தில் பதட்டம் நிலவுகிறது.

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
    ராயபுரம்:

    மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தொடங்கியது. இது நாளையுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்கிறார்கள். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் செல்வதால் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தடைகாலத்தில் ஏற்கனவே பழுதான படகுகள், வலைகளை சீரமைத்திருந்தனர். தற்போது கடலுக்கு செல்ல தேவையான ஐஸ்கட்டிகள், டீசல், உணவு பொருட்களை ஏற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் மீனவர்கள் உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    தடைகாலம் நிறைவடைந்து மீன் பிடிக்க செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    கடந்த 2 மாதமாக மீன் விலை உச்சத்தில் இருந்தது. வஞ்சிரம், வவ்வால் மீன்கள் கிலோ ரூ. 900 வரை விற்கப்பட்டது. தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருப்பதால் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகே கரை திரும்புவார்கள். ஆனால் சிறிய வகை படகுகளில் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீன் விலை விரைவில் குறையும் என்று மீன் பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். #Tamilnews
    ராயபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவையை இயக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களை சார்ந்த மக்கள் சென்னையில் வியாபாரம் செய்து தொழில் நடத்தி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மணலி போன்ற வடசென்னை பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தென் மாவட்டங்களுக்கான ரெயில் சேவையை தாம்பரத்திலிருந்து தொடங்குவது என்பது தவறானகொள்கை முடிவாகும். ராயபுரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில் சேவையை தொடங்குவது தான் சரியானதாக இருக்கும். அதுதான் தென்மாவட்ட மக்களுக்கும், வடசென்னை வியாபார பெருமக்களுக்கும் வசதியானது என்பதை கருத்தில் கொண்டு தென்னக ரெயில்வே தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
    ராயபுரத்தில் பட்டப்பகலில் போலீஸ் குடும்ப பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் கொள்ளைப் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் கவிதா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது நகைகளை அடகு வைக்க ஜி.ஏ.ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார்.

    பகல் 12.40 மணியளவில் நகைகளை அடகு வைத்து ரூ.1¼ லட்சத்துடன் வெளியே வந்தார். அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் டிக்கியை திறந்து அதற்குள் வைத்து பூட்டினார்.

    பின்னர் மேலும் பணம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு பணத்தை எடுத்து கொண்டு வெளியே வருவதற்குள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டனர்.

    திரும்பி வந்த கவிதா கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அடமான பணத்தை பறிகொடுத்ததை நினைத்து அவர் அழுது புரண்டார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். உடனடியாக ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பட்டப்பகலிலேயே இப்படி பின் தொடர்ந்து கொள்ளையடித்து பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பறிகொடுத்த கவிதாவின் உறவினர்கள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப்பாதையில் அடையாளம் தெரியாத வாலிபர் படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    அவர் நீலநிற ஜீன்ஸ், பச்சை நிற டிசர்ட் அணிந்து இருந்தார். அவரது பையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் இருந்தது. அவரது காலில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

    மின்சார ரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்த போது மர்ம கும்பலுடன் தகராறு ஏற்பட்டு இருக்கலாம் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது மர்ம கும்பல் அவரை வெட்டி சாய்த்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அங்கேயே அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையுண்ட வரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. #Tamilnews
    ×