search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai"

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
    • கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினர்.

    • 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.
    • நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான்.
    • சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது.

    உலகம் தோன்றிய காலத்தில் இருந்து திருவண்ணாமலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெவ்வேறு யுகங்களில் இந்த மலை வெவ்வேறு விதமாக தோன்றியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    முதன்முதலாக கிருதா யுகத்தில் திருவண்ணாமலை அக்னி சொரூபமாக அக்னி மலையாக நெருப்பு பிழம்பாக இருந்ததாம். அடுத்ததாக மாணிக்கம் மலையாக திரேதா யுகத்திலும், தாமிர மலையாக துவாபர யுகத்திலும் கூறப்படுகிறது. தற்போது கல் மலையாகவும் உள்ளது.

    முக்தி என்று சொன்னாலே ஈசனின் திருவடியை அடைவது தான். அதேபோல அண்ணாமலையாரே நினைத்தாலே முக்தி. சிவபெருமானே மலையாக வைத்திருக்கும் தளம் தான் திருவண்ணாமலை. சிவபெருமானுக்கு உரிய தளங்களில் அக்னி தளமாகவும் உள்ளது. அதே போல சித்தர்களின் சொர்க்க பூமி திருவண்ணாமலை. இதற்கடுத்து தான் அண்ணாமலை என்று பெயர் உருவானது.

    அண்ணுதல் என்றால் நெருங்குவது என்று அர்த்தமாகும். இதற்கு எதிர்மறையான அர்த்தம் கொண்டது, அண்ணாமலை அதாவது நெருங்க முடியாதது என்ற அர்த்தமாகும். அடி முடி காணா அண்ணாமலையார் என்ற புகழ்பெற்ற பிரம்மன் மற்றும் விஷ்ணுவின் கர்வம் அழித்த புண்ணித தலம் இதுதான்.

    மேலும் சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் சிவபெருமான் தான். இதனால் தான் 18 சித்தர்களும், அவர்களின் சீடர்களான188 சித்தர்களும் அரூபமாக திருவண்ணாமலையில் இருக்கிறார்க்ள். அதேபோல திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலைப்பகுதியில் பல்வேறு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன.

    • திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது.
    • நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.

    நகைச்சுவை நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர். இவரது படங்கள் இல்லாத வெள்ளிக்கிழமையே இல்லை எனக் கூறலாம். அத்தனை படங்களிலும் பிசியாக நடித்து வருபவர், யோகி பாபு. நகைச்சுவை மற்றுமின்றி கதை நாயகனாகவும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் யோகிபாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்பட தொடக்க விழா பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர்கள் யோகி பாபு, ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றம் இன்று நடந்தது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி மாடவீதி உலா நடைபெறும். 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர்.
    • வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேவிகாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு டவுன் அவலூர் பேட்டை சாலையில் உள்ள குளம் அருகே திறந்த வெளியில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.

    அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். விநாயகர் சிலையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விநாயகர் சிலையை ஏற்கனவே இருந்த இடத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வைத்துச் சென்றனர்.

    மேலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனையடுத்து விநாயகரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சியாக உயர்த்துவதற்கான வரையறைகளை மக்கள் தொகை மற்றும் வருமான அளவுகோல் தடையாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கான வரையறைகளை தளர்த்தி மக்கள்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தை பொருட்படுத்தாமல் நான்கு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின்படி முன்பு இருந்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கு பதிலாக இரண்டு லட்சமாகவும், அந்த பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்து மாநகராட்சியாக மாற்றம் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதோடு, இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்ட மசோதா நாளை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது.

    • போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது.
    • சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலைக்கு உலக நாடுகளில் இருந்தும் ஆன்மீக அன்பர்கள் கிரிவலம் வருகின்றனர். அவர்கள் கிரிவலப்பாதையில் தங்கி இருந்து தியானம், யோகா செய்து வருகின்றனர்.

    கூடவே அவர்களின் போதை கலாச்சாரமும் தற்போது கிரிவலப் பாதையில் நுழைந்து விட்டது. சாமியார்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் கிரிவலம் பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் போதை திருவிழா நடத்த வெளிநாட்டினர் திட்டமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அயாஹுவாஸ்கா. ஆன்மிக ரீதியான பரவச நிலைக்கான திருவிழாவாக உலகம் முழுவதும் நடத்தபடு கிறது. அமேசான் காடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் பழங்குடியின கலாசாரத்தோடு இணைந்தது இந்த அயாஹுவாஸ்கா திருவிழா.

    அயாஹுவாஸ்கா என்ற ஒருவகை மூலிகைச் செடியில் இருந்து உருவாக்கப்படும் கசாயம் போன்ற பானம், மன நோய்களை குணப்படுத்து வதற்கும், ஆன்மிக ரீதியான பரவச நிலைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது போதை நிலைக்கு பயன்படுத்தும் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

    மனதில் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் அயாஹுவாஸ்காவின் பயன்பாடு இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

    ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் கடந்த 15-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தனிப்படை அமைத்து சல்லடை போட்டுத் தேடினர்.

    அதில் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசினர். அதிகாரிகளோ விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், அவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிகாரிகளுக்கே தலைச் சுற்றலை உண்டாக்கியது.

    ரிஷிகேஷ், மணாலி என ஆன்மிகம், சுற்றுலாவில் சிறந்து விளங்கும் பகுதியில் அயாஹுவாஸ்கா திருவிழாவை நடத்தி விட்டு, அதன் வெற்றிக் கொண்டாட்டமாகத்தான் திருவண்ணாமலைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

    20 வயதில் இருந்து 35 வயது வரையிலான ஆண்களும், பெண்களுமே இவர்களின் இலக்கு. அயாஹுவாஸ்கா கசாயத்தை குடித்தும், உடலில் சிறிய துளையிட்டு அதில் தவளை விஷத்தை செலுத்தியும் போதையை ஏற்படுத்துகின்றனர்.

    போதை உச்சத்தை அடையும்போது, கட்டுப்பாடு அற்ற அத்துமீறல்களும், அடாவடிகளும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன. சுமார் 6 மணி நேரத்திற்கு இது போன்ற மாயத்தோற்றம் இருக்குமாம்.

    இதற்காக நபர் ஒருவருக்கு ஆயிரம் டாலர் வரை அதாவது இந்திய மதிப்பில் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ரஷ்யர்களிடமிருந்து அயாஹுவாஸ்கா மட்டுமல்ல மேஜிக் மஸ்ரூம், கம்போ எனப்படும் தவளை விஷம் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    239 கிராம் சைலோசிபின், டி.எம்.டி போன்ற மனநோய்களுக்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களையும் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    கிரிவலப்பாதையை அதிரவைத்த போதை திருவிழா தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த பகுதிகளில் நடத்த திட்டமிட்டு இருந்தனர், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை தேரடி வீதியிலுள்ள முருகர் தேர் பக்கத்தில் 'அமானுஷ்ய' உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.

    காரின் முன்பக்க பகுதியில் 7 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

    கயிலாய மலையில் சிவபெருமான் அமர்ந்திருப்பதைபோல பெரிய ஸ்டிக்கர் இருந்தன. சிவன் மடியில் அமர்ந்தவாறு, வாட்டசாட்டமான உடல்வாகுடைய அகோரி ஒருவர் கழுத்தில் மனித மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து படுபயங்கரமாகக் காட்சியளித்த புகைப்பட ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தன.

    காரைச் சுற்றிலும் சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடுகளுடன் ஆங்கிலத்தில் 'டேஞ்சர்' என்ற மண்டை ஓட்டு ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

    முன் பக்கமும், பின் பக்கமும் 'அகோரி நாக சாது' என ஆங்கிலத்தில் பெயர் பலகை தொங்கவிடப்பட்டிருந்தன. மிரட்சியை ஏற்படுத்திய அந்த காரை பொதுமக்கள் சூழ்ந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். தகலவறிந்ததும், திருவண்ணாமலை போலீஸார் விரைந்து வந்து காரை நோட்டமிட்டனர்.

    'அந்த நேரத்தில் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற அகோரி சாமியார் அங்கு வந்தார்.

    சாம்பலைத் தண்ணீரில் கரைத்து, முகம் தொடங்கி உடல் முழுவதும் பூசிக்கொண்டிருந்தார். பெயர் 'அகோரி நாக சாது' எனக் கூறிய அவர், 'நானே கடவுள்.

    நானே சிவன், நானே பிரம்மா, நானே விஷ்ணு..' என பேசினார். அவரை கண்டித்த போலீசார் காரை இடையூறாக நிறுத்தியதற்காக ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துவிட்டு அனுப்பி வைத்துவிட்டனர்.

    திகில் கிளப்பிய இந்த காரால், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக தேரடி வீதியே பரபரப்புக்குள்ளாகி போனது. போதைத் திருவிழா மற்றும் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் திருவண்ணாமலையில் சில தினங்களாக பதட்டமும் படபடப்பும் எகிறி இருக்கிறது.

    தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி போதை திருவிழாவை முறியடித்ததால் வெளிநாட்டு போதை கும்பல் வேறு வழியில் கிரிவலப் பாதையில் நுழைய கூடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் வைகாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.09 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. பவுர்ணமி இரவில் தொடங்கியதால் பகலில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றனர்.

    தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும், நேற்று வைகாசி விசாகம் என்பதாலும் பவுர்ணமி கிரிவலம் மேற்கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதில் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

    கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உள்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். வரிசையில் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது.

    பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்றாலும் மாலைக்கு பின்னர் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

    இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (வியாழக்கிழமை) இரவு 7.44 மணி அளவில் நிறைவடைகின்றது. அதனால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    • வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
    • விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி இயக்கப்படும் பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும்.

    திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

    வரும் 24ம் தேதி முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார்.
    • ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிரிவலம் தொடங்கினார். 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் நடந்து சென்றார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ரோஜா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார். வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலையை நோக்கி மனமுருக வழிபாடு செய்தார்.

    ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன். அண்ணாமலையார் ஆசியோடு மக்களுக்கு சேவைப் பணிகளை செய்து வருகிறேன்.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.

    அண்ணாமலையார் அருளால் மீண்டும் அமைச்சராகி மக்கள் பணியாற்றுவேன் என்றார்.

    கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது.
    • பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேங்கிகால்:

    திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நேரம் வருகிற 22-ந் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 23-ந் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம்.

    சமீபகாலமாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதோடு, தற்போது கோடை விடுமுறை என்பதால், வரும் பவுர்ணமியன்று கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கம் போல சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருக்கிறது.

    ×