search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கடற்கரை"

    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
    • 300 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.
    • திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் நேற்று திமிங்கலம் ஒன்று காணப்பட்டது. நீலாங்கரையை அடுத்த பனையூர் கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வட்டமிட்டது. அந்த திமிங்கலம் வெள்ளை நிற வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது.

    இதுகுறித்து ட்ரி அறக்கட்டளை தலைவர் சுப்ரஜா தாரினி கூறியதாவது:-

    பனையூர் கடற்கரையில் திமிங்கலம் வந்தது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம்.

    நீலாங்கரை கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு 20 திமிங்கல சுறாக்கள் காணப்பட்ட நிலையில் 2-வது முறையாக நேற்று மற்றொரு திமிங்கலம் கடற்கரைக்கு வந்துள்ளது.

    அது 15 முதல் 18 அடி நீளம் கொண்டது. கரைக்கு மிக அருகில் வந்த அந்த திமிங்கலத்தை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். உடனே பலர் திமிங்கலத்தை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

    திமிங்கலத்தின் முகம், வால், முதுகுத்துடுப்பு ஆகியவை தெரிந்தன. வெள்ளை வயிற்றுடன் சாம்பல் நிறத்தில் இருந்தது. இதன் தோலில் வெளிரி மஞ்சள் புள்ளிகள் மற்றும் கோடுகள் இருந்தன. இந்த திமிங்கலம் கடந்த 9, 10-ந் தேதிகளில் பார்த்த திமிங்கலங்களில் இருந்து வேறுப்பட்டது.

    இந்த ஆண்டு டால்பின்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன் கரை ஒதுங்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை நன்கு புரிந்து கொள்ள ஒரு அறிவியல் ஆய்வை நாம்மேற்கொள்ள வேண்டும். திமிங்கல சுறாவை பற்றி மேலும் அறிய பதிவு செய்யப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன.
    • ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன.

    மாமல்லபுரம்:

    ஆமைகளின் இனப்பெருக்க காலமாக டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ளது. மே மாதம் வரை முட்டையில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலுக்குள் செல்வது வழக்கம்.

    சென்னை கடற்கரை பகுதியான மெரினா ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பெசன்ட் நகர், பழவேற்காடு பகுதிகளில் அதிக அளவு ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் கரையோரம் வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம்.

    பறவைகள் மற்றும் மனிதர்களால் பெருமளவு ஆமை முட்டைகள் சேதமடைந்து வந்தன. இதையடுத்து ஆமைகள் முட்டைகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் ஆமைகள் அதிக அளவில் முட்டையிட்டு செல்லும் கடற்கரை பகுதிகளை கண்காணித்து ஆமை முட்டைகளை பத்திரமாக சேகரித்து வருகிறார்கள்.

    கடந்த மூன்று மாதங்களில் சென்னை கடற்கரை பகுதிகளில் 430 இடத்தில் இருந்து 42 ஆயிரத்து 650 ஆமை முட்டைகளை சேகரித்து உள்ளனர். அதில் பெசன்ட்நகர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பு பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    ஆமை குஞ்சுகள் பொறித்ததும் அவை கடலில் விடப்படும் அதுவரை சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகளில் 83 சதவீதம் நல்ல நிலையில் இருந்தன. சுமார் 46,755 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளது என்று ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 490 இடங்களில் இருந்து 55 ஆயிரத்து 713 ஆைம முட்டைகள் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது,

    "கடந்த 2019-2020, 2020-2021 ஆம் ஆண்டுகள் ஆமை முட்டைகளை சேகரிப்பதில் மோசமான ஆண்டாக இருந்தது. 2021-ம் ஆண்டு 41 ஆயிரத்து 326 ஆமை முட்டை கள் சேகரிக்கப்பட்டது.

    தற்போது சென்னை கடற்கரை பகுதியில் இறந்து ஒதுங்கப்படும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. பழவேற்காட்டில் கடந்த மாதம் அதிகமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆமைகள் நடமாட்டம் கடற்கரை பகுதியில் இந்த மாதம் இறுதிவரை இருக்கும். முட்டைகளில் இருந்து ஆமை குஞ்சு பொறிக்க 45 முதல் 50 நாட்கள் வரை ஆகும்" என்றார்.

    • மெரினா முதல் கோவளம் வரை ரூ.100 கோடியில் 20 கடற்கரைகள் ஒன்றிணைத்து மேம்படுத்தப்படுகிறது
    • கடற்கரை பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடம், விளையாட்டு பகுதி, படகுத்துறை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படும்.

    சென்னை:

    டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது.

    நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும்.

    தற்போது இந்தியாவில் 10 நீலக்கொடி கடற்கரைகள் உள்ளன. கோவளம் கடற்கரை இந்த நீலக்கொடி தகுதியை ஏற்கனவே பெற்றுள்ளது.

    இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், நீலக்கொடி என்ற சர்வதேச சுற்றுச்சூழல் தகுதியை பெறுவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதற்காக கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி சென்னை கடற்கரை பகுதிகளும் மறு சீரமைப்பு செய்து மேம்படுத்தப்படுகிறது. சென்னை கடற்கரை மறுசீரமைப்பு புத்தாக்க திட்டம் தொடர்பாக சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகள் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் இடங்களாக உள்ளன. சென்னை துறை முகத்தையொட்டிய பகுதியில் அதிக அளவில் மணல் தேங்குவதால் மெரினா கடற்கரையில் மணல் பரப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    அதே நேரத்தில் திருவான்மியூர் கடற்கரையில் கடல் பரப்பு அதிகரித்து காணப்படுகிறது.

    கூவம், அடையாறு ஆறுகள் மூலம் கழிவுநீர் கடலில் கலப்பதால் பெரும்பாலான நேரங்களில் கடல்நீர் நுரையுடன் காணப்படுகிறது. சென்னையில் கடற்கரை ஓரமாக 26 மீனவ குடியிருப்புகள் உள்ளன.

    சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பை பயன்படுத்தி சென்னை கடற்கரைகள் இடையே உள்ள இடைவெளியை சரிசெய்து எண்ணூர் முதல் கோவளம் வரை தொடர் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக சென்னை மெரினா முதல் கோவளம் வரை 31 கி.மீ. தூரமுள்ள 20 கடற்கரைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

    இந்த கடற்கரைகளை ஒன்றிணைக்கும் வகையில் சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.100 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

    இந்த கடற்கரைகள் அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுச்சூழல், வரலாறு, மக்கள் பயன்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் உள்ளதால் பாரம்பரியம் சார்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரையில் உடல் நலம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்தும், நீலாங்கரை, ஆலிவ் கடற்கரையில் சுற்றுச் சூழல் மையம் சார்ந்தும், உத்தண்டி கடற்கரை பகுதியில் கலை மற்றும் கலாசாரம் சார்ந்தும், முட்டுக்காடு, கோவளம் கடற்கரை பகுதியில் நீர் விளையாட்டு சார்ந்தும் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    கடற்கரை பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடம், விளையாட்டு பகுதி, படகுத்துறை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்படும். மேலும் பாரம்பரிய தாவரங்கள் ஆய்வு திட்டமும் செயல் படுத்தப்படும்.

    அதன் அடிப்படையில் மெரினா முதல் கோவளம் வரையான கடற்கரை பகுதி 'நீலக்கொடி' தகுதியை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன.
    • மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான டெண்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிகாரிகள் விரைவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வெளிமாவட்டங்களில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே உள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு புதிய போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    இதற்கான சாத்திய கூறுகளை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. நாடு முழுவதும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    இதன்படி நகர்ப்புறங்களில் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2022-2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன்படியே திட்டங்கள் தொடங்குவதற்கான முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப்கார் திட்டத்திற்கு வடிவமைப்பு கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியும் இதனை உறுதி செய்திருக்கிறது. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் இந்த திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரையிலும் என இரண்டு வழி தடத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தேசிய ரோப்வே வளர்ச்சி திட்டம் பருவதமாலா பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன கூட்டு முயற்சியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மலைப் பிரதேசம் சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்புற பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படியே மெரினா கடற்கரை பகுதி இந்த திட்டத்தின் கீழ் வந்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் டெண்டரை வெளியிட்டு உள்ளது.

    சுற்றுலா வசதிகள் மேம்படுத்தும் வகையிலும் அடுத்து 30 ஆண்டுகளில் அதிகரிக்க உள்ள மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து பெசன்ட் நகருக்கு 15 நிமிடத்தில் சென்று விட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக இதனை ஆய்வு செய்து ரோப் கார் வசதி உள்ள இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டு திட்ட பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரோப் கார் வசதி சென்னைக்கு வந்துவிட்டால் மெரினா கடற்கரை பொது மக்களை மேலும் சுண்டியிழுக்கும் சுற்றுலா தலமாக மாறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

    இந்த பணிகள் ஒரு புறம் நடைபெற உள்ள நிலையில் மெரினா கடற்கரையை மேலும் அழகுபடுத்தி அதன் முகத்தை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இதன்படி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான இந்த ஆலோசனைக்கு பிறகே புதிய திட்டம் வகுக்கப்பட்டு வடிவமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

    மெரினாவில் 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் கோர்ட்டு வழக்குகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதற்கும் தீர்வு கண்டு அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடைபாதைகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    மெரினாவை போன்று எலியட்ஸ் கடற்கரையையும் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. மெரினாவில் மேற்கொள்ளப்படக் கூடிய புதிய திட்டங்கள் தற்போது அங்கு கடைகளை அமைத்துள்ள வியாபாரிகளின் நலனை பாதித்து விடக்கூடாது என்பதும் அப்பகுதியில் கடைகளை அமைத்துள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதிய வரவாக வெளிநாட்டு கடற்பறவைக் தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த வாரம் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    தற்போது இந்த புயல் காற்றிற்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு தற்போது வெளிநாட்டில் இருந்து பல்வேறு வகை கடற்பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.

    கேளம்பாக்கம் ஏரிப்பகுதியில் லெசர் நோடி எனப்படும் சாம்பல் தலை ஆலா, சைபீரியாவில் இருந்து ஆர்க்டிக் ஸ்குவா, ஆஸ்திரேலியாவில் இருந்து டெர்ன்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் சூட்டி டெர்ன் போன்ற பறவைகள் வந்து உள்ளன.

    இதே போல் பழவேற்காடு ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளிலும் புதியவரவாக வெளிநாட்டு கடற்பறவை தென்படுவதாக பறவைகள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக பறவைகள் கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் காற்றுக்கு பின்னர் சென்னை கடற்கரை பகுதிக்கு வெளிநாட்டு கடல் பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. ஆழ்கடலில் வாழும் பெலாஜிக் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே நிலத்திற்கு வரும். அது குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு முறை சென்னை புயலை சந்திக்கும் போதும் இந்த வகை பறவை இங்கு வருகிறது.

    கேளம்பாக்கம், பள்ளிக்கரணை, பழவேற்காடு பகுதிகளிலும் சில பறவைகள் வந்துள்ளன. சூறாவளியை உணர்ந்து சில பறவைகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது, அந்த காற்று சில பறவைகளை நமது நீர்நிலைகளுக்கு கொண்டு வருகின்றன.

    உள்ளூர் பறவைகள் அவற்றை விரட்டுவதால் அவை ஒரு வாரத்திற்கு மேல் உயிர்வாழ்வது கடினம் ஆகும். இந்த வகை பறவைகள் புயலுக்குப் பிறகு நிலத்தை நோக்கி வருகின்றன.

    இந்த முறை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் கேளம்பாக்கம் ஏரியில் ஆர்க்டிக் ஸ்குவா பறவைகளை பார்க்க முடிகிறது. இது மற்ற பறவைகள் மீன் பிடிக்கும் வரை காத்திருக்கும். பின்னர் அவற்றிடம் இருந்து அதனை பறித்து சென்று விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழவேற்காடு ஏரி மற்றும் கடற்கரை அருகில் செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். தற்போது குளத்துமேடு, கணவான் துறை ஏரி தீவு பகுதியில் வெளிநாட்டு பறவைகள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி குறைந்த அளவில் வந்துள்ளன.

    பூ நாரை, கரியலிஸ் கோல்டன் ப்ளவர் மற்றும் உள்நாட்டு பறவைகளான பெலிக்கன் அரிவாள் மூக்கன், கொக்கு நாரை, கேர்தலின் வாத்து, சோ பிரிக்ஸ் உள்ளிட்ட பறவைகள் வந்துள்ளன. இனிவரும் நாட்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • அடையாறு ஆற்றில் மக்களால் கொட்டப்பட்ட கழிவுகள் ஆற்றில் தேங்கி கிடந்துள்ளது.
    • குப்பைகளை அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் இயற்கை அழகை ரசிக்க சென்றவர்களும், நடைபயிற்சி சென்றவர்களும் கடற்கரை முழுவதும் குப்பை கழிவுகள் பெருமளவில் குவிந்து அலங்கோலமாக கிடந்ததை பார்த்து கவலையடைந்தனர்.

    வழக்கமாக இந்த மாதிரி பருவமழை காலங்களில் கடல் அலைகள் நிறைய கழிவுகளை வெளியேற்றுவது வழக்கம் தான். அது ஆற்று தண்ணீரில் இழுத்து வரப்பட்ட இலை தழைகள் மற்றும் குப்பை கழிவுகளாக இருக்கும்.

    ஆனால் இந்த முறை குவிந்து கிடந்த குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப், மது குடிக்கும் பிளாஸ்டிக் கப், தெர்மாகோல்கள், சாப்பாடு பார்சல் கட்டும் பிளாஸ்டிக் கண்டெய்னர்கள், அதிக அளவில் கிடந்தது. கடலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

    குப்பை பொறுக்குபவர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கிடைத்ததாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கடலோர மாசு கட்டுப்பாடு நிபுணர்கள் கூறியதாவது:-

    மழைக்காலத்தில் தண்ணீரில் கடலுக்குள் சென்றடையும் குப்பை கழிவுகள் கரை ஒதுங்குவது வழக்கமானதுதான். ஆனால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி உள்ளன.

    இதற்கு காரணம் பல மாதங்களாக அடையாறு ஆற்றில் மக்களால் கொட்டப்பட்ட கழிவுகள் ஆற்றில் தேங்கி கிடந்துள்ளது. இப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் முகத்துவாரத்தின் வழியாக ஆற்றுத் தண்ணீர் கடலில் கலக்கிறது.

    ஆற்று தண்ணீரில் அடித்து வரப்படும் கழிவுகள் தான் இப்படி கரை ஒதுங்குகிறது என்றனர்.

    இந்த குப்பை கழிவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மிகப்பெரிய அளவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.

    இரவு நேரத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் அந்த நேரத்தில் குப்பைகளை அகற்றுவது கடினமானது. எனவே அதிகாலை முதல் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

    குப்பைகளை அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான காலி மது பாட்டில்களும் குவிந்து கிடந்தன.

    குப்பை பொறுக்குபவர்கள் கோணிகளுடன் மது பாட்டில்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    ×