search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலை"

    • விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை.

    சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது.

    இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சிலை உடைந்து விழுந்ததற்கு போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஒருவழியாக பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கியபோது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

    இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    • விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.
    • இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாக வேல்முருகன் கூறினார்.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவையொட்டி ஆண்டுதோறும் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை கிருபா நகரில் 3 அடி முதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகளை வட மாநில தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

    அவ்வாறு தயார் செய்யப்படும் சிலைகள் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மூலம் வாங்கி பிரதிஷ்டை செய்து அவற்றை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

    இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் ரசாயன கலவை மிகுந்ததாக இருப்பதால் அவற்றை ஆற்றில் கரைக்கும்போது நீர் மாசுபடுகிறது என்று கூறி சமீப காலமாகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கக்கூடாது மற்றும் அதனை பிரதிஷ்டை செய்யக்கூடாது. அதனை ஆற்றில் கரைக்க அனுமதி இல்லை என்று இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் களிமண்ணால் ஆன விதை விநாயகர் சிலைகளை தயார் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியிலும், மரங்களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த 63 வயதான மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.

    இவர் ஒவ்வொரு பண்டிகை காலங்களுக்கும் ஏற்றார் போல் களிமண்ணில் பல்வேறு வேலைப்பாடுகளை செய்து வருகிறார். சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது களிமண்ணில் நாவல் மரம் மற்றும் நெல்லிக்காய் மரத்தின் விதைகளை வைத்து களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்.

    இதன் மூலம் சுற்றுப்புற சூழலில் எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சிலைகளில் நாவல் மற்றும் நெல்லிக்காய் விதைகளை உள்ளே வைத்து தயாரிப்பதால் இந்த வகை சிலைகளை கரைக்கும்போது அந்த விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இந்த சிலைகள் ரூ.100-ல் இருந்து ரூ.1,000 வரை விலை போவதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சிலைகளுக்கு வரவேற்பு இருப்பதாகவும் வேல்முருகன் கூறினார்.

    பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இவரது களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.

    • சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.
    • விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு பின்னா ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது.

    சென்னையில் சுமார் 1500 பெரிய சிலைகள் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட உள்ளது. இதுதவிர சிறிய சிலைகளை பலரும் வீட்டில் வைத்து வழிபடுவார்கள். இந்த சிலைகளையும் பெண்கள் பெரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

    இதுபோன்று பல்லாயிரக்கணக்கான சிலைகள் பெரிய சிலைகளின் அருகில் வைக்கப்பட்டிருக்கும். பெரிய சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வாகனங்களில் இந்த சிறிய சிலைகளையும் சேர்த்தே எடுத்துச் செல்வார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படும் நாளில் இருந்து 7 நாட்கள் கழித்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த வகையில் வருகிற 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் அனைத்தும் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.

    சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதன்படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 இடங்களிலும் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடல் பகுதியிலும் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களை போலீசார் ஏற்கனவே அடையாளம் கண்டு வைத்துள்ளனர். அந்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட உள்ள சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் வைக்கப்படும். சிலைகளை நீலாங்கரை பல்கலை நகரில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், ஆர்.கே. நகர், தங்க சாலை, ராயபுரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், திருவொற்றியூர் சுற்று வட்டாரப் பகுதிகளின் சிலைகள் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதியிலும், செங்குன்றம் துணை கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட எண்ணூர் மற்றும் சுற்றியுள்ள சிலைகள் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலும் கரைக்கப்பட உள்ளன.

    விநாயகர் சிலைகளை வைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தேவையில்லாத வகையில் மத உணர்வை தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் பேசக் கூடாது.

    24 மணி நேரமும் சிலை பராமரிப்பாளர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுபாடுகளையும் போலீசார் விதித்துள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
    • இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

    * சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    * ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்தவேண்டும்.

    * சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    * சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

    * விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது.
    • விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகின்றன. பொன்னேரி பகுதியில் கிருஷ்ணாபுரம் வெள்ளோடை ஆண்டார்குப்பம், ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.

    பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 15 அடி வரை பல வண்ணங்களில் பலமுக விநாயகர், சிங்க முக விநாயகர், யானை முக விநாயகர், எருது விநாயகர், எலி அன்னம் விநாயகர், விளக்கு விநாயகர் , யானை புலி விநாயகர் என விதவிதமாக தயாராகி வருகின்றன.

    இவை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இப்போதே ஏராளமானோர் தங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகளுக்கு முன்பணம் செலுத்தி உள்ளனர்.

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ரசாயனம் கலக்காமலும், நீரில் எளிதில் கரையக்கூடிய வகையிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது தயாரான சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பொன்னேரியை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும்போது, விநாயர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது சிலைக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மீஞ்சூர், பொன்னேரி, பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் கேட்டு முன்பதிவு செய்து உள்ளனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு சிலைகளை தயாரித்து வருகிறோம் என்றார்.

    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.
    • 300 ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த சிலைகளை பாலவாக்கம், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதியில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது கொண்டுவரப்பட்ட மாலை, பூஜை பொருட்கள், மரக்கட்டைகள், வாழை இலைகள், கயிறு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கடற்கரைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்கு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.

    பல்லடம், செப்.24-

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-

    விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் அடைக்காக்குழி பாத்திமாநகர் பகுதியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் ஊர்வல நிகழ்ச்சி புல்லூர் பகவதி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துக்கு இந்து மகா சபா நிர்வாகிகளும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு ஊர்வலம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஊர்வலத்தில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் விஜயகுமார், குளப்புறம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில், மெதுகும்மல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், நடைக்காவு பஞ்சாயத்து தலைவர் கிறிஸ்டல்ஜாண், நடைக்காவு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெக்கின்ஸ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், முன்னாள் வட்டார தலைவர் கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 இடங்களில் கரைக்கப்படுகிறது
    • போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் விநா யகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டது. பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலைகள் நேற்று முன்தினம் கரைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது. இன்று 3-வது நாளாக விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.

    இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. நாகர் கோவில் நகர பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது. நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சங்குத்துறை பீச்சில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் முன்பு எடுத்து வரப்பட்டது. இங்கிருந்து இன்று மாலை ஊர்வலம் புறப்படுகிறது. ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பள்ளி கொண்டான் அணையில் கரைக்கப்படுகிறது.

    குருந்தன்கோடு ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் ராதாகிருஷ்ணன் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும், தக்கலை வைகுண்டபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்லப்பட்டு மண்டைக்காடு கடலிலும் கரைக்கப்படுகிறது. முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலைகள் ஐந்து கண்ணு கலுங்கு பகுதியிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காய் பட்டினம் கடலிலும், கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட விநாயகர் சிலைகள் கூனாலுமூட்டில் இருந்து ஊர்வலமாக செல்லப் பட்டு மிடாலம் கடலிலும், குழித்துறை நகரத்தில் உள்ள விநாயகர் சிலைகள் பம்பத்திலி ருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழித்துறை ஆற்றிலும், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திற்பரப்பு அரு வியில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படு வதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை எடுத்து செல்ல வேண்டும். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலை கொண்டு செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் அந்த நேரத்தில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன.
    • இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் 1519 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலக பகுதியில் 204 சிலைகளும், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் 425 சிலைகளும் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2148 சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

    இந்துமுன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரதிய சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைத்திருந்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.

    இதன்படி சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடபெற்றது. பாரதிய சிவசேனா அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பூஜைக்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர். இதையொட்டி சென்னை மாநகர போலீசார் 16,500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆவடி கமிஷனர் அலுவலக போலீசார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தாம்பரத்தில் இருந்து 1,500 போலீசாரும் பாதுகாப்புக்காக ஊர்வலம் செல்லும் பாதைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

    இந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 17 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இதன் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புளியந்தோப்பு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

    அடையாறு, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நீலாங்கரையிலும், வட சென்னை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பகுதியிலும் கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளில் கரைக்கப்பட்டது போக மீதமுள்ள சிலைகள் நாளை கடலில் கரைக்கப்பட உள்ளது.

    இன்று சுமார் 30 சதவீத சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளையும் பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஊர்வல பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×