என் மலர்
இந்தியா

மும்பையில் சதுர்த்தி விழா: விநாயகர் சிலை ரூ.474 கோடிக்கு காப்பீடு
- விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.
மும்பை:
மும்பையில் வருகிற 27-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்ட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொது இடங்களில் பந்தல் அமைத்து வழிபடும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் சிற்ப கூடங்களில் இருந்து கொண்டு வரும் பணி தொடங்கி உள்ளது. இந்தநிலையில் பிரசித்தி பெற்ற கிங்சர்க்கிள் ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகருக்கு ரூ.474 கோடியே 46 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க, வெள்ளி நகைகள் மட்டும் ரூ.67.03 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பந்தலில் வைக்கப்படும் பொருட்கள் ரூ.2 கோடிக்கும், அங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு ரூ.30 கோடிக்கும், பந்தல் பணியாளர்களுக்கு ரூ.375 கோடிக்கும், ரூ.43 லட்சத்துக்கு தீ விபத்து காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. பந்தல் விநாயகர் மும்பையில் உள்ள பணக்கார விநாயகர் சிலைகளில் ஒன்றாகும். இந்த சிலை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். ஜி.எஸ்.பி. பந்தலில் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.






