search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscation"

    • வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பழையபாளையம் கணபதி நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், அவ்வழியாக வந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது, வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 250 ரொக்கம் எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று வரை ரூ.37 லட்சத்து 14 ஆயிரத்து 797-ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.43 லட்சத்து 84 ஆயிரத்து 490-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.4 லட்சத்து 97 ஆயிரத்து 170-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 480-ம், பவானி தொகுதியில் 7 லட்சத்து ஆயிரத்து 650-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 19 ஆயிரத்து 950-ம், கோபி தொகுதியில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.49 லட்சத்து 6 ஆயிரத்து 238-ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் தற்போது வரை மொத்தம் ரூ.1 கோடியே 84 லட்சத்து 16 ஆயிரத்து 740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் ரூ.77 லட்சத்து 95 ஆயிரத்து 915 சம்மந்தப்பட்டவர்களின் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 825 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    • சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

    திருப்பூர் பூண்டி ரிங்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர் பொல்லி காளி பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3,25,200 ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.93,200ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தேர்தல் துணை மாநில வரி அலுவலர் பக்கிரி சாமி (பறக்கும் படை குழு) உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வீரபாண்டி, பிரியங்கா நகர் பகுதியை சேர்ந்த கே. சாமிநாதன் என்பவர் ரொக்கப்பணம் ரூ.57 ஆயிரத்து 980ஐ முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்கவேல் ராஜனிடம் ஒப்படைத்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று ஒரே நாளில் ரூ.8 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பறக்கும் படையினரின் சோதனையில், சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் வியாபாரிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

    என்னதான் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்த போதும் சில நேரங்களில் ரொக்க பரிவர்த்தனை மேற்கொண்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறாக ரொக்க பரிவர்த்தனை வழக்கமாக நடைபெறும் ஒன்று.ஆவணங்களை வைத்து கொண்டு இது போன்ற பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நடப்பதில்லை. தேர்தல் நேரத்தில் நடக்கும் பண பட்டுவாடாவை தடுக்க இதுவரை தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

    மாறாக சொற்ப அளவிலான பணத்தைக் கொண்டு செல்லும் சிறிய வியாபாரிகளே இது போன்ற சோதனையில் சிக்குகின்றனர். பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெறுவதற்காக ஏற்படும் தேவையற்ற அலைச்சல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    • பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலையான படை குழுவினர் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கடந்த 2 நாட்களாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பறக்கும் படையினர் பறி முதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து தென்காசியை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் இருந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி அருமனை தெருவை சேர்ந்த செய்யது அலி (வயது 32) என்பது தெரியவந்தது.

    மேலும் செய்யது அலி தென்காசியில் நகைக்கடை நடத்தி வருகிறார். மதுரைக்கு நகை வாங்குவதற்காக பஸ்சில் பணத்துடன் சென்ற நிலையில், அங்கு நகை வாங்கவில்லை என்பதால் கொண்டு சென்ற பணத்தை அப்படியே திரும்பவும் கொண்டு வந்ததாக கூறினார்.

    ஆனாலும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

    இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்து உள்ளது. காங்கிரஸ் பி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு கரீம் நகர் உதவி போலீஸ் கமிஷனர் நரேந்தர் தலைமையிலான போலீசார் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அங்குள்ள அறை ஒன்றில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டுகள் எண்ணும் எந்திரம் மூலம் பணத்தை எண்ணினர்.

    அப்போது ரூ.6.65 கோடி இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் நரேந்தர் கூறுகையில்:-

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த பணத்தை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பதுக்கி வைத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடைய நல்லூர் பகுதியில் மக்தூம் ஞானியார் தர்கா உள்ளது.

    இந்த தர்காவில் நூறாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட பெண் யானை ஒன்று இந்த தர்காவினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை வளர்க்க சில ஆண்டுகளாக வனத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் தர்காவினர் வளர்த்து வந்ததால், வனத்துறை தெரிவித்த தகவலின்பேரில், சென்னையில் இருந்து யானை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கமிட்டியினர் ஒரு குழுவாக கடையநல்லூர் வந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யானையை பார்வையிட்டனர்.

    இந்நிலையில் யானையை வளர்க்க தோட்டம், நீச்சல் குளம், தூங்குவதற்கு தேவையான வசதிகள் உள்ளிட்டவை தர்காவில் இல்லை என்று கூறி உடனடியாக இந்த யானையை பறிமுதல் செய்து திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல அந்த குழு உத்தரவு பிறப்பித்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று இரவு கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் யானையை மீட்டு திருச்சியில் உள்ள முகாமிற்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    தற்போது 58 வயது கொண்ட இந்த பெண் யானையின் எடை 4.5 டன் ஆகும். இந்த தர்காவிற்கு இது 5-வது யானையாகும். நூற்றாண்டு பழமையான இந்த தர்காவில் இருந்து யானையை வனத்துறையினர் கைப்பற்றி சென்றது அங்குள்ளவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அதேநேரத்தில் யானை பாகன் நத்கர் பாதுஷா, யானையின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடி யானைக்கு பிரியா விடை கொடுத்தார்.

    ×